என் மலர்


நாளை நமதே
சமூகத்தில் பின் தங்கிய மக்களின் உரிமையை பேசும் திரைப்படமாக உருவாகியுள்ளது.
கதைக்களம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை பட்டியல் சாதியினருக்கானதாக அறிவிக்கின்றனர். அந்த தொகுதியில் காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் மட்டுமே பதவியில் இருந்து வருகின்றனர். அப்படி இருக்கும் போது புதிதாக பட்டியலினத்தவர்களோடு போட்டியிட வேண்டுமா என்ற நினைப்பில் யார் அவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகிறார்களோ அவர்களை கொலை செய்கின்றனர். மேலும் ஊரில் பெரிய கலவரத்தை தூண்டி விடுகிறார்கள். இதனால் அந்த தொகுதி மீண்டும் பொது தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதனால், தலைவராக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே 15 ஆண்டுகளாக இருக்கிறார்.
15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த தொகுதி பட்டியல் சாதியினர் தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. இப்பொழுது தேர்தலில் போட்டியிட பட்டியல் சாதியினர் தரப்பு விரும்பாத நிலையில், அந்த சாதியை சேர்ந்த நாயகி மதுமிதா தேர்தலில் போட்டியிட முடிவு செய்கிறார்.
அவருக்கு வழக்கும் போல் பலவிதமான மிரட்டல்கள் வர, அனைத்தையும் கடந்து, தேர்தலில் நிச்சயம் போட்டியிட்டே தீருவேன், என்பதில் உறுதியாக இருக்கும் மதுமிதா, எத்தகைய சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொள்கிறார். தேர்தல் நடந்ததா? தேர்தலில் வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதையின் நாயகியாக நடித்திருக்கும் மதுமிதா, மண் சார்ந்த முகமாகவும்,நடிப்பிலும் படத்தை தன் தோளில் சுமந்திருக்கிறார். எத்தனை பிரச்சனை வந்தாலும், அவற்றை எதிர்கொள்ளும் அவரது பயணமும், எதிர்ப்புகளை கடந்து போகும் போரட்ட குணமும் மற்றவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் அமைந்துள்ளது.
வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா மற்றும் கிராமத்து மக்களாக நடித்த நடிகர், நடிகைகள் என அனைவரும் மண்ணின் மைந்தர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
இயக்கம்
எழுதி இயக்கியிருக்கும் வெண்பா கதிரேசன், இட ஒதுக்கீடு மூலம், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு அரசியலில் பங்கேற்கவும், தங்கள் உரிமைகளை நிலைநாட்டவும் வாய்ப்பு கிடைத்தாலும், அந்த வாய்ப்பை இந்த ஆளுமையில் உள்ள மக்கள் சாதியை வைத்து தட்டிப் பறித்து, தங்களது அதிகார திமிரை அவர்கள் மீது திணிக்க முயற்சிப்பவர்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
அரசியல் ரீதியிலான காட்சிகள் மற்றும் வசனங்கள் அனைத்தும் கூர்மையாகவும், கைதட்டல் பெறும் விதமாகவும் இருக்கிறது. திரைக்கதையில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்திருக்க வேண்டும்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் பிரவீன் கதைக்களத்தையும், கதை மாந்தர்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசை
இசையமைப்பாளர் வி.ஜி.ஹரிகிருஷ்ணனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கேட்கும் ரகம்.
தயாரிப்பு
ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.









