என் மலர்


ஜின் - தி பெட்
.ஜின் என்று பேயை கொண்டு புதுமையான கதை களத்துடன் திகிலான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.
கதைக்களம்
தமிழகத்தில் இருந்து மலேசியா சென்று பணிபுரியும் முகேன்ராவ், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பும் போது 'ஜின்' என்ற பேயோடு வருகிறார். பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டு வீட்டில் பால், பிஸ்கட் கொடுத்து செல்லமாக ஜின்னை வளர்த்து வருகிறார் முகேன்ராவ். 'ஜின்' வந்த நேரம் அவருக்கு சில நல்ல விஷயங்கள் நடக்கிறது. ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு கெட்ட விஷயங்கள் நடக்கிறது.
இந்நிலையில் எல்லோரும் வெளியில் சென்று வீடு திரும்பும் போது முகேன்ராவின் மனைவி பவ்யா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடக்கிறார். பவ்யா நிலைக்கு ஜின்தான் காரணம் என ஜின்னை வீட்டுக்கு வெளியே பெட்டியோடு வீசி விடுகிறார் முகேன்ராவ். ஒரு கட்டத்தில் பவ்யாவை கொலை செய்ய முயற்சித்தது ஜின் இல்லை என தெரிய வருகிறது.
இறுதியில் பவ்யாவை கொலை செய்ய முயற்சி செய்தது யார்? என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
வீட்டு செல்லப்பிராணி போல் ஜின்னை வளர்த்து வரும் முகேன்ராவ், ஜின்னோடு பழகும் காட்சிகளிலும், பவ்யா திரிக்காவுடன் காதல் காட்சிகளிலும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. வசீகர புன்னகையோடு பவ்யா காதல் காட்சிகளிலும், கண் முன்பு நடக்கும் அநியாயத்தை தட்டி கேட்பதால் பாதிக்கப்படும் பெண்ணாக அவரது நடிப்பு படத்துக்கு பெரிய பலமாக இருக்கிறது.
பாலசரவணன் டைமிங் காமெடி சிரிக்க வைக்கிறது. சாமியாராக வரும் கயல் தேவராஜ் மற்றும் இமான் அண்ணாச்சி வினோதினி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, ராதா ரவி, நந்து ஆனந்த் ஆகியோர் நடிப்பு கூடுதல் பலம் சேர்த்து உள்ளது.
இயக்கம்
ஜின் என்று பேயை கொண்டு புதுமையான கதை களத்துடன் திகிலாக மட்டுமின்றி கலகலப்பாக ரசிக்கும்படி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் டி.ஆர்.பாலா. சில இடங்களில் லாஜிக் மீறல்கள் தவிர்க்கப்பட்டு இருக்கலாம். குடும்பத்துக்குள் செல்லப் பிராணியாக வசிக்கும் பேய் மற்றும் குற்ற சம்பவம் என திகில், திரில்லரோடு சுவாரசியமாக உருவாக்கி இருக்கிறார்.
இசை
விவேக், மெர்வின் இசை ரசிப்பு. பேய் படத்தை பயமில்லாமல் கலகலப்பாக பார்க்க வைப்பதுடன் ஜின் சண்டைக் காட்சிகளும், குரலும் கைத்தட்டி ரசிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவு
அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
தயாரிப்பு
TR Bala, Anil Kumar ரெட்டி இணைந்து தயாரித்துள்ளனர்.












