என் மலர்


கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்
பணக்காரர்கள் என்று பொய் சொல்லி காதலிக்கும் நாயகன், நாயகியின் கதை.
கதைக்களம்
தொழிலதிபரான அமித் பார்கவ் எஸ்டேட்டில் குதிரைகளுக்கு பயிற்சி அளிக்கும் வேலை செய்து வருகிறார் நாயகன் ஶ்ரீகாந்த். அதுபோல் பெரிய கோடீஸ்வரராக இருக்கும் சச்சு வீட்டில் வேலை செய்து வருகிறார் நாயகி புஜிதா. ஶ்ரீகாந்த்தும், புஜிதாவும் ஒரு நாள் சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது ஒருவரை ஒருவர் ஏமாற்றி தாங்கள் பெரிய இடத்தை சேர்ந்தவர்கள் என்றும் பணக்காரர்கள் என்றும் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். நிச்சயதார்த்தம் நடக்கும் நிலையில், இவர்கள் இருவரும் பொய் சொன்ன விஷயமும், யார் என்ற உண்மையும் இருவருக்கும் தெரிந்து சண்டை போட்டு பிரிகிறார்கள்.
இறுதியில் ஶ்ரீகாந்த், புஜிதா இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஶ்ரீகாந்த், துறுதுறு இளைஞனாக நடித்து இருக்கிறார். காதலிப்பது, காதலியிடம் சண்டை போடுவது, பொய் சொல்லி ஏமாற்றுவது என நடிப்பில் கவர்ந்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் புஜிதா, ஶ்ரீகாந்த்துக்கு போட்டி போட்டு நடித்து இருக்கிறார். ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங் போல் இருக்கிறது.
இரண்டாவது ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ள பரதன் மற்றும் நிமி இமானுவேல் இருவரும் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். இவர்களோடு அமித் பார்கவ், நம்பிராஜன், நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி என அனைவரும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்துள்ளனர். பழம்பெரும் நடிகர்களான டெல்லி கணேஷ், கே.ஆர்.விஜயா, சச்சு ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர்.
இயக்கம்
தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து சலித்து போன பொய் சொல்லி ஏமாற்றி காதலிக்கும் பழைய கதையை படமாக எடுத்துள்ளார் இயக்குனர் கே ரங்கராஜ். பெரிய மற்றும் அனுபவம் வாய்ந்த நடிகர்களின் நடிப்பை வீணடித்திருக்கிறார். காமெடி காட்சிகள் சுத்தமாக ஒர்க்கவுட் ஆகவில்லை. பழைய கதை என்றாலும் அதில் சுவாரஸ்யம் கலந்து இருந்தால் ரசித்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு
தாமோதரன் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இசை
ஆர்.கே.சுந்தர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பெரியதாக இல்லை.
தயாரிப்பு
My India மாணிக்கம் இப்படத்தை தயாரித்துள்ளது.









