என் மலர்


அக்யூஸ்ட்
விசாரணை கைதியை பத்திரமாக கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் கதையாக உருவாகியுள்ளது.
கதைக்களம்
கொலை குற்றவாளியான நாயகன் உதயா, சென்னை புழல் சிறையில் இருந்து சேலம் கோர்ட்டுக்கு அழைத்து செல்ல இருக்கிறார். இவரை அழைத்து செல்ல இருக்கும் போலீஸ் குழுவில் அஜ்மல் இருக்கிறார். உதயாவை அழைத்து செல்லும் வழியில் போலீஸ் வாகனம் பழுதாக, பேருந்தில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் உதயாவை கொல்ல மர்ம கும்பல் ஒன்று முயற்சி செய்கிறது. இதை போலீஸ் கான்ஸ்டெபுலான அஜ்மல் காப்பாற்றுகிறார். அதன்பின் போலீஸ் அதிகாரிகள் உதயா மற்றும் அஜ்மலை கொல்ல திட்டம் போடுகிறார்கள்.
இறுதியில் உதயாவை பத்திரமாக அஜ்மல் கோர்ட்டுக்கு அழைத்து சென்றாரா? உதயாவை துரத்தும் மர்ம கும்பல் யார்? எதற்காக துரத்துகிறார்கள்? உதயா யாரை கொலை செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் உதயா, செய்யாத குற்றத்திற்காக பழியை ஏற்றுக் கொள்வது, தவறாக நடந்த செயலுக்காக வருந்துவது, காதல், நடனம் என நடிப்பில் கவனம் பெற்று இருக்கிறார். ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங்காகவும் இருக்கிறது. போலீஸ் கான்ஸ்டெபுலாக நடித்து இருக்கும் அஜ்மல், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். உதயாவை காப்பாற்ற போராடும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஜான்விகா தமிழில் சிறந்த அறிமுகம். நாயகனுக்காக ஏங்குவது, காதலிப்பது என நடிப்பில் ஸ்கோர் செய்ய முயற்சி செய்து இருக்கிறார். மற்றொரு நாயகியாக அஜ்மலுக்கு ஜோடியாக நடித்து இருக்கும் சாந்திகாவிற்கு அதிகம் வேலை இல்லை. ஆங்காங்கே யோகிபாபு சிரிக்க வைத்து இருக்கிறார். பவன், தயா பன்னீர் செல்வம், ஶ்ரீதர், பிரபு சீனிவாஸ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
விசாரணை கைதியை பத்திரமாக கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் கதையை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பிரபு சீனிவாஸ். பல படங்களின் சாயல் திரைக்கதையில் தோன்றுகிறது. கமர்சியல் படங்களுக்கு தேவையான அம்சங்கள் இருந்தாலும் அடுத்தடுத்து யூகிக்கும் படியான காட்சிகள் படத்திற்கு பலவீனம்.
இசை
நரேன் பாலகுமார் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவு
மருதநாயகத்தின் ஒளிப்பதிவு சிறப்பு.
தயாரிப்பு
Jaeshan Studios Associate With Sachin Cinemas, Sri Dayakaran Cini Production, Miy ஸ்டூடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.










