என் மலர்


படவா
கதைக்களம்
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் விமல், தனது நண்பர் சூரியுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, திருடி விற்பது, ஊர் மக்களுக்கு தொல்லை கொடுப்பது என்று இருக்கிறார். இதனால் அவரை நாடு கடத்த முடிவு செய்யும் கிராம மக்கள், பணம் வசூலித்து அதன் மூலம் அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கு சில நாட்களில் வேலை பறிபோக மீண்டும் சொந்த கிராமத்திற்கு வருகிறார் விமல்.
ஊருக்கு திரும்பும் விமலுக்கு மாலை மரியாதையுடன் வரவேற்பதோடு, அவரை ஊர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கிறார்கள். விமலை கண்டு பயந்து ஓடும் ஊர் மக்கள் விமலை கொண்டாட காரணம் என்ன? கிராம மக்களின் மாற்றத்திற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விமல், வெட்டியாக ஊர் சுற்றுவது, நாயகியை கண்டதும் காதல் கொள்வது, பிறகு வில்லனை எதிர்ப்பது, வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். விமலின் நண்பராக நடித்திருக்கும் சூரி, விமலுடன் சேர்ந்து லூட்டி அடிப்பது என படம் முழுவதும் வருகிறார். ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஷ்ரிதா ராவ் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். விமலின் அக்காவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, மாமாவாக நடித்திருக்கும் நமோ நாராயணன், வில்லனாக நடித்திருக்கும் கே.ஜி.எப் ராம் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
இயக்கம்
கிராமம், மண், விவசாயம் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கே.வி.நந்தா. பழைய கதை என்றாலும் பொழுதுபோக்கு அம்சங்கள் வைத்து கொடுக்க முயற்சி செய்து இருக்கிறார். தேவையில்லாத சில காட்சிகள் மூலம் படத்தின் நீளத்தை அதிகரித்து சில இடங்களில் படத்தை தொய்வடைய செய்து இருக்கிறார். சீமை கருவேலம் மரத்தால் ஏற்பட்டும் பாதிப்பை சொல்லி இருப்பது சிறப்பு.
இசை
ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். சுத்தமாக பொருந்தவில்லை.
ஒளிப்பதிவு
ராமலிங்கம் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
தயாரிப்பு
J Studio இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.










