என் மலர்


முத்து
முத்து திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1995-ம் ஆண்டு பிரபல கமர்சியல் திரைப்பட இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், ரஜினியை கதாநாயகனாக கொண்டு உருவாக்கிய திரைப்படம் ‘முத்து’. இத்திரைப்படத்தில் மீனா, சரத்பாபு, ராதாரவி, வடிவேலு, செந்தில், பொன்னம்பலம், ஜெயபாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரகுவரன் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார்.

இப்படம் 1994-ஆம் ஆண்டு பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில் வெளியான‘தேன்மாவின் கொம்பத்’ என்கிற மலையாள திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காகும். இப்படம் வெளியான அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலை அள்ளி குவித்தது.

இப்படத்தில்தான் ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல்முதலாக கிடைத்தது. ரஹ்மான் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சிறப்பாக பயன்படுத்தி கொண்டதால் இதில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தன. பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையும் இசையமைப்பாளருக்கு பெயர் வாங்கி தந்தது.

ரஜினி ரசிகர்கள் விரும்பும் வகையில் அவர் திரையில் தோன்றும் முதல் காட்சியை கே.எஸ். ரவிக்குமார் உருவாக்கியதற்காக இன்றளவும் அக்காட்சியும், பின்னணி இசையும் பேசப்படுகிறது. அரசியலில் ரஜினி குதிப்பார் என ரசிகர்கள் விரும்பும் வகையில் மறைமுகமாக சில வசனங்களை இயக்குனர் புகுத்தியிருப்பார்.

இத்திரைப்படம் இந்தியாவை தாண்டி ஜப்பான் நாட்டில் "முத்து மஹாராஜா" என ரிலீஸ் செய்யப்பட்டு அங்கும் வெற்றிகரமாக ஓடியது. அன்றிலிருந்து ரஜினிக்கு ஜப்பானில் ஒரு தனி மார்க்கெட் உருவாகி இன்றளவும் அவரை காண அங்கிருந்து ரசிகர்கள் இந்தியா வருகின்றனர். அவ்வாறு வந்த ஒரு ரசிகைக்கு தனது மற்றொரு திரைப்படமான "பாபா"வில் முக்கிய கதாபாத்திரத்தை ரஜினி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு ’முத்து’ திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த மறுவெளியீட்டை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ரசிகர்களுடன் இணைந்து பார்த்தார். இப்படத்தை பார்க்க ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.










