என் மலர்


எனை சுடும் பனி
பொள்ளாச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம்.
கதைக்களம்
பொள்ளாச்சியில் வாழ்ந்து வரும் நாயகன் நட்ராஜ் சுந்தர்ராஜும் நாயகி உபாசானாவும் காதலித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்து கொண்டு அடிக்கடி சிறு சிறு சண்டை போட்டு வருகிறார்கள். இந்நிலையில் பொள்ளாச்சியில் இளம் வயது பெண்கள் சிலர் மர்ம நபரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.
இதை கண்டுபிடிக்க பாக்கியராஜ் தலைமையிலான போலீஸ் குழுவினர் மர்ம நபரை தேடி வருகிறார்கள். அதேசமயம் நாயகி உபாசனா அந்த மர்ம நபரால் கடத்தப்படுகிறார். அந்த மர்ம நபரை ஒரு பக்கம் நாயகன் நடராஜ் சுந்தர்ராஜும், போலீஸ் அதிகாரி பாக்யராஜும் தேடுகிறார்கள்.
இறுதியில் மர்ம நபரை நடராஜ் சுந்தர்ராஜ் கண்டுபிடித்தாரா? உபாசனாக்கு என்ன ஆனது? மர்ம நபர் யார்? எதற்காக செய்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நட்ராஜ் சுந்தர்ராஜ், ஓரளவிற்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியை காப்பாற்ற போராடுவது, காதலிப்பது, மர்ம நபரிடம் சண்டை போடுவது என நடிப்பில் ஸ்கோர் செய்ய முயற்சி செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் உபாசனா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகனை காதலிப்பது, கெட்டதை நினைத்து வருந்துவது என நடிப்பில் கவனம் பெற்று இருக்கிறார். கே.பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா ஆகியோர் அனுபவம் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இயக்கம்
பொள்ளாச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராம் சேவா. திரைக்கதை தெளிவில்லாமலும் காட்சிகள் கோர்வையாக இல்லாததும் படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. முதல் பாதி ஆரம்பத்தில் அடுத்தடுத்து பாடல்கள் வருவது கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொது இடத்தில் பெண்கள் தங்களுடைய செல்போன் நம்பர், விலாசம் மற்றும் தனிப்பட்ட விஷயத்தை சொல்ல கூடாது என்ற கருத்தை சொல்லியதற்கு பாராட்டுகள்.
இசை
மிக்கின் அருள்தேவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக சாண்டி மாஸ்டர் வரும் பாடல் தாளம் போட வைக்கிறது.
ஒளிப்பதிவு
வெங்கடேஷ் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். காட்சிகள் இருட்டில் இருப்பதால் கதாபாத்திரங்களின் முகம் தெளிவாக தெரியவில்லை.
தயாரிப்பு
SNS Pictures நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.













