என் மலர்


காத்து வாக்குல ஒரு காதல்
காதல் மற்றும் வன்முறையை வித்தியாசமாக சொல்ல முயற்சிக்கும் திரைப்படம்
கதைக்களம்
ஒரு பக்கம் நாயகன் மாஸ் ரவியும் , நாயகி லட்சுமி பிரியாவும் உயிருக்கு உயிராக உருகி உருகி காதலித்து வருகின்றனர். மறுபக்கம் ஒரு கேங்ஸ்டர் கூட்டம் இருக்கிறது. அதில் உள்ள பல ரவுடிகள் அவர்களுக்கு இடையே உள்ள மோதலால் கொலை செய்யப்படுகிறார்கள்.
அப்பொழுது நாயகிக்கு ஒரு கனவு வருகிறது. அதில் நாயகன் மாஸ் ரவி தொலைந்து போகிறார். மறுநாள் உண்மையில் அவர் காணாமல் போகிறார். அவரை தேடி அலையும் நாயகி லட்சுமி பிரியா, ரவுடி கும்பலைச் சேர்ந்த ஒருவராக மாஸ் ரவியை மீண்டும் சந்திக்கிறார். ஆனால் ரவி நாயகியை தெரியாதது போல் நடந்து கொள்கிறார். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? ரவுடி கும்பலுக்கு ரவிக்கு என்ன தொடர்பு? உண்மையில் ரவி நாயகியை மறந்துவிட்டாரா? இவர்களது காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் மாஸ் ரவி, மென்மையான நபர் மற்றும் அதிரடியானவர் என இரண்டு கெட்டப்புகளில் வேறுபாடு காட்டி நடித்துள்ளார். நாயகியாக நடித்திருக்கும் லட்சுமி பிரியா சிரித்த முகத்தோடு அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
வில்லன்களாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயன் மற்றும் சாய் தீனா நடிப்பு ஓகே ரகம். சில காட்சிகளில் கத்தி பேசி பார்வையாளர்களை கடுப்பேத்தியுள்ளனர். ஆதித்யா பாஸ்கர் மற்றும் தங்கதுரை வரும் காட்சிகள், சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. கல்லூரி வினோத், பாஸ்கர், பவர் ஸ்டார், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
ஹீராவாக நடித்து இயக்கி இருக்கிறார் மாஸ் ரவி. திரைப்படம் எதை நோக்கி செல்கிறது என்ற குழப்பம் ஏற்படுகிறது. படத்தின் முதல் பாதியில் காதலும், ரவுடிகளின் மோதலும் நிறைந்திருந்தாலும், அவை படத்திற்கு பயனுள்ளதாக இல்லாதது பலவீனம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர்கள் ராஜதுரை மற்றும் சுபாஷ் மணியனின் கேமரா காட்சிகளை பளிச்சென்று காட்சிப்படுத்தியுள்ளார்.
இசை
இசைமைப்பாளர்கள் ஜிகேவி மற்றும் மிக்கின் அருள்தேவ் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.
தயாரிப்பு
சென்னை ப்ரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.









