என் மலர்


ஆரகன்
புராண கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ஆரகன் திரைப்படம்.
கதைக்களம்
நாயகன் மைக்கேலும் நாயகி கவிபிரியாவும் காதலித்து வருகிறார்கள். மைக்கேலுக்கு சொந்தமாக பிசினஸ் பண்ண வேண்டும் என்பது ஆசை. அதற்காக பணம் சேர்த்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக இருக்க கவிபிரியா முயற்சி செய்கிறார். இந்நிலையில் கவி பிரியாவிற்கு மலை பிரதேசத்தில் தனியாக வசித்து வரும் ஸ்ரீரஞ்சனியை பார்த்துக் கொள்ளும் வேலை கிடைக்கிறது. அதிக சம்பளம் என்பதால் கவி பிரியா சம்மதிக்கிறார்.
இந்த வேலைக்காக ஆறு மாதம் காலம் பிரிந்து இருக்க வேண்டும் என்பதற்காக கவி பிரியாவை வேலைக்கு செல்ல அனுமதிக்க மறுக்கிறார் மைக்கேல். ஒரு கட்டத்தில் மைக்கேல் ஒப்புக் கொள்ள, மலை பிரதேசத்திற்கு செல்கிறார் கவி பிரியா.
அங்கு ஶ்ரீரஞ்சனியுடன் தங்கி அவரை அக்கறையுடன் கவனித்து வருகிறார். சில நாட்களில் அந்த வீட்டில் மர்மம் இருப்பதாக கவி பிரியா உணர்கிறார். மேலும் கவி பிரியாவின் செல்போன் ரிப்பேர் ஆனதால், மைக்கேலுடன் பேசுவதும் துண்டிக்கப்படுகிறது.
இறுதியில் அந்த வீட்டில் இருக்கும் மர்மம் என்ன? மைக்கேல், கவி பிரியா இருவரும் காதலில் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மைக்கேல், ஒரு பக்கம் காதலி மீது அன்பும், அக்கறையும் கொண்டவராகவும், மறு பக்கம் சுயநலத்திற்காக எதையும் செய்யும் வித்தியாசமான கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்து அசத்தி இருக்கிறார். பார்ப்பவர்கள் இப்படி ஒரு அக்கறையான காதலனா என்று பொறாமை படும் அளவிற்கும், பிற்பாதியில் இப்படி ஒரு எண்ணமா என்று கோபப்படும் அளவிற்கும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்.
நாயகியாக நடித்து இருக்கும் கவி பிரியா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மைக்கேலை காதலிப்பது, பிரிந்தவுடன் வருந்துவது, வீட்டில் இருக்கும் மர்மத்தை அறியாமல் தவிப்பது என நடிப்பில் பளிச்சிடுகிறார். ஶ்ரீரஞ்சனியின் நடிப்பு திரைக்கதைக்கு வலு சேர்த்து இருக்கிறது.
இயக்கம்
இதிகாச புராண கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அருண். படம் பார்ப்பவர்களை பதட்டத்துடன் இருக்க வைத்து இருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். ஆனால், கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லாமல் விட்டிருக்கிறார்.
ஒளிப்பதிவு
காடு, அதனுள் இருக்கும் அழகான வீடு, அருவி என்று அழகாக படம் பிடித்து கதையோடு பயணித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சூர்யா.
இசை
விவேக் - ஜெஷ்வந்த் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்து இருக்கிறார்கள்.
தயாரிப்பு
ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.








