என் மலர்


அனுக்கிரகன்
தந்தையின் சிறு வயது ஆசைகளை நிறைவேற்ற நினைக்கும் மகனின் கதையாக உருவாகியுள்ளது.
கதைக்களம்
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த விஜய் கிருஷ்ணா, மனைவி ஸ்ருதி ராமகிருஷ்ணன் மற்றும் மகன் ராகவனுடன் வாழ்ந்து வருகிறார். மகனுக்கு தேவையான அனைத்தையும் விஜய் கிருஷ்ணா செய்து வருகிறார். ஆனால், தனது தந்தைக்கு அவரது சிறு வயதில் ஆசைப்பட்டது எதுவும் கிடைக்கவில்லை என்பதை அறியும் ராகவன், தந்தையின் சிறு வயது ஆசைகளை நிறைவேற்ற வேண்டும், என்று நினைக்கிறார்.
அது சாத்தியம் இல்லை என்றாலும், அதையே தனது லட்சியமாகவும் கொள்ளும் சிறுவன், டைம் டிராவல் மூலம் தனது தந்தையின் சிறு வயது காலக்கட்டத்திற்கு பயணிக்கிறார். இறுதியில் தனது தந்தையின் சிறு வயது ஆசைகளை ராகவன் நிறைவேற்றினாரா? டைம் டிராவல் மூலம் சென்றவர் மீண்டும் எப்படி வந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விஜய் கிருஷ்ணா, குடும்பத்திற்காகவும், பிள்ளைகளுக்காகவும் தங்களது கனவு பயணங்களில் இருந்து விலகியவர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரின் இளமை காலத்தில் அவருடன் நண்பனாக பயணிக்கும் முரளி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக தாயை சந்திக்கும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
விஜய் கிருஷ்ணாவின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ருதி ராமகிருஷ்ணன், அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். மகனாக வரும் ராகவன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.
இயக்கம்
தந்தையின் சிறு வயது ஆசைகளை நிறைவேற்ற நினைக்கும் மகனின் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுந்தர் கிரிஷ். டைம் டிராவல் மூலம் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. சிறு பட்ஜெட்டில் என்ன கொடுக்க முடியுமோ அதை சிறப்பாக கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி, ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இசை
இசையமைப்பாளர் ரேஹன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
தயாரிப்பு
Sakti Ciinee Productions Pvt. Ltd தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.











