என் மலர்


பரோஸ்
400 வருடங்களாக புதையலை காத்துக்கொண்டிருக்கும் பூதம் பரோஸின் கதை.
கதைக்களம்
டி காமா மகாராஜாவின் புதையலை 400 ஆண்டுகளாக பாதுக்காத்து வருகிறார் பூதமாக இருக்கும் மோகன்லால் { பரோஸ்} . அந்த டி காமா அரசரின் உண்மையான வாரிசிடம் இந்த புதையலை ஒப்படைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார் பரோஸ். அப்படி கொடுத்தால் மட்டுமே அவருக்கு மோட்சம் கிடைக்கும் இல்லை என்றால் அந்த பாதாளத்திலேயே அவர் சிக்கி விடுவார் என்ற சூழல் நிலவுகிறது. 13 தலைமுறைகளை கடந்த பின் உண்மையான டி காமா அரசின் வாரிசு ஒரு சிறுமி இருக்கிறாள் மோகன்லாலுக்கு தெரியவருகிறது. அந்த சிறுமியிடம் இந்த புதையலை ஒப்படைக்க முயற்சி செய்கிறார் மோகன்லால். அதே நேரத்தில் அந்த புதையலை எடுக்க ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. மோகன்லால் சரியான ஆளிடம் புதையலை ஒப்படைத்தாரா? அவர் சந்தித்த சிக்கல் என்ன? 400 வருடங்களாக சிக்கிக் கொண்டு இருக்கும் அவருக்கு மோட்சம் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
பரோஸ் என்ற பூதம் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் மோகன்லால். மிகவும் எதார்த்தமான அதே சமயம் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இஸபெல்லாவாக வரும் மாயா ராவ் வெஸ்ட் துறுதுறு என நடித்து மக்கள் மனதில் பதிகிறார். மற்ற கதாப்பாத்திரங்களில் நடித்த அனைவரும் அவர்களின் வேலை திறம்பட செய்துள்ளனர். குரு சோமசுந்தரத்தின் நடிப்பை வீணடித்துள்ளனர்.
இயக்கம்
ஒரு பக்காவான ஃபேண்டசி கதையை மையமாக வைத்து இயக்கியுள்ளார் மோகன்லால். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். நிறைய ஃபேண்டசி விஷயங்கள் இருந்தும் பெரும்பாலான காட்சிகள் வசனங்கள் பேசி நகர்வதால் பார்வையாளர்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிறது. இரண்டாம் பாதியில் ஸ்பானிஷ் மொழியிலேயே பேசும் காட்சி பொறுமையை சோதிக்கிறது. திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக இருந்து இருந்தால் திரைப்படம் கூடுதலாக ரசிக்கப்பட்டிருக்கும்.
கிராபிக்ஸ்
படத்தின் தொழில்நுட்ப குழுவுக்கு பாராட்டுகள். மிக துள்ளியமாக ஹாலிவுட் திரைப்பட தரத்திற்கு 3டி மற்றும் கிராபிக்ஸ் காட்சியை கையாண்டுள்ளனர். மோகன்லால் உடன் வரும் வூடு கதாப்பாத்திரம் மிக சிறப்பாக செய்துள்ளனர். இரண்டாம் பாதியில் வரும் தண்ணீருக்கு அடியில் இடம் பெற்றிருக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவு
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு மிக கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது.
இசை
லிடியன் நாதஸ்வரம் இசையில் அமைந்த பாடல்கள் கேட்கும் ரகம். ஹாலிவுட் தரத்தில் பின்னணி இசையை மேற்கொண்டுள்ளார்.
தயாரிப்பு
இப்படத்தை ஆஷிர்வாத் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.









