என் மலர்


ரசாகர் - சைலண்ட் ஜினொசைட் ஆஃப் ஹைதராபாத்
ஐதராபாத்தை ஆண்டு வந்த நிஜாம் அரசு எப்படி இந்தியாவுடன் இணைந்தது என்பதை விவரிக்கும் கதை.
கதைக்களம்
இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு ஐதராபாத் மாநிலம் இந்தியாவுடன் இணையாமல் தனி சாம்ராஜ்யமாக செயல் பட்டு வந்தது. ஐதராபாத்தை தன் வசத்தில் வைத்திருக்கும் நிஜாம் அரசு, முஸ்லீம்கள் நாடாக மாற்ற முடிவு செய்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சாமானிய மக்கள் மற்றும் வேறு மதத்தை சேர்ந்தவர்களை அடித்து கொடுமை செய்து கொலை செய்கிறார்கள்.
இந்த விஷயம் துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருக்கும் சர்தார் வல்லாபாய் பட்டேல் தகவலுக்கு செல்கிறது. ஐதராபாத்தில் நடக்கும் வன்முறையை கட்டுப்படுத்தவும், ஐதராபாத் இந்தியாவுடன் இணைக்கவும் முயற்சி செய்கிறார்.
இறுதியில் ஐதராபாத், இந்தியாவுடன் எப்படி இணைந்தது? நிஜாம் அரசின் ஆதிக்கம் எப்படி அடங்கியது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நிறைய நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். தமிழ் நடிகர்களான பாபி சிம்ஹா மற்றும் வேதிகா சில நிமிடங்கள் மட்டுமே வந்து சென்றிருக்கிறார்கள். தேஜ் சப்ரு, மகரந்த் தேஷ்பாண்டே, ராஜ் அருண், அன்னுஸ்ரியா திரிபாதி ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது இந்தியா 584 சமஸ்தானங்களாகப் பிரிந்திருந்தது. பெரும்பாலான மன்னர்கள் தங்களது ராஜ்ஜியத்தை சுதந்திர இந்தியாவுடன் இணைக்க மறுத்துவிட்டனர். சுதந்திர இந்தியாவின் துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லாபாய் பட்டேல், அவரின் செயலாளர் வி. பி மேனன் ஆகியோர் இணைந்து மன்னர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் ராஜ்ஜியத்தை கைவிட வைத்தனர்.
மற்ற சமஸ்தானங்கள் தங்களது ராஜ்ஜியங்களை இந்தியாவுடன் இணைக்க சம்மதித்துவிட்ட நிலையில், இறுதியாக காஷ்மீர் மற்றும் ஹைதராபாத் மட்டும் தனி சமஸ்தானங்களாக இருந்தன. ஒரு பக்கம் காஷ்மீர் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே இருக்க, மறுபக்கம் ஐதராபாத் நிஜாம் தனது ராஜ்ஜியம் கைவிட்டுப் போகாமல் இருக்க கடும் அடக்குமுறைகளை கையாண்டார். பெரும்பான்மையான இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் மதக்கலவரங்கள் வெடித்தன. நிஜாம் அரசு மக்களை கொடூரமாக கொன்றழித்தது. இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் யாதா சத்யநாராயணா.
திரைக்கதை தெளிவில்லாமல் நகர்த்தி இருக்கிறார். காட்சிகள் கோர்வையாக இல்லாமல் அங்கும் இங்குமாக வைத்து சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஒரே காட்சியை வேறு வேறு கதாபாத்திரங்களை வைத்து இயக்கி இருக்கிறார். ஒவ்வொரு ஊர்களில் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை படத்தின் இறுதிவரை காட்சிப்படுத்தி இருப்பது படத்திற்கு பலவீனம்.
இசை
பீம்ஸ் சிசிரோலியோ இசையில் சம்பந்தம் இல்லாமல் உணர்ச்சிப் பொங்க வரும் பாடல்கள் அனைத்தும் பெரியதாக எடுபடவில்லை. பின்னணி இசையும் கைக்கொடுக்கவில்லை.
ஒளிப்பதிவு
குசேந்தர் ரமேஷ் ரெட்டியின் கேமரா 1948 காலத்திற்கு ஏற்ப படம் பிடித்து இருக்கிறது.









