என் மலர்


ஏஸ்
பண தேவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.
கதைக்களம்
நாயகன் விஜய் சேதுபதி ஜெயிலில் இருந்து மலேசியாவிற்கு செல்கிறார். அங்கு யோகி பாபு மூலமாக தவறான பெயர் சொல்லி சமையல் வேலைக்கு செல்கிறார். இவர் வீட்டிற்கு எதிரே இருக்கும் நாயகி ருக்மிணி வசந்தை பார்த்ததும் காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் நாயகியும் காதலிக்க ஆரம்பிக்கிறார்.
நாயகிக்கு பணம் தேவைப்படுகிறது. இதற்காக ரவுடி அவினாசிடம் கடன் கேட்க செல்கிறார். அங்கு சூதாட்டம் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கிறார் விஜய் சேதுபதி. இதை பார்க்கும் அவினாஷ், விஜய் சேதுபதியை ஏமாற்றி பாஸ்போர்ட்டை பிடுங்கி கொண்டு கடனாளியாக்குகிறார்.
இறுதியில் அவினாஷிடம் இருந்து விஜய் சேதுபதி பாஸ்போர்ட்டை மீட்டாரா? நாயகிக்கு பணம் கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விஜய் சேதுபதி அலட்டல் இல்லாத நடிப்பை கொடுத்து இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஒரு சில இடங்களில் முகபாவனைகள் ஏதும் காட்டாமல் அப்படியே நிற்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் ருக்மிணி, துணிச்சலான பெண்ணாக நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். கோபம், சந்தோஷம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
படத்திற்கு பெரிய பலம் யோகி பாபு. இவர் செய்யும் சொதப்பல்கள் சிரிக்க வைக்கிறது. ரவுடி அவினாஷ், போலீஸ் பப்லு மற்றும் திவ்யா பிள்ளை ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
பணம் தேவையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆறுமுககுமார். முதல் பாதி மெதுவாகவும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். சூது கவ்வும், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களின் சாயல் இருக்கிறது. தேவை இல்லாத காட்சிகள், லாஜிக் மீறல்கள் படத்திற்கு பலவீனம்.
ஒளிப்பதிவு
கரணின் ஒளிப்பதிவில் மலேசியாவின் புத்தர் கோயில், மலேசியா முருகன் கோயில், மார்க்கெட், மலேசியா திருவிழா என அனைத்தையும் அழகாக படம் பிடித்து இருக்கிறார்.
இசை
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். சாம் சி எஸ் பின்னணி இசை சம்மந்தமே இல்லாமல் இருந்தது.
தயாரிப்பு
7Cs Entertainment Pvt. Ltd. நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.









