என் மலர்


என் காதலே
கடல் கடந்த காதலையும், உறவையும் மையப்படுத்தி காதல் படமாக உருவாகி இருக்கிறது.
கதைக்களம்
லண்டனில் இருந்து தமிழ் கலாசாரத்தை ஆய்வு செய்வதற்காக தமிழகத்தில் உள்ள மீனவ கிராமத்திற்கு வருகிறார் நாயகி லியா. அவருக்கு வழி காட்டியாக மீனவ இளைஞரான லிங்கேஷ் உதவி செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது.
சுனாமி பேரலையில் தனது பெற்றோரை இழந்த லிங்கேஷ், தனது தாய்மாமன் வீட்டில் வளர்ந்து வருகிறார். தாய்மாமன் மகள் திவ்யாதாமஸ், 'கட்டினால் என் மாமனைதான் கட்டுவேன்' என லிங்கேஷ் மீது உயிரையே வைத்துள்ளார். இந்நிலையில் லண்டன் காதலியான லியாவின் காதல் விவகாரம் லிங்கேஷ் தாய்மாமன் மதுசூதனராவுக்கு தெரிய வருகிறது.
இறுதியில் லிங்கேஷ் யாரை திருமணம் செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
மீனவ இளைஞராக இயல்பான நடிப்பை கொடுத்துள்ள லிங்கேஷ், வெளிநாட்டு நடிகையுடன் காதல் காட்சிகளிலும், தொடர்ந்து காதலில் ஏற்படும் பிரச்சினைகளில் சிக்கி தவிப்பதிலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். லிங்கேசை உயிருக்கு உயிராக காதலிக்கும் திவ்யா தாமஸ் காதலில் எதிர்பாராத ஏமாற்றத்தை சந்திக்கும் போது அவரது கதறல் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. லண்டன் காதலியாக நடித்துள்ள லியா நடிப்பு ரசிக்க வைக்கிறது. மாறன், கஞ்சா கருப்பு காமெடி காட்சிகள் ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறது. வில்லன் கதாபாத்திரத்தில் காட்பாடி ராஜன் மற்றும் சித்தா தர்ஷன் நடிப்பு கவனிக்க வைத்து இருக்கிறது.
இயக்கம்
கடல் கடந்த காதலையும், உறவையும் மையப்படுத்தி காதல் படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெயலட்சுமி. திரைக்கதை சுவாரஸ்யமாக இல்லாமல் செல்வது படத்திற்கு பலவீனம். கதாபாத்திரங்களிடையே வேலை வாங்கி இருக்கலாம். ஒரு சில இடங்களில் கதாபாத்திரங்களின் நடிப்பு செயற்கை தனமாக இருந்தது. 2-ம் பாதியில் காட்சிகளில் நீளமும், வசனமும் படத்துக்கு தோய்வை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒளிப்பதிவு & இசை
டோனிஜான் ஒளிப்பதிவு, சாண்டி சாண்டெல்லோ இசை படத்திற்கு பலம் சேர்க்க முயற்சித்து இருக்கிறது.
தயாரிப்பு
Skywander என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.










