என் மலர்


தீபாவளி போனஸ்
எளிமையான நடுத்தர குடும்ப வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதை.
கதைக்களம்
இக்கதைக்களம் மதுரை மாவட்டத்தில் உள்ள நிலையூர் என்ற கிராமத்தில் நடைப்பெறுகிறது. கதாநாயகன் விக்ராந்த் ஒரு கொரியர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவியான ரித்விகா வீட்டு வேலைகளை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. கதைச்சூழல் தீபாவளி பண்டிகையை ஒட்டி நடைப்பெறுகிறது. தீபாவளி போனசுக்காக அவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் காத்துக்கொண்டிருக்கிறார் விக்ராந்த் மற்றும் ரித்விகா. இந்த போனஸ் பணத்தை வைத்து தன் குடும்பத்தின் ஆசையை நிறைவேற்ற ஆசைப்படுகிறார்கள்.
தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் சூழ்நிலையில் விக்ராந்தின் கம்பெனியில் போனஸ் தர தாமதம் ஏற்படுகிறது. அப்பொழுது விக்ராந்தின் நண்பன் பிளாட்பாரத்தில் துணிக்கடை போட உதவிக்கு அழைக்கிறார். இதன் மூலம் தனக்கு வருமானம் கிடைக்கும் என செல்கிறார். அப்பொழுது துணிவிற்கும் பொழுது திடீர் என ரவுடி ஆட்கள் வந்து விக்ராந்தை அடிக்கிறார்கள். அதன் பின் விக்ராந்தை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கின்றனர். இவரை காணவில்லை என ரித்விகா ஒரு பக்கம் தேட. இதற்கு அடுத்து என்ன ஆனது? விக்ராந்தை அடிக்க காரணம் என்ன? தீபாவளி போனஸ் கிடைத்ததா? தீபாவளியை எவ்வாறு கொண்டாடினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்து இருக்கும் விக்ராந்த் சாதுவான நடிப்பையும் நடுத்தர மக்களின் வாழ்கையை அழகாக பிரதிபளித்துள்ளார். தன் பிள்ளை ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுக்க முடியாத தனது இயலாமையை நினைத்து அவர் கலங்கும் காட்சி பார்வையாளர்களை கண்கலங்க செய்கிறது.
வரவுக்கு ஏற்ப குடும்பம் நடத்தும் மனைவி வேடத்தில் நடித்திருக்கும் ரித்விகா, வழக்கும் போல் தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் எளிய மக்களின் வாழ்க்கையை பிரதிபலித்திருக்கிறார்.
விக்ராந்த் - ரித்விகா தம்பதியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் ஹரிஷ், புத்தாடை கிடைக்குமா? என்ற தனது ஏக்கத்தை தன் சோர்வடைந்த முகத்தின் மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இயக்கம்
எளிய நடுத்தர குடும்பத்தின் தீபாவளி பண்டிகையையும் அவர்களின் சிறு சிறு ஆசைகளும் பெரிய ஏமாற்றங்களையும் அவர்களின் இயலாமையை சொல்லி இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெயபால்.ஜெ. அவர் எடுத்துக்கொண்ட இக்கதைக்களத்தை முடிந்த அளவுக்கு நேர்த்தியாக கூற முயற்சி செய்து இருக்கிறார். திரைப்படத்தின் முதல் பாதி சற்று தொய்வாக இருந்தாலும் படத்தின் இரண்டாம் பாதியில் அதை பேலன்ஸ் செய்துள்ளார் இயக்குனர்.
இசை
இசையமைப்பாளர் மரிய ஜெரால்டு இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்திருக்கிறது.
ஒளிப்பதிவு
மதுரைக்கு உரிய அழகை இதுவரை நாம் பார்த்திராத கண்ணோட்டத்தில் காட்சி படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் கவுதம் சேதுராமன்.
தயாரிப்பு
ஸ்ரீ அங்காளி பரமேஷ்வரி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.








