என் மலர்


மிஸ்டர் ஜூ கீப்பர்
புலிக்குட்டியை பூனை என நினைத்து வளர்க்கும் கதையாக உருவாகியுள்ளது.
கதைக்களம்
விவரம் குறைவான நாயகன் புகழ், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில் மனைவி ஷிரின் காஞ்ச்வாலா மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் தன் மகனுடன் பைக்கில் புகழ் செல்லும் போது வழியில் ஒரு புலி குட்டியை பூனை என்று நினைத்து வீட்டிற்கு எடுத்து சென்று விடுகிறார்.
மனைவிக்கு தெரியாமல் வளர்க்கும் புகழ், நாளடைவில் அது புலிக்குட்டி என்று தெரிந்தவுடன் பயந்து மனைவியிடம் சொல்லி விடுகிறார். புகழும் மனைவி ஷிரின் காஞ்ச்வாலாவும் புலியை காட்டுக்குள் விட்டுவிடலாம் என்று காட்டுக்குள் செல்கிறார்கள். அங்கு பல பிரச்சனைகள் இருப்பதை அறிந்து தன்னுடன் வளர்க்க முடிவு செய்கிறார்கள். அதே சமயம் காணாமல் போனதாக புலி குட்டியை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.
இறுதியில் புலி குட்டியை புகழ் வீட்டில் வளர்க்க முடிந்ததா? வனத்துறையினர் புலி குட்டியை கண்டுபிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் புகழ், விவரம் இல்லாதவராக முதல் பாதியில் கவர்ந்து இருக்கிறார். இரண்டாம் பாதியில் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஷிரின் காஞ்ச்வாலா, அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். ஒரு சில இடங்களில் செயற்கை தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிங்கம் புலி, மாரி முத்து உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். வனத்துறை அதிகாரியாக வருபவர் உடல் கட்டு மட்டும் பொருத்தமாக அமைந்து இருக்கிறது.
இயக்கம்
புலியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ். நிஜ புலியை வைத்து காட்சிகளை படமாக்கியதற்கு பெரிய கைத்தட்டல். அதுபோல் காட்டுக்குள் நடக்கும் நில ஆக்கிரமிப்பு, மரங்கள் வெட்டுதல், கஞ்சா செடி வளர்ப்பது என தைரியமாக சொல்லி இருக்கிறார். படம் முடிந்த பிறகு, படமாக்கப்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டது சிறப்பு. திரைக்கதையில் கொஞ்சம் சுவாரசியம் சேர்த்து இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். லாஜிக் மீறல்களையும் தவிர்த்து இருக்கலாம்.
இசை
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை பெரியதாக கவரவில்லை.
ஒளிப்பதிவு
தன்வீர் மொய்தீன் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
தயாரிப்பு
J4 ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.










