என் மலர்


ரிங் ரிங்
நண்பர்கள் நான்கு பேர் விளையாடும் செல்போன் விளையாட்டு.
கதைக்களம்
பிரவீன் ராஜா, டேனியல், விவேக் பிரசன்னா, அர்ஜுனன் ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். பிரவீன் ராஜா தன் பிறந்தநாளுக்காக ஒரு பார்ட்டி வைக்கிறார். இதில் நண்பர்கள் அனைவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் மனைவிகளுடன் அந்த பார்ட்டியில் சந்திக்கிறார்கள்.
கேலி, கிண்டல் என்று ஜாலியாக இருக்கும் அவர்கள் திடீரென்று தங்களது செல்போன்களை வைத்து ஒரு விளையாட்டு விளையாட முடிவு செய்கிறார்கள். அதன்படி, அனைவரும் தங்களது செல்போன்களை மேஜை மீது வைக்க வேண்டும். யார் செல்போனில் அழைப்புகள் வந்தாலும் அதை ஸ்பீக்கரில் போட்டு அனைவரும் கேட்பது போல் பேச வேண்டும். அதேபோல், மெசேஜ் மற்றும் வாட்ஸ்-அப் மெசேஜ் என எது வந்தாலும் அதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இந்த விளையாட்டை விளையாடும் நிலையில், எதிர்பார்க்காத ரகசியங்கள் மற்றவர்களுக்கு தெரிய வருகிறது.
இறுதியில் இந்த விளையாட்டால் நண்பர்களின் வாழ்க்கை என்ன ஆனது? இந்த விளையாட்டு எப்படி முடிவுக்கு வந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
பிரவீன் ராஜா - சாக்ஷி அகர்வால், விவேக் பிரசன்னா - ஸ்வயம் சித்தா, டேனியல் அன்னி போப் - ஜமுனா, அர்ஜுனன் - சஹானா ஜோடிகள் தான் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். நான்கு ஜோடிகளும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் ஒரு உணவு மேஜையில், முழுக்க முழுக்க வசனக் காட்சிகளாக இருந்தாலும், நடிகர்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பால், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கடக்கிறது. செல்போன்கள் மூலம் அனைவரது ரகசியங்களும் கசியும் போது, அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முழிப்பது, சமாளிப்பது என நேர்த்தியான எக்ஸ்பிரஷன்கள் மூலம் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
செல்போனை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சக்திவேல். ஒரு விளையாட்டை வைத்துக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட இடத்தில் முழு படத்தையும் நேர்த்தியாக இயக்கியிருக்கிறார். ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருக்க வேண்டும் என்ற மெசேஜை சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். ஒரு இடத்தில் காட்சிகள் நகர்வது சிறப்பாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒளிப்பதிவு
பிரசாந்த் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
இசை
இசையமைப்பாளர் வசந்த் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கதைக்கு ஏற்ப பின்னணி இசையை நகர்த்தி இருக்கிறார்.
தயாரிப்பு
Diya Cine Creations & Rule Breakers Production நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.








