search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பகட்டான வாழ்க்கை முறையால் பாதை மாறும் பயணம்
    X

    பகட்டான வாழ்க்கை முறையால் பாதை மாறும் பயணம்

    • 'எங்கும் கடன், எதற்கும் கடன்' என்று தாராளமாக வழங்கும் நிலை உருவாகியுள்ளது.
    • வரவையும், செலவையும் கணக்கிட்டு வாழ்க்கைமுறையை வகுத்துக்கொண்டனர்.
    • வெற்றியில் துள்ளிக்குதிப்பதும், தோல்வியில் துவண்டுபோவதும் வேண்டாம்.
    • பகட்டான வாழ்க்கையும், அடுத்தவர்கள் முன்பு ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற கொள்கையும் தவறானது.

    இந்த பூமிப்பந்தில் வாழும் ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வெவ்வேறாக இருக்கிறது. இதுபோன்ற மாறுபாட்டுக்கு அதன் இதய துடிப்பே காரணமாக சொல்லப்படுகிறது. இதயத்துக்கும், ஆயுளுக்கும் அப்படி என்ன சம்பந்தம் இருக்கிறது என்று பார்த்தால், விரைவாக துடிக்கும் இதயத்தை கொண்ட உயிரினத்துக்கு ஆயுள் குறைவு என்றும், மெதுவாக துடிக்கும் இதயத்தை கொண்ட உயிரினத்துக்கு ஆயுள் அதிகம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலில் வாழும் கிளிஞ்சல் என்ற உயிரினம்தான் அதிகபட்சமாக 507 ஆண்டுகள் வாழ்கிறது.

    ஆறறிவு கொண்ட மனிதனின் முழு ஆயுட்காலம் 120 ஆண்டுகள். இந்த உலகத்தில் பிறக்கும் அத்தனை மனிதர்களும் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துவிடுவதில்லை. வயதில் சதம் (100) அடித்தவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியும். ஒருவர் 100 ஆண்டுகள் வாழ்வதாக எடுத்துக்கொண்டாலும், அதை நாட்களில் கணக்கிடும்போது 36,500 நாட்கள்தான் வருகின்றன. 460 கோடி வயதுடைய இந்த பூமியில் மனித வாழ்க்கை என்பது மிகவும் சொற்பம்தான்.

    வாழ்க்கையை ஒரு வரியில் சொல்லிவிடுவது என்றால், பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான போராட்டம்தான். படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், குழந்தைகள், பொருள் சேர்த்தல், பணிநிறைவு, வயோதிகம் என்று பல நிலைகளை கடந்து சென்று இறுதியில் கரைந்துபோய் விடுகிறது.

    20-ம் நூற்றாண்டின் இறுதிவரைகூட மனித வாழ்க்கை இயல்பாக, நிம்மதியாக, எதார்த்தமாக பயணித்தது என்றே கூறலாம். வரவையும், செலவையும் கணக்கிட்டு வாழ்க்கைமுறையை வகுத்துக்கொண்டனர். கடன் வாங்கவேண்டிய நிலை வந்தாலும், அது மருத்துவம், புதிய வீடு, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காகவே இருந்தது. ஆடம்பர வாழ்க்கைக்காக யாரும் கடன் வாங்கியதில்லை. கடன் அன்பை மட்டுமல்ல, சில நேரங்களில் உறவுகளையும், நண்பர்களையும் முறித்துவிடும்.

    ஆனால் தற்போதைய 21-ம் நூற்றாண்டில், வட்டிக்காரன் முகம் பார்த்து கடன் வாங்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியால், வட்டிக்கடைகள் நிதி நிறுவனங்களாக வளர்ச்சி பெற்றுவிட்டன. 'எங்கும் கடன், எதற்கும் கடன்' என்று தாராளமாக வழங்கும் நிலை உருவாகியுள்ளது. கடனுக்காக அலைந்த காலம் போய், வலிய வீட்டுக்கே வந்து கடன் வழங்கும் நிலை வந்துவிட்டது. சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வாழும் மக்கள், வீடு, வாகனம், ஏன் வீட்டுக்கு தேவையான டி.வி., பிரிட்ஜ், ஏ.சி. எதுவாக இருந்தாலும் ஈ.எம்.ஐ. என்று சொல்லக்கூடிய மாத தவணையில் வாங்கிவிட முடியும். போதாக்குறைக்கு, வங்கிகள் வழங்கும் 'கிரெடிட் கார்டு' (கடன் அட்டை) மூலமும் பொருட்களை வாங்கி குவித்துவிட முடியும்.

    இந்த 'கிரெடிட் கார்டு' முறையில், குறிப்பிட்ட நாட்களில் அதற்கான பணத்தை வட்டித்தொகை இல்லாமல்கூட திருப்பிச் செலுத்தும் வசதியை வங்கிகள் செய்துள்ளன. ஆனால், அதில் இருந்து தவறும்போதுதான், வட்டி, வட்டிக்கு மேல் வட்டி போன்ற தேவையில்லாத சிக்கல் ஏற்படுகிறது. முன்பெல்லாம் சேமிப்பு மீது மக்களுக்கு அதிக ஆர்வம் இருந்தது. சம்பளம் குறைவாக இருந்தாலும், அதில் ஒரு சிறுதொகையை ஒதுக்கி சேமித்து வைப்பார்கள். ஏன், வீட்டில் உள்ள குழந்தைகள்கூட உண்டியலில் பணத்தை சிறிது சிறிதாக சேமித்துவைப்பதை பார்த்திருக்கிறோம்.

    ஆனால், இன்றைக்கு கைநிறைய சம்பளம் வாங்கினாலும், மாதத்தில் பாதி நாட்கள் பணம் இல்லாமல் செலவுக்கே கஷ்டப்பட வேண்டியுள்ளது. காரணம், பகட்டாக வாழ விரும்பி, தேவைகள் அனைத்தையும் கடன் பெற்று நிறைவேற்றிக்கொண்டு, பின்பு அதற்கான பணத்தை திருப்பிக்கட்ட அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இதனால், வாழ்வில் மகிழ்ச்சித்துள்ளல் குறைந்துவிடுகிறது.

    இன்றைய மக்களின் பெரும்பாலானோரின் வாழ்க்கைமுறை இப்படியாகத்தான் உப்புச்சப்பில்லாமல் கழிந்து கொண்டிருக்கிறது. நாட்கள் செல்லச்செல்ல மன இறுக்கத்துக்கு ஆளாகி, பின்பு மனஅழுத்தத்துக்கு ஆட்படுகிறோம். இதனால், மனநிலையில் பாதிப்பு ஏற்படுவதுடன், உடல்நலமும் பாதிக்கப்படுகிறது. ரசித்து வாழவேண்டிய வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்படத் தொடங்குகிறது. 'ஏதோ வாழ்கிறோம்' என்றே நாட்களை கடக்க வேண்டியிருக்கிறது.

    மனஅழுத்தத்தால் நேர்மறையான சிந்தனை குறைந்து, எதிர்மறையான சிந்தனை அதிகரிக்கத்தொடங்குகிறது. இந்த ஆபத்தான கட்டத்தில்தான் சிலர் மிருகத்தனமான முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். கடந்த சில காலங்களாகவே பத்திரிகைகளில், 'கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை' என்று வரும் செய்திகளை அடிக்கடி பார்க்கிறோம். இந்த ஒவ்வொரு செய்திக்கு பின்பும் வெவ்வேறு சோகக்கதைகள் இருக்கின்றன.

    இப்போதுகூட, சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில், கடன் தொல்லையால் பிரகாஷ் என்ற சாப்ட்வேர் என்ஜினீயர், மனைவி, மகள், மகன் ஆகியோரை எந்திர ரம்பத்தால் அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    வீடு, கார் என ஆடம்பரமாக வாழ 9 பேரிடம் ரூ.80 லட்சத்துக்கும் அதிகமாக, வார வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். என்ஜினீயரான இவர் ரூ.1½ லட்சம் மாத சம்பளம் வாங்கியும் கடனை கட்டமுடியாத நிலை. கைநிறைய சம்பளம் வாங்கினாலும் குடும்பத்தை கைதூக்கி விடமுடியாத துயரம். ஒரே குடும்பத்தில் 4 உயிர் போனதுதான் மிச்சம்.

    பகட்டான வாழ்க்கையும், அடுத்தவர்கள் முன்பு ஆடம்பரமாக வாழ்ந்து காட்டவேண்டும் என்ற கொள்கையும் தவறானது. பணம்தான் வாழ்க்கைக்கு பிரதானம் என்றால், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் பில்கேட்சுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரிவு வந்திருக்காது. பணத்தையும் தாண்டி நிம்மதி என்று ஒன்று இருக்கிறது. சென்னையில் இரவு நேரங்களில் எத்தனையோ பேர் ஆங்காங்கே சாலையோரம் நிம்மதியாக படுத்து தூங்குவதை பார்க்கிறோம். அவர்களிடம் எவ்வளவு பணம் இருந்துவிடப்போகிறது? வாழ்க்கையில் இன்றைக்கு பல பேர், பணத்தை தேடி ஓடியே நிம்மதியை தொலைத்துவிடுகிறார்கள். பிறகு, பணத்தை தொடர்ந்து தேடுவதா? அல்லது தொலைந்த நிம்மதியை திரும்பி வந்து தேடுவதா? என்று குழம்பிப்போய் தவறான முடிவை எடுத்துவிடுகிறார்கள்.

    இயற்கைகூட நமக்கு சலிப்பு தட்டிவிடக்கூடாது என்பதற்காக குளிர்காலம், மழைகாலம், கோடைகாலம் என பருவநிலைகளை மாற்றி மாற்றித் தருகிறது. அதுபோல, வாழ்க்கையும் நமக்கு பல விஷயங்களை மாறி மாறி கற்றுத்தந்து கொண்டிருக்கிறது. ஆகையால், வெற்றியில் துள்ளிக்குதிப்பதும், தோல்வியில் துவண்டுபோவதும் வேண்டாம். அனைத்தையும் சமமாக எடுத்துக்கொள்வோம். கிடைத்ததைக் கொண்டு ரசித்து வாழ்வதே அழகான வாழ்க்கை.

    Next Story
    ×