என் மலர்


லாரா
கொலைக்கு பின்னால் இருக்கும் மர்மத்தை தேடும் கதை
கதைக்களம்
கடற்கரை பகுதியில் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதாக காரைக்கால் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வருகிறது. முகம் தெரியாதபடி சிதைக்கப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் லாரன்ஸ் தனது மனைவி ஸ்டெல்லாவை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்கிறார். ஆனால் தன் மனைவியை அவனே கொலை செய்து விட்டு நாடகம் ஆடுகிறான் என்று ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு போலீசாருக்கு வருகிறது.
இதைத்தொடர்ந்து லாரன்ஸ் மீது போலீஸ் கண்காணிக்க தொடங்குகிறது. விசாரணையில் பல தகவல்கள் போலீசுக்கு கிடைக்கிறது. இறுதியில் இறந்த பெண் யார்? லாரன்ஸின் மனைவியை போலீஸ் கண்டுபிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகன் அசோக்குமார் சில காட்சிகளே வந்தாலும் கதைக்கு மைய புள்ளியாக இருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக கார்த்தி கேசன், அனுசுரேய்யா, ராஜன், வெண்மதி, வர்ஷினி ஆகியோர் வரும் காட்சிகள் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
இயக்கம்
ஹவாலா மோசடி, வறுமையில் பாலியலுக்கு தள்ளப்பட்ட பெண்களின் அவல நிலை, அவர்களை இரக்கமின்றி கொடுமைப்படுத்தும் செக்ஸ் அரக்கர்கள், காதல் கதை மற்றும் அரசியல் ஆதிக்கம் என விழிப்புணர்வுடன் பொழுதுபோக்கு படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் மணி மூர்த்தி.
எதிர்பாராத திருப்பத்தை இறுதி காட்சிகளில் வெளிபடுத்திருப்பது சிறப்பாக அமைந்துள்ளது. அடுத்தடுத்து என்ன என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. நீளமான வசன காட்சிகள் படத்திற்கு பலவீனமாக உள்ளது.
ஒளிப்பதிவு
ரகுரஸ்வன் ஒளிப்பதிவில் காட்சிகள் எல்லாம் சிறப்பு.
இசை
ஆர்.ஜே.ரவீன் இசை மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்து இருக்கிறது.
தயாரிப்பு
M.K.Film Media Works நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.









