என் மலர்


ராகு கேது
நவக்கிரகங்களில் ராகு கேது எப்படி வந்தது என்பதை படமாக்கி இருக்கிறார்கள்.
கதைக்களம்
தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான தொடர் மோதலில் தேவர்கள் பக்கம் நிறைய இழப்புகள் ஏற்பட, சாகாவரம் கிடைக்க வேண்டி நாரதரின் யோசனைப்படி பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவை சந்திக்கிறார்கள்.
அப்போது அவர், பாற்கடலில், மந்திரகிரி மலையை மத்தாகவும், பாம்பைக் கயிறாகவும் வைத்து கடைந்தால் அதில் இருந்து அமுதம் உருவாகும் என்றும், அதை அருந்துபவர்களுக்கு மரணமில்லா பெருவாழ்வு கிடைக்கும் என்றும் கூறுகிறார். அதை ஏற்று ஒரு பக்கம் தேவர்களும் மறு பக்கம் அசுரர்களும் நின்று பாற்கடலைக் கடைய அமுதம் கிடைக்கிறது. அதில் தங்கள் பங்கைக் அசுரர்கள் கேட்க, பகவான் நாராயணனின் மோகினி அவதார தந்திரத்தால் தேவர்கள் மட்டுமே அதை அருந்துகிறார்கள்.
ஆனால், அசுர இளவரசனான சுபர்பானு, நாராயணனின் தந்திரத்தை மிஞ்சும் விதமாக தேவர் வேடத்தில் சென்று அமுதத்தை அருந்துகிறார். இதை தேவர்கள் கண்டு கோபமடைகிறார்கள்.
இறுதியில் அமுதத்தை அருந்திய சுபர்பானு என்ன ஆனார்? எப்படி ராகு, கேது உருவாகிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் சிவனாக நடித்துள்ள சமுத்திரக்கனி, துர்கையாக நடித்துள்ள கஸ்தூரி, மகாவிஷ்ணுவாக நடித்துள்ள விக்னேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை நிறைவாக செய்து இருக்கிறார்கள். லட்சுமியாக நடித்துள்ள சனா சங்கர், முதலில் அசுர இளவரசராகவும், பின்னர் ராகுவாகவும் நடித்துள்ள இயக்குனர் பாலசுந்தரம், கேதுவாக நடித்துள்ள விப்ரசித்தி, நாரதர் ஆக நடித்துள்ள ரவிக்குமார் ஆகியோர் தங்கள் நடிப்பினால் கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இயக்கம்
நவ கிரகங்களில் சாயா கிரகங்கள் என்றழைக்கப்படும் ராகுவும், கேதுவும் எப்படி உருவாகின என்பதை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் டி. பாலசுந்தரம். ஜோதிட புராண பிரியர்களுக்கு எளிதாக புரியும்படி கொடுத்து இருக்கிறார். ஆனால், அனைத்து தரப்பினருக்கும் புரியுமா என்பது சந்தேகம். தற்போதைய தலைமுறை இளைஞர்களுக்கு காட்சி வாயிலாக இந்த ராகு கேது படத்தை கொடுத்துள்ளனர்.
இசை
சதா சுந்தரம் இசையில் பாடல்களுக்கு, பரணிதாசனின் பின்னணி இசையையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
மோகன் பிரசாந்தின் ஒளிப்பதிவு முடிந்த அளவு தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.
தயாரிப்பு
தமிழரசன் தியேட்டர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.









