என் மலர்


L2: எம்புரான்
லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது
கதைக்களம்
2019ல் வெளியான லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாகவே எம்புரான் நகர்கிறது. அரசியலில் சச்சின் கதேகர் இல்லாததால் அவரது மகனான டோவினோ தாமஸ் ஆட்சி செய்கிறார். ஐந்து வருடங்களை நிறைவு செய்த டோவினோ தாமஸ், தந்தையின் பாதையிலிருந்து ஒரு மாற்றத்தை செய்ய தயாராகிறார். அதாவது தன் தந்தை வழிநடத்திய கட்சியை விட்டு புது கட்சியை தொடங்குகிறார்.
டோவினோ தாமஸின் இந்த செயல் அவரது அக்கா மஞ்சு வாரியர், நாட்டு மக்கள் உள்ளிட்ட பலருக்கும் விருப்பம் இல்லாமல் இருக்கிறது. மேலும் மத்தியில் ஆட்சி செய்யும் அபிமன்யு சிங்குடன் கூட்டணி வைக்கவும் முடிவு செய்கிறார்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு கேரளாவை விட்டு சென்ற மோகன்லால் நிழலுலக தாதாவாக இருக்கிறார். இவர் மீண்டும் கேரளா வர வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக மோகன்லால் இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகிறது.
இறுதியில் மோகன்லால் உயிருடன் திரும்பினாரா? கேரளா அரசியலில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மோகன்லால், தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தியிருக்கிறார். முதல் பாதியில் கோட் சூட் அணிந்தும், இரண்டாம் பாதியில் வேஷ்டி சட்டை அணிந்தும் மிரட்டி இருக்கிறார். இவரது உடல் மொழியும் வசன உச்சரிப்பும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. இவருக்கு உதவியாளராக வரும் பிருத்விராஜ், கமாண்டோ கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இரண்டு பேருமே ஆக்சன் காட்சிகளில் மாஸ் காண்பித்து இருக்கிறார்கள்.
மஞ்சு வாரியர் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அரசியல் கட்சியில் இணையும் போது இவர் போடும் நான்கு விதிகள் சபாஷ் போட வைக்கிறது. ஸ்டைலிஷ் கட்சித் தலைவராக கவனம் பெற்று இருக்கிறார் டோவினோ தாமஸ். வில்லனாக வரும் அபிமன்யு சிங் பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார்.\
இயக்கம்
லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்ரான் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பிருத்விராஜ். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மாஸாகவும் மிரட்டலாகவும் கொடுத்திருக்கிறார். படத்தின் நீளம் பலவீனமாக அமைந்திருக்கிறது. முதல் பாதியில் வரும் கதையை தெளிவாக சொல்லி இருக்கலாம். படத்திற்கு பெரிய பலம் ஸ்டண்ட் சில்வாவின் ஆக்சன் காட்சிகள். காட்டில் நடக்கும் சண்டைக்காட்சியும், கிளைமாக்சில் நடக்கும் சண்டைக் காட்சியும் பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒளிப்பதிவு & இசை
சுஜித் வாசுதேவனின் ஒளிப்பதிவும், தீபக் தேவின் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
தயாரிப்பு
Sree Gokulam Movies , Aashirvad Cinemas நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.











