என் மலர்


மிராய்
அசோகன் சாகாவரம் பெறக்கூடிய ரகசியத்தை 9 புத்தகங்களை பற்றிய கதையாகும்.
கதைக்களம்
கலிங்கத்து போருக்குப் பின் பேரரசன் அசோகன் சாகாவரம் பெறக்கூடிய ரகசியத்தை 9 புத்தகங்களில் மறைத்து வைக்கிறார். தீய சக்திகள் இந்த 9 புத்தகங்களை கைபற்றாமல் இருக்க 9 வீரர்களையும் நியமிக்கிறார். பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின், தற்போதைய நவீன காலக்கட்டத்தில், மந்திர சக்திகள் மூலம் உலகை ஆட்டிப்படைக்க நினைக்கும் மனோஜ் மஞ்சு இந்த 9 புத்தகங்களை அடைய முயற்சிக்கிறார். மறுபக்கம் கதாநாயகன் தேஜா ஒரு தவ வாழ்க்கையில் இருந்து இந்தகெட்ட சக்தியிடம் இருந்து அந்த 9 புத்தகங்களை காப்பாற்ற முயற்சிக்கிறார்.
மிராய் என்ற அதீத சக்தி படைத்த கோள் ஒன்றின் உதவியுடன் மனோஜின் முயற்சியை முறியடிக்க நாயகன் தேஜா சஜ்ஜா களத்தில் இறங்க, அதை அவர் எப்படி செய்கிறார் ? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகன் தேஜா சஜ்ஜா, ஃபேண்டஸி படங்களின் கதைக்கு கச்சிதமாக பொருந்தி, பார்வையாளர்களை படத்துடன் பயணிக்க வைத்துவிடுகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் மனோஜ் மஞ்சு, 9 புத்தகங்கள் மூலம் சாகாவரம் பெற்று உலகத்தை ஆளும் தனது எண்ணத்தையும், திறமை மிக்கவர்களே கடவுள் என்ற தனது கருத்தையும் அழுத்தமாக பதிவு செய்யும் வகையில் பார்வையாளர்களை மிரட்டியுள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் ரித்திகா நாயக், நாயகனின் இளம் வயது தாயாக நடித்திருக்கும் ஸ்ரேயா சரண், முனிவராக நடித்திருக்கும் ஜெயராம், ஜகபதி பாபு, கெட்டப் சீனு என அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
இயக்கம்
கதையாசிரியர்கள் கார்த்திக் கட்டம்னேனி மற்றும் மணிபாபு கர்ணம் கடவுள் ராமரையும், அவர் கையில் இருக்கும் வில்லையும் மையமாக கொண்டு ஒரு பிரமாண்டமான ஃபேண்டஸி ஜானரை மிக சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். ஆன்மீகம் பேசும் திரைப்படமாக இருந்தாலும் அதனை இக்காலத்து சமூகத்திற்கு ரசிக்கும் வகையில் கிராபிக்ஸ் காட்சிகளில் கயாண்டு இருப்பது சிறப்பு. இரண்டாம் பாதி திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். ஃப்ளாஷ் பேக் பகுதிகள் நம் பொறுமையை சோதிக்கிறது.
இசை
இசையமைப்பாளர் கெள்ரா ஹரியின் பாடல்களும், பின்னணி இசையும் பிரமாண்டத்திற்கு பிரமாண்டம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டம்னேனி கேமரா ஒரு கதாபாத்திரமாகவே திரையில் வலம் வந்து பிரமிக்க வைக்கிறது. திரைக்கதை ஓட்டத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.
தயாரிப்பு
People Media Factory நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.










