என் மலர்


ரெட் ஃப்ளவர்
இந்தியாவை கைக்குள் கொண்ட வர நினைக்கும் பேரரசை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார்
கதைக்களம்
நாயகன் விக்னேஷ் இந்தியாவின் சீக்ரெட் ஏஜென்ட்டாக இருக்கிறார். மூன்றாம் உலகப்போருக்கு பிறகு 2047 ஆம் ஆண்டு உலகத்தில் உள்ள பல நாடுகளை மால்கம் டெய்னாஸ்டி தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது. இந்திய நாட்டையும் தன் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்கிறது. பெரும் தொகையை வரியாக செலுத்த வேண்டும் என்று கட்டளையிடுகிறது. இதற்கு இந்திய பிரதமராக இருக்கும் ஒய் ஜி மகேந்திரன் மறுப்பு தெரிவிக்கிறார்.
இதனால் மால்கம் டெய்னாஸ்டியை சேர்ந்த போர் குற்றவாளி தலைவாசல் விஜய், இந்தியா மீது போர் தொடுக்க முடிவு செய்கிறார். மேலும் உலகில் பல இடங்களில் வசித்து வரும் இந்தியர்களை கொல்லவும் ஆணையிடுகிறார். இதையறிந்த இந்திய பிரதமர் ரெட் பிளவர் என்ற ஆபரேசன் மூலம் இந்தியாவையும் இந்திய மக்களையும் காப்பாற்ற முடிவு செய்கிறார்.
இறுதியில் ரெட் பிளவர் ஆபரேசன் மூலம் இந்திய மக்கள் காப்பாற்றப்பட்டார்களா? மால்கம் டெய்னாஸ்டி இந்தியா மீது போர் தொடுத்ததா? சீக்ரெட் ஏஜென்ட் விக்னேஷ் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விக்னேஷ், படம் முழுக்க கண்ணாடி அணிந்து கொண்டு, பொம்மை போல் பேசிக்கொண்டு இருக்கிறார். அதிக இடங்களில் எந்தவித முகபாவனைகள் இல்லாமல் நடித்து இருப்பது வருத்தம். கதாநாயகியாக நடித்து இருக்கும் மனிஷா, கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பால் கவனிக்க வைத்து இருக்கிறார்.
ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து இருக்கிறார் தலைவாசல் விஜய். மற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் ஒய் ஜி மகேந்திரன், நாசர், அஜய் ரத்னம், ஜான் விஜய் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
இந்தியாவை கைக்குள் கொண்ட வர நினைக்கும் பேரரசை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆன்ட்ரூ பாண்டியன். ஆங்கில படத்திற்கு இணையாக படத்தை உருவாக்க நினைத்து இருக்கிறார். இவருடைய முயற்சிக்கு பாராட்டுகள். ஆனால் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. லாஜிக் சுத்தமாக இல்லை. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஏன், எதற்கு என்று தெரியாமலே திரைக்கதை நகர்கிறது. தெளிவான திரைக்கதை இல்லாமல், வீடியோ கேம் போல் காட்சிகள் அமைத்து இருக்கிறார்.
இசை
சந்தோஷ் ராம் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஆங்காங்கே ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
தேவா சூர்யாவின் ஒளிப்பதிவு அதிக வெளிச்சத்தை கொடுத்து இருக்கிறது.
தயாரிப்பு
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.










