என் மலர்


பராரி
சாதியால் ஒடுக்கப்படும் மக்களின் கதை
கதைக்களம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது சாதி ரீதியான அடக்குமுறைகளை மேற்கொள்கின்றனர். இச்சூழலில் ஆதிக்க சாதியில் இருக்கும் ஒரு பெண்ணை காதலிக்கிறார் கதாநாயகன் ஹரி சங்கர் இதனால் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது.
கூலி வேலைகளை மட்டுமே நம்பியிருக்கும் இரண்டு பிரிவினரும் சொந்த ஊரில் வேலை இல்லாத காலங்களில் வேலைக்காக கர்நாடகாவில் உள்ள பழ தொழிற்சாலைக்கு செல்கிறார்கள். அங்கு இரண்டு பிரிவினரும் தமிழர்கள் என்பதால் கன்னடத்தினர் அவர்களை ஒடுக்குகின்றனர். அப்பொழுது தமிழ்நாட்டில் ஆதிக்க சாதி என கூறிக்கொண்டு இருப்பவரும் ஒடுக்கப்படும்போது அவர்களுக்கு தாங்கள் செய்வது தவறு என புரிய வருகிறது.
பின் அங்கு அவர்கள் கன்னட மக்கள் ஒடுக்குமுறையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன?, கதாநாயகனின் காதல் ஒன்று சேர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் ஹரிசங்கர், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு என்பதை தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். தன் ஊரைச் சேர்ந்த பெண்ணிற்கு ஏற்படும் அநீதிக்கு எதிராக ஆக்ரோஷம் காட்டும் காட்சியிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் தன் நடிப்பு மூலம் ஸ்கோர் செய்துள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் சங்கீதா கல்யாண், எளிமையான முகம், வலிமையான நடிப்பு என்று படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறார். மற்ற கதாப்பாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்துள்ளனர்.
இயக்கம்
அறிமுக இயக்குனரான எழில் பெரியவேடி மக்களிடையே இருக்கும் சாதி ரீதியான பிரச்சனைகளும். அதனால் மக்கள் படும் வேதனைகளும். இதை வைத்து ஆதாயம் தேடிக் கொள்ளும் பிரமுகர்களின் முகத்திரையை கிழித்துள்ளார். படத்தின் காட்சியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். திரைப்படம் தொடங்கி முக்கிய பிரச்சனைக்கு வருவதற்கு நீண்ட நேரம் எடுப்பது பலவீனம்.
இசை
ஷான் ரோல்டனின் இசை கேட்கும் ரகம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் மிக எதார்த்தத்துடன் படம் பிடித்து காட்டியுள்ளார்.
தயாரிப்பு
கலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.







