என் மலர்tooltip icon
    < Back
    பூர்வீகம் திரைவிமர்சனம்  | Poorveegam Review in Tamil
    பூர்வீகம் திரைவிமர்சனம்  | Poorveegam Review in Tamil

    பூர்வீகம்

    இயக்குனர்: Krishnan G
    எடிட்டர்:கே.ஷங்கர்
    வெளியீட்டு தேதி:2025-01-24
    Points:67

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை548507
    Point3235
    கரு

    சொந்த மண் தான் சொர்க்கம் என்பதை சொல்லும் கதை.

    விமர்சனம்

    கதைக்களம்

    விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த போஸ் வெங்கட் தனது மகன் கதிரை விவசாயத்தில் ஈடுபடுத்தாமல் நன்றாக படிக்க வைத்து, அரசு அதிகாரியாக்க ஆசைப்படுகிறார். மேலும் கிராமத்து சொந்தங்களை உதறிவிட்டு நகர வாழ்க்கையில் தனது மகனை ஈடுபடுத்த விரும்புகிறார்.

    அவரது ஆசைப்படி, அவரது மகன் கதிர் நன்றாக படித்து அரசு அதிகாரியாவதோடு, வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு, சென்னையில் சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.

    ஒருநாள் தனது மகன் கதிரை சந்திக்க சென்னைக்கு வருகிறார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் மருமகள் மூலம் போஸ் வெங்கட் ஒதுக்கப்படுகிறார். மேலும் மகனிடம் உரிமையாக உறவாட முடியாத சூழலும் உருவாகிறது. நகர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன் மகனையே இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

    இறுதியில் போஸ் வெங்கட்டின் நிலை மாறியதா? மகன் கதிர் மனம் மாறினாரா? இல்லையா? என்பதை படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    தந்தை சொல்படி வாழும் கிராமத்து இளைஞர் மற்றும் பெற்றோரை கவனிக்க முடியாமல் தவிக்கும் நகரத்து குடும்பத் தலைவர் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நாயகன் கதிர், இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிப்பில் வேறுபாட்டை காண்பித்து இருக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் மியா ஸ்ரீ குடும்ப பாங்கான முகத்தோடும், எளிமையான அழகோடும் கிராமத்து பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். அவரது வெகுளித்தனமான நடிப்பு கவனிக்க வைத்து இருக்கிறது.

    நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், நகர வாழ்க்கை மோகத்தால் மகனை படிக்க வைத்தாலும், அவர் தன்னிடம் இருந்து விலகும் போது அதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் இடங்களில் கண்கலங்க வைத்துவிடுகிறார். போஸ் வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீ ரஞ்சனியும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

    சங்கிலி முருகன், இளவரசு, ஒய்.எஸ்.டி.சேகர், சூசன், சிவக்குமார் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம் 

    சொந்த மண் தான் சொர்க்கம் என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜி.கிருஷ்ணன். மக்களுக்கு தேவையான ஒரு விசயத்தை, பிரச்சாரமாக அல்லாமல் கமர்ஷியலாகவும், அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியும் கொடுத்திருக்கிறார்.

    படிப்பிற்காகவும், தொழிலுக்காகவும் பூர்வீகத்தை விட்டுவிட்டு நகரத்திற்கு வரும் இளைஞர்கள், தங்களது கலாச்சாரங்களையும், உறவுகளின் மேன்மைகளையும் மறந்து போகும் போது, வாழ்க்கையில் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுத்துகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து இருக்கிறார். லாஜிக் மீறல்கள் தவிர்த்து இருக்கலாம். கதிரின் இரண்டு தோற்றங்கள் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இசை 

    இசையமைப்பாளர் சாணக்யாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கிராமத்து மண் மணத்தோடு பயணித்து இருக்கிறது.

    ஒளிப்பதிவு 

    ஒளிப்பதிவாளர் விஜய் மோகன், கிராமத்து அழகையும், மக்களையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    தயாரிப்பு 

    பிரைன் டச் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×