என் மலர்


ராஜபுத்திரன்
பணத்தையும் பாசத்தையும் கிராமத்து வாழ்வியலோடு எதார்த்தமாக சொல்லும் கதையாகும்
கதைக்களம்
மனைவியை இழந்த பிரபு, மகன் வெற்றி மற்றும் மகளுடன் ராமநாதபுரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். மகன் வெற்றியை வேலைக்கு கூட அனுப்பாமல் செல்லமாக வளர்த்து வருகிறார்.
அதே ஊரில் வெளிநாடுகளில் பணிபுரிவோர் சொந்த ஊரில் உள்ள குடும்பங்களுக்கு அனுப்பப்படும் பணத்தை அந்தந்த வீடுகளுக்கு கொண்டு செல்லும் வேலையை கோமல் குமார் செய்து வருகிறார். அப்படி அனுப்பப்படும் பணத்தை அவருடனே இருந்து கொண்டு பணத்தை கொண்டு செல்பவரிடம் பணத்தை வழிப்பறி செய்து மோசடியில் ஈடுபடுகிறார் லிவிங்ஸ்டன்.
அந்த கும்பலிடம் பிரபு மகன் வெற்றி பணத்தை வீடு வீடாக கொண்டு கொடுக்கும் பணியில் சேர்கிறார். ஒரு வீட்டிற்கு பணத்தை கொண்டு செல்லும் போது வழியில் அவரிடம் இருந்து வழிப்பறி செய்து விடுகின்றனர். இதனால் கோமல் குமார், வெற்றியை சிறை பிடிக்கிறார்.
இறுதியில் வெற்றி எப்படி மீட்கப்பட்டார்? பணம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
ஒரே மகனுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணிப்பதிலும் மகன் வெற்றி ஆபத்தில் சிக்கி இருப்பதை கண்டு கொந்தளிக்கும் காட்சிகளிலும் பிரபுவின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. இவரது நடிப்பு படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. பெரும்பாலும் படத்தின் கதையை அவரே தாங்கி நிற்கிறார்.
கிராமத்து இளைஞனாக எதிரிகளை எதிர்த்து போராடுவது, காதலியுடன் ரொமான்ஸ் செய்வது கவனிக்க வைத்து இருக்கிறார் வெற்றி. கதாநாயகி கிருஷ்ண பிரியா படத்தின் ஆரம்பக் காட்சியில் கத்தியுடன் ஓடும் காட்சி மிரட்டலாக அமைந்துள்ளது.
பிரபுக்கு நண்பராக வரும் இமான் அண்ணாச்சியின் ஏதார்த்த காமெடி கலகலப்பை ஏற்படுத்துகிறது. வில்லனாக வரும் கோமல் குமார் நடிப்பு மிரள வைக்கிறது. லிவிங்ஸ்டன், தங்கதுரை, மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார் ஆகியோரது நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்
பணத்தையும் பாசத்தையும் கிராமத்து வாழ்வியலோடு எதார்த்தமாகவும் பொழுதுபோக்காகவும் இயக்கியிருக்கிறார் மகா கந்தன். லாஜிக் மீறல்கள், தேவை இல்லாத காட்சிகள் படத்திற்கு பலவீனம்.
இசை
நவ்பல் ராஜா இசை கேட்கும் ரகம். குறிப்பாக உம்மா பாடல் தாளம் போட வைக்கிறது.
ஒளிப்பதிவு
ஆலிவர் டெனி ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது.
தயாரிப்பு
Crescent Cine கிரேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.









