என் மலர்


கட்ஸ்
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கும் திரைப்படம்
கதைக்களம்
சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்த நாயகன் ரங்கராஜ், நேர்மையான போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். இவர், மனைவி நான்சி மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு பிரச்சனையில் ரவுடி கும்பலுடன் மோதல் ஏற்படுகிறது. இதில் கோபம் அடைந்த ரவுடி, ரங்கராஜ் மனைவி நான்சியை கொலை செய்து விடுகிறார். ஒரு கட்டத்தில் ரவுடியை கொன்றுவிட்டு சொந்த ஊருக்கு தன் மகளுடன் செல்கிறார் ரங்கராஜ்.
வெளிநாட்டில் இருக்கும் ரவுடியின் தந்தை, தன் மகன் இறந்தை அறிந்து ஊருக்கு வருகிறார். அங்கு ரங்கராஜை கண்டு அதிர்ச்சி அடைகிறார். இறுதியில் ரங்கராஜை, ரவுடியின் தந்தை கொலை செய்தாரா? ரங்கராஜை கண்டு ரவுடியின் தந்தை அதிர்ச்சியடைய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்து இருக்கும் ரங்கராஜ் இப்படத்தை இயக்கி, தந்தை, மகன் என்ற இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். தந்தையாக மீசையை முறுக்கி மிரட்டலான தோற்றத்திலும், நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், கதைக்கேற்ற நடிப்பை கொடுத்து உள்ளார். ஒரு சில இடங்களில் மிகைப்படுத்திய நடிப்பை கொடுத்து இருக்கிறார். மனைவியுடன் பாசமழை பொழிவது, மனைவி இறந்ததும் கதறி அழுவது என கவனிக்க வைத்து இருக்கிறார்.
கிராமத்தில் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் சுருதி நாராயணன் யதார்த்தமாகவும், அழுத்தமாகவும் நடித்து இருக்கிறார். மனைவியாக வரும் நான்சி குறைந்த காட்சிகளே வந்தாலும் அவரது நடிப்பு மனதில் நிற்கிறது. போலீசாக வரும் டெல்லிகணேஷ், சப்-இன்ஸ்பெக்டராக வரும் பிர்லா போஸ், சாய்தீனா, ஸ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா ஆகியோரின் நடிப்பு படத்துக்கு கூடுதல் பலம்.
இயக்கம்
நடிப்பில் கவனம் செலுத்திய ரங்கராஜ் கொஞ்சம் திரைக்கதையிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். திரைக்கதையில் இன்னும் அழுத்தம் சேர்த்து இருக்கலாம். விவசாயிகளுக்கு விழிப்புணர்வு படமாக எடுக்க முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் அது ஒரு காட்சி, ஒரு வசனத்தில் கடந்து விடுகிறது.
ஒளிப்பதிவு
மனோஜ் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சிங்கிள் காட்சி ஒன்றை முயற்சி செய்து இருக்கிறார் அதற்கு பாராட்டுக்கள்.
இசை
ஜோஸ் பிராங்க்ளின் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை.
தயாரிப்பு
OPRP Productions நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.










