என் மலர்


ராமம் ராகவம்
தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள பாசப்போராட்ட கதை
கதைக்களம்
பத்திரப்பதிவு துறையில் நேர்மையான அதிகாரியாக பணி புரிந்து வருபவர் சமுத்திரகனி. அவரது மனைவி பிரமோதினி. இருவருக்கும் பிறந்த ஒரே மகன் தன்ராஜ் கொரனானி.
ஊழல் செய்யும் நபர்களை ஓட ஓட விரட்டும் நேர்மையான அதிகாரி சமுத்திரகனி ஆசை ஆசையாக வளர்த்த தனது ஒரே மகன் தன்ராஜ் ஊதாரிதனமாக திரிவதை நினைத்து மனமுடைந்து நிற்கிறார்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தீவிரமாகி ஒரு கட்டத்தில் தந்தை சமுத்திரகனியையே கொல்ல திட்டமிடுகிறான் மகன் தன்ராஜ். அவரது கொலை முயற்சி பலித்ததா? தொடர்ந்து நடந்தது என்ன? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
அப்பா கதாபாத்திரம் என்பது சமீப காலமாக ஓடி சென்று சமுத்திரகனி மீது ஏறி கொள்கிறது போல், அந்த அளவுக்கு இந்த படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். மகன் பிறந்ததும் அவரது ஆனந்தமும் வளர்ந்து ஊதாரியானதும் அவரது ஆர்ப்பரிப்பும் சமூகத்தில் வாழும் பல அப்பாக்களை கண்முன் நிறுத்தி விடுகிறார்.தந்தை வெறுக்கும் மகனாக சூதாட்டம், மதுவுக்கு அடிமையாவது என அவரது நடிப்பு கதைக்கு பெரிய பலம். அம்மா கதாபாத்திரத்தில் பிரமோதினி கணவனுக்கும் மகனுக்கும் இடையே சிக்கி கொண்டு தவிக்கும் காட்சிகளில் நேர்த்தியான நடிப்பை கொடுத்துள்ளார்.
பைனான்சியராக வரும் சுனில் சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார். லாரி டிரைவராக வரும் ஹரீஸ் உத்தமன் மாறுபட்ட தோற்றத்தில் கவனத்தை ஈர்க்கிறார்.
இயக்கம்
தன்ராஜ் கொனரானி இயக்கும் முதல் படம் என்றாலும் தந்தை மகன் உறவை அவர் எடுத்து சொல்லிய விதம் சமூகத்திற்கு விழிப்புணர்வாக அமைந்து நிற்கிறது. ஒரு பழைய பாசப்போராட்ட கதையாக் இருந்தாலும் அதை சுவாரசியமாக இயக்க முயற்சித்த தன்ராஜுக்கு பாராட்டுகள். காட்சியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்திருக்கவேண்டும்.
இசை
அருண் சிலுவேரா இசை ஓரளவுக்கு கேட்கும் ரகமாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு
துர்கா கொல்லி பிரசாத் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
தயாரிப்பு
SLATE PENCIL Stories நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.










