என் மலர்


அங்காரகன்
காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் போலீஸ் குறித்த கதை.
நண்பர்கள் சிலர் காட்டுப் பகுதியில் இருக்கும் ஒரு தனிமையான தங்கும் விடுதிக்கு செல்கிறார். அங்கு இரவில் நடக்கும் பார்ட்டிக்கு பின் பெண் ஒருவர் காணாமல் போகிறார். இதை விசாரிக்க போலீஸ் அதிகாரியான சத்யராஜ் மற்றும் காவல் துறையினர் அங்கு வருகிறார்கள்.

அங்கே தங்கியுள்ள ஒவ்வொருவரிடமும் விசாரிக்கும் போது ஒவ்வொரு கதை சொல்கிறார்கள். மேலும் அந்த விடுதியில் அமானுஷ்ய சக்தி ஒன்று பயமுறுத்துகிறது.

இறுதியில் காணாமல் போன பெண்ணை சத்யராஜ் கண்டுபிடித்தாரா? அமானுஷ்ய சக்தி யார்? எதற்காக பயமுறுத்துகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் அதிவீரபாண்டியன் கதாபாத்திரத்தில் வருகிற சத்யராஜ் அலட்டாமல் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். இவரது தோற்றம் பழைய 100-வது நாள் சத்யராஜை நியாபகப்படுத்துகிறது.

படத்தில் ஏராளமான பாத்திரங்கள் வருகின்றன. பலரும் புதுமுகங்கள் என்பதால் நடிப்பை அவர்களிடம் எதிர்பார்க்க முடியவில்லை.

காணாமல் போன பெண்களைத் தேடும் முயற்சியில் நடக்கும் விசாரணையில் ஆளாளுக்கு கதை சொல்லி நெளிய வைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திரைக்கதையும் திணறுகிறது. மெதுவாக செல்லும் திரைக்கதை படத்திற்கு பலவீனம்.

கதையின் பெரும் பகுதி இரவில் நடப்பதால் அந்தப் பகுதி காட்சிகளை நன்றாக ஒளிப்பதிவு செய்துள்ளார் இயக்குனர் மோகன் டச்சு. ரசிகர்களை ஓரளவிற்கு பயமுறுத்த முயற்சி செய்து இருக்கிறார் இசையமைப்பாளர் கு.கார்த்திக்.
மொத்தத்தில் அங்காரகன் - மிரட்டல் குறைவு.









