என் மலர்


மெட்ராஸ் மேட்னி
நடுத்தர குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் உணர்வுகள் கலந்த வாழ்வியலை சொல்லும் திரைப்படம்.
கதைக்களம்
எழுத்தாளரான சத்யராஜ் சாமான்ய மக்களின் உணர்வுகளை கதையாக எழுதுவதற்காக காளி வெங்கட் வாழ்க்கையை தேர்வு செய்கிறார். இதையடுத்து அவரது பின்னணி என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய தொடங்குகிறார் சத்யராஜ்.
ஆட்டோ டிரைவரான காளி வெங்கட், மனைவி ஷெலி, மகள் ரோஷினி, மகன் விஷ்வாவுடன் வாழ்ந்து வருகிறார். சராசரி வருமானத்தோடு குடும்பத்தை நடத்தி வரும் காளி வெங்கட் தனது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக சில முயற்சிகளை எடுக்கிறார். இறுதியில் அவரது முயற்சி பலித்ததா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
நடிகர்கள்
சாதாரண ஆட்டோ டிரைவராக தனக்கு உலகமே மனைவியும், குழந்தைகளும்தான் என குடும்பத்துக்காக எந்த எல்லைக்கும் போக துடிக்கும் காளி வெங்கட் சமூகத்தில் வாழும் பல குடும்பத்தலைவர்களின் பிரதிபலிப்பாக படத்தில் வாழ்ந்துள்ளார். சமூகத்தில் யார் ஹீரோ என்றால் குடும்பத்தலைவன்தான் என்பதை கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தியுள்ளார் காளி வெங்கட்.
குழந்தைகளுக்கு தாயாக, இருப்பதை வைத்து மகிழ்ச்சியோடு குடும்பத்தை நடத்தும் பொறுப்பான குடும்பத்தலைவியாக நடித்துள்ள ஷெலியின் எளிமையான நடிப்பு கச்சிதமாக அமைந்துள்ளது. சிறிய வயதில் இருந்தே தந்தையின் கஷ்டத்தை உணர்ந்து தந்தைக்காகவும், குடும்பத்திற்காகவும் முன்னேற துடிக்கும் ரோஷினி நல்ல நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
மகனாக வரும் விஷ்வாவின் யதார்த்தமான நடிப்பு படத்துக்கு பக்க பலமாக அமைந்துள்ளது. தாயை கேவலமாக திட்டிய அதிகாரியை ஓங்கி அறைவது மற்றும் பல காட்சிகளில் அவரது நடிப்பு கலகலப்பையும் தருகிறது. இதுவரை உணர்வுபூர்வமான காட்சிகளில் நடித்து வந்த கீதா கைலாசம் இந்த படத்தில் அரசியல்வாதியாக மனதில் பதிந்து இருக்கிறார்.
இயக்கம்
நடுத்தர குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் உணர்வுகள் கலந்த வாழ்வியலை யதார்த்தத்தோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திகேயன் மணி. படத்திற்கு பெரிய மைனஸ் பின்னணியில் கதை சொல்லும் சத்யராஜ் குரல். படம் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் போது அடிக்கடி எதிரொலிக்கும் அவரது காட்சிகளை கொஞ்சம் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்பா, அம்மா மீது குழந்தைகள் பாசமாக இருந்தால் மட்டும் போதாது அதையும் தாண்டி அவர்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது என்பதை இயக்குனர் சொல்லியிருக்கிறார்.
இசை
கே.சி.பாலசாரங்கன் இசை நன்றாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு
ஆனந்த் ஜி.கே. ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
தயாரிப்பு
A Madras Motion Pictures Production நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.











