என் மலர்


பேரன்பும் பெருங்கோபமும்
சாதி வெறி என்பது பிறப்பினால் வருவதில்லை வளர்ப்பினால் தான் வருகிறது என சொல்லும் திரைப்படம்.
கதைக்களம்
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆண் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார் நாயகன் விஜித் பச்சான். இவர் ஒரு புரட்சி ஆணாக இருக்கிறார்.மருத்துவமனையில் இருக்கும் பிரச்சனைகளை மிகவும் துணிச்சலோடு கேள்வி கேட்கிறார். மறுபக்கம் மைம் கோபி அந்த பகுதியில் எம்.எல்.ஏ ஆக இருந்து வருகிறார். இவருக்கும் நாயகனுக்கும் சில முரண் ஏற்படுகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தல் ஏற்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக தானே சென்று குற்றத்தை ஒப்புகொண்டு போலிசிடம் ஆஜராகிறார் நாயகன் விஜித்.மேலும் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகளை சொல்கிறார். நாயகனுக்கும் மைம் கோபிக்கும் என்ன தொடர்பு? போலீசிடம் அப்படி என்ன உண்மையை கூறினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் விஜித் பச்சான், கல்லூரி மாணவர், இளைஞர், வயதான தோற்றம் என்று மூன்று விதமான கெட்டப்புகளில் கச்சிதமாக பொருந்துவதோடு, பொருத்தமான நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ஷாலி நிவெகஸ், குடும்ப பாங்கான முகம், கண்களால் பல எக்ஸ்பிரஷன்களை வெளிப்படுத்தும் திறன் என்று கவனம் ஈர்க்கிறார்.
வில்லன்களாக நடித்திருக்கும் மைம் கோபி, அருள்தாஸ் இருவரும் பழக்கப்பட்ட கதாபாத்திரத்தில் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட் ,சாதி கெளரவத்திற்காக எடுக்கும் முடிவு நெஞ்சை பதற வைக்கிறது.
கீதா கைலாசம், தீபா, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சாய் வினோத், வலீனா, ஹரிதா, என்.பி.கே.எஸ்.லோகு என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்திருக்கிறார்கள்.
இயக்கம்
எழுதி இயக்கியிருக்கும் சிவபிரகாஷ், பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த சாதி வன்கொடுமை சம்பவங்களை திரைக்கதையில் பயணிக்க வைத்து மனதை பதற வைக்கிறார்.
சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வு மற்றும் சாதி வெறி என்பது ஒருவரது பிறப்பினால் வருவதில்லை, அவரது வளர்ப்பினால் மட்டுமே வருகிறது, என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் சிவபிரகாஷ், அதற்கான உதாரணத்தை கதையின் மையப்புள்ளியாக வைத்துக் கொண்டு, அதை திரை மொழியில் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.
இசை
இளையராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ஜே.பி.தினேஷ்குமாரின் கேமரா காட்சிகளை அழகாக மட்டும் இன்றி கதாபாத்திரங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
தயாரிப்பு
E5 Entertainment நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.












