என் மலர்


ஒன்ஸ் அபான் எ டைம் மெட்ராஸ்
நான்கு குடும்பங்களிடையே பயணிக்கும் துப்பாக்கியின் கதை.
கதைக்களம்
சென்னையில் நடந்த ஒரு துப்பாக்கி சூட்டில் இருந்து குற்றவாளி தப்பிக்க, அந்த துப்பாக்கியை தூக்கி வீசுகிறார். அந்த துப்பாக்கி, உயிருக்கு போராடும் காதல் மனைவியை காப்பாற்ற போராடும் ஆட்டோ ஓட்டுநர் பரத், தன் மகளை டாக்டருக்கு படிக்க வைக்க நினைக்கும் துப்புரவு தொழிலாளி அபிராமி, திருமணம் ஆகி சந்தோஷம் இல்லாமல் இருக்கும் அஞ்சலி நாயர், வேறு சமூகத்தை சேர்ந்த மகனை காதலிக்கும் மகளை கண்டிக்கும் தலைவாசல் விஜய் ஆகியோரிடம் இந்த துப்பாக்கி மாறி மாறி செல்கிறது.
இந்த துப்பாக்கியால் இவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பரத், உயிருக்கு போராடும் மனைவியை காப்பாற்ற போராடும் காட்சிகளிலும், பணத்திற்காக அலையும் காட்சிகளிலும் நெகிழ வைத்து இருக்கிறார். குறிப்பாக பணம் கிடைத்தும், பலன் இல்லாமல் போகும் போது கண்கலங்க வைக்கிறார்.
துப்புரவு தொழிலாளி கதாபாத்திரத்தில் வரும் அபிராமி, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். மகள் மீது பாசம் காட்டுவது, கடனை திருப்பி கொடுக்க முடியாமல் திணறுவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். இவருக்கு மகளாக நடித்திருப்பவர் மற்றும் ராஜாஜி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
சாதி வெறிபிடித்த அரசியல்வாதியாக நடித்து ஸ்கோர் செய்து இருக்கிறார் தலைவாசல் விஜய். இவர் காரில் பேசும் வசனமும், முக பாவனைகளும் சிறப்பு. இவருக்கு மகளாக நடித்திருக்கும் பவித்ரா லட்சுமி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
துணிச்சலான பெண்ணாக நடித்து கவர்ந்து இருக்கிறார் அஞ்சலி நாயர். தாயாக மாறும் நேரத்தில், தன் குழந்தைக்கு தந்தை யார் என்று தெரிந்தவுடன் அவர் முடிவெடுக்கும் காட்சியில் சபாஷ் போட வைத்திருக்கிறார். போராளியாக வரும் கனிகா சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.
இயக்கம்
உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை ஆரம்ப புள்ளியாக வைத்து, நான்கு கதைகளை உருவாக்கி துப்பாக்கியை பயணிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர் பிரசாத் முருகன். நான் லீனர் பாணியில் திரைக்கதையை சொல்லி இருப்பது சிறப்பு. ஆரம்பத்தில் கதை எதை நோக்கி செல்கிறது என்று குழம்ப வைத்தாலும், இரண்டாம் பாதியில் அதை சரி செய்து இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். திரைக்கதையில் ஆங்காங்கே சில தடுமாற்றங்கள் இருந்தாலும் பெரியதாக தெரியவில்லை.
படத்தொகுப்பு
படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ்க்கு பெரிய பாராட்டுகள்.
வசனம்
ஜெகன் கவிராஜின் வசனங்கள் படத்திற்கு பிறகு பலம்.
ஒளிப்பதிவு
காளிதாஸ் மற்றும் கண்ணாவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
இசை
ஜோஸ் பிராங்க்ளின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
தயாரிப்பு
ஃபரைடே பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.











