என் மலர்


குயிலி
மதுபானத்திற்கு எதிராக சொல்லப்படும் கதை
கதைக்களம்
கிராமத்தில் மிக எளிய குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார் குயிலி. இவர் தன் வீட்டுக்கு அருகே வசித்து வரும் நாயகனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். குயிலியின் கணவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் ஒழுக்கமாக வாழ்ந்து வருகிறார். ஆனால், அந்த ஊரில் இருப்பவர்கள் பலரும் குடிக்கு அடிமையாகி குடும்பத்தை இழந்து வாழ்ந்து வருகிறார்கள். குயிலியின் தந்தையும் குடிக்கு அடிமையாகி இறந்தவர்.
ஒரு கட்டத்தில் குயிலியின் கணவரும் மது போதைக்கு அடிமையாகிறார். இதனால் குடும்பத்தில் சண்டை, பிரச்சனை ஏற்படுகிறது. ஒருநாள் மதுபான கடையில் குயிலியின் கணவர் மது குடித்து கொண்டு இருக்கும் போது அடிதடி ஏற்படுகிறது. இதில் குயிலியின் கணவர் மதுபான உரிமையாளரால் கொல்லப்படுகிறார். இதனால் கோபப்படும் குயிலி, அந்த மதுபான கடையை எரித்து விடுகிறார். அதன் பின் மதுபானத்திற்கு எதிராக போராட தொடங்குகிறார்.
இறுதியில் குயிலியின் வாழ்க்கை என்ன ஆனது? மதுபானத்திற்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் குயிலி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் தஷ்மிகா லட்சுமணன், காதல், கல்யாணம், குடும்பம் என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். போராட்ட களத்தில் வரும் லிசி ஆண்டனி, வீர மங்கையாகவும், மகனை எதிர்த்து போராடும் தாயாகவும் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். குயிலியின் கணவராக நடித்து இருக்கும் ரவிசா, நல்லவனாகவும், குடிக்கு அடிமையான பிறகு எதார்த்தமாகவும் நடித்து வருகிறார். வில்லனாக மிரட்ட முயற்சி செய்து இருக்கிறார் புதுப்பேட்டை சுரேஷ். படத்தின் தயாரிப்பாளரான விவி அருண்குமார், கலெக்டராக நடித்து இருக்கிறார்.
இயக்கம்
மது போதைக்கு ஒருவர் அடிமையானால், அவர்களது குடும்பமும் வாழ்வாதாரமும் எப்படி மாறும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் முருகசாமி. முதல் பாதி ஒரு கிராமத்து பெண்ணின் கதையாகவும் இரண்டாம் பாதி அரசியல் சார்ந்த கதையாகவும் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர். மதுபானத்தை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந்தாலும் இதில் கொஞ்சம் அரசியல் சார்ந்து சொல்லி இருப்பது சிறப்பு. ஆனால் காட்சிகள் அழுத்தமில்லாமலும் சுவாரஸ்யம் இல்லாமலும் அமைந்திருப்பது பலவீனம். ஒரு சில இடங்களில் நடிகர்களின் நடிப்பு செயற்கையாக இருப்பதை தவிர்த்திருக்கலாம்.
இசை
ஜோ ஸ்மித் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவு
பிரவீன் ராஜின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.







