
இன்றைய ராசி பலன்கள்
வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்கும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி அனுகூலம் தரும். பொருளாதார நிலை உயரும். நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும்.
வார பலன்கள்
19.2.2021 முதல் 25.2.2021 வரை
நிலம் சம்பந்தப்பட்ட நீண்ட கால பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. பெண்களுக்கு ஆரோக்கியமும், காரிய வெற்றியும் உண்டு. வீட்டில் உள்ள வயதானவர்களால் மருத்துவச் செலவு ஏற்படும். செயல் , பேச்சு போன்றவற்றில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் கவனமாக செயல்படுங்கள். இந்த வாரம் புதன்கிழமை பெருமாளை தரிசனம் செய்து வாருங்கள்.
தமிழ் மாத ஜோதிடம்
பிப்ரவரி மாதம் 13-ம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 13-ம்தேதி வரை
விருச்சிக ராசி நேயர்களே!
சார்வரி வருடம் மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் மேஷ ராசியில் தன் சொந்த வீட்டில் பலம் பெற்றிருக்கின்றார். தன பஞ்சமாதிபதியான குரு பகவான் நீச்ச பங்க ராஜயோகத்தை உருவாக்குகின்றார். எனவே நினைத்தது நிறைவேறும்.
கூட்டுக்கிரக சேர்க்கை
உங்கள் ராசிக்கு 3-ம் இடமான சகாய ஸ்தானத்தில் குரு, சனி, புதன், சுக்ரன் ஆகிய நான்கு கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. வெற்றிகள் ஸ்தானத்தில் குவிந்திருக்கும் இந்த கிரகங்களின் ஆதிக்கத்தால் சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாகவே இருக்கும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் தானாகவே வந்து சேரும். வீடு கட்டும் யோகம் அல்லது வீடு வாங்கும் யோகம் உண்டு. உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் விழாக்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.
மகர புதனும், கும்ப புதனும்
மாதத் தொடக்கத்தில் புதன் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். பிப்ரவரி 14-ந் தேதி வக்ர நிவர்த்தியாகின்றார். இதன் விளைவாக எதிர்பார்த்த நற்பலன்கள் எளிதில் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வி.ஆர்.எஸ். பெற்றுக்கொண்டு விருப்ப ஓய்வில் வெளிவந்து ‘சுயதொழில் தொடங்கலாமா?’ என்றுகூடச் சிந்திப்பர். மார்ச் 7-ந் தேதி கும்ப ராசிக்கு புதன் செல்வதால் அதன்பிறகு தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வரலாம்.
ரிஷப செவ்வாயின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியானவர் செவ்வாய். அவர் பிப்ரவரி 18-ந் தேதி சப்தம ஸ்தானத்திற்கு வருகின்றார். ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்க்கும் பொழுது யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். என்றைக்கோ குறைந்த விலையில் வாங்கிப் போட்ட இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மகர குருவின் சஞ்சாரம்
மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்று சஞ்சரிப்பது ஒருவழிக்கு நன்மைதான். சனியோடு இணைந்து நீச்ச பங்க ராஜயோக அமைப்பிலும் விளங்குகின்றார். அதே நேரத்தில் பிப்ரவரி 21-ந் தேதி குரு அஸ்தமன நிவர்த்தியாவதால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். புதிய கூட்டாளிகள் வந்திணைந்து தொழில் மேம்பாட்டிற்கு வழிவகுப்பர். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
கும்ப சுக்ரனின் சஞ்சாரம்
மாதத் தொடக்கத்தில் மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன், பிப்ரவரி 22-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது உடல்நலம் சீராகும். கடன் சுமை குறையும். கடைதிறப்பு விழாக்களும், கட்டிடத் திறப்பு விழாக்களும் கண்டு மகிழும் நேரமிது. தாயின் உடல்நலம் சீராகும். இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் விநாயகப்பெருமானை வழிபடுவதோடு, சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: பிப்ரவரி: 13, 14, 24, 25, 26, மார்ச்: 2, 3, 7, 8, 9, 12, 13 மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பாராட்டும், புகழும் கூடும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் கல்வி, கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பெற்றோர்களின் உதவியும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், சலுகைகளும் உண்டு. வாகனம் வாங்கும் யோகத்தால் மகிழ்ச்சி கூடும். முன்னோர் வழிபாடு முன்னேற்றம் வழங்கும்.
ஆண்டு பலன் - 2021
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் புத்தாண்டான 2021-ம் வருடம் மிகவும் நல்ல பலன்கள் கொடுக்கின்ற வருடமாக இருக்கும். ஆண்டு முழுவதும் கிரக அமைப்புகள் நல்ல முறையில் அமைந்திருப்பதால் உங்களுடைய தொழில்துறை முன்னேற்றங்களுக்கு ஏற்ற வருடமாக இது அமையும்.
வருடம் முழுவதும் சனி பகவான் மிகவும் நல்ல பலன்களை தரக்கூடிய மூன்றாமிடத்தில் இருப்பது விருச்சிக ராசிக்கு ஒரு சிறந்த அமைப்பு. பாபர்கள் மூன்று, ஆறு பதினொன்றாமிடங்களில் அமரும் நிலையில் மிகப்பெரிய லாபங்களை தருவார்கள் என்பது ஜோதிடவிதி. அதன்படி முப்பது வருடங்களுக்கு ஒருமுறை வருகின்ற வாய்ப்பான மூன்றாமிட சனி எனும் ஒரு நல்ல கோட்சார நிலை உங்களுக்கு இந்த வருடம் இருக்கிறது.
கூடுதலாக உங்கள் யோகாதிபதியான குரு, சனியுடன் இணைந்து அவரை சுபத்துவப் படுத்திக் கொண்டிருக்கிறார். எனவே இந்த ஆண்டில் அபரிமிதமான தொழில் முன்னேற்றங்களையும், பொருளாதார லாபங்களையும், பணவரவுகளையும் துலாம் ராசிக்காரர்கள் எதிர்கொண்டு சந்தோஷப்படுவீர்கள்.
இன்னுமொரு நல்ல நிலையாக ஏழில் குருவின் பார்வையில் இருக்கும் சுப ராகுவால் உங்களில் சிலருக்கு இந்தவருடம் மேற்கு நாடுகளுக்கு வேலை, தொழில் விஷயமாக பயணப்படுதலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் வேலை அமைதலும் இருக்கும். இன்னும் சிலருக்கு முஸ்லிம், கிறித்துவ நண்பர்கள், அமைப்புகள், பங்குதாரர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். பிறப்பால் முஸ்லிம் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்து மதத்தினர் மூலம் நல்லவைகள் நடக்கும்.
கேது பகவான் பிறந்த ஜாதகத்திலோ, கோட்சார நிலையிலோ யோகநிலையில் அமரும்போது மறைமுகமான வழிகளில் அளவற்ற செல்வத்தைத் தந்து மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவார். அதன்படி இம்முறை அவர் அதிர்ஷ்டம் தரும் அமைப்பில் உங்கள் ராசியிலேயே இருப்பதால் சாதுர்யமான வழிகளில் உங்களை ஈடுபடுத்தி தனலாபத்தைத் தருவார்.
மேற்கண்ட கோட்சார நிலைகளால் விருசிக்கத்திற்கு பொருளாதார மேன்மை கிடைக்கும். இதுவரை திருமணம் நடைபெறாத இளைய பருவத்தினருக்கு குடும்பம் மற்றும் நல்ல வேலை அமைந்து வாழ்க்கையில் செட்டிலாவீர்கள். உங்களுக்கு நல்ல யோகம் தரும் அமைப்பு இது.
ஆகவே வருட பலனைத் தரும் ஆகிய முக்கியமான கிரகங்கள் விருச்சிக ராசிக்கு யோகம் தரும் அமைப்பில் இருப்பதால் பிறக்க இருக்கும் புத்தாண்டு உங்களுக்கு நன்மைகளையும், மேன்மைகளையும் மட்டுமே தரும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
கிரகங்கள் சாதகமான அமைப்பில் இருப்பதால் உங்களில் சிலர் இந்த வருடம் திடீர் புகழடைவீர்கள். அவரவர் துறைகளில் அவரவர் வயதிற்கேற்ப சாதனைகள் செய்வீர்கள். டி.வி. போன்ற காட்சி ஊடகங்களிலும், பத்திரிகை போன்ற எழுத்து ஊடகங்களிலும் இந்த வருடம் உங்களால் சாதிக்க முடியும்.
நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு இந்த வருடம் மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள்.
இதுவரை பணவரவிற்கு தடையாக இருந்த விஷயங்கள் அனைத்தும் மாறி உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப்பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நாளைக்கு வா பணம் தருகிறேன் என்று ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால் இன்றைக்கு இரவே அவருக்கென்று பணத்தை ஒதுக்கி வைக்கமுடியும்.
குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு சண்டை, சச்சரவுகள் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள், கூட்டுக் குடும்பத்தில் தொடர்ந்த முரண்பாடுகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்டிருந்த பிணக்குகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதுகலமும் இருக்கும்.
குடும்பம் உண்டாகாத இளையபருவத்தினருக்கு உடனடியாக வாழ்க்கைத் துணை அமைந்து குடும்பஸ்தன் ஆவீர்கள். ஏற்கனவே முதல் வாழ்க்கை முரணாகிப் போனவர்களுக்கு இரண்டாம் திருமணம் நடந்து அந்த அமைப்பின் மூலம் நிம்மதியும், சந்தோஷமும் நீடித்து இருக்கும்.
நீண்ட நாட்களாக குழந்தைச்செல்வம் இல்லாத தம்பதிகளுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும். இதுவரை குடும்பத்திற்கு வாங்க முடியாத அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள்.
குறிப்பிட்ட சிலருக்கு ஹவுசிங் லோன் போன்றவைகளின் மூலம் வீடுவாங்கும் அமைப்பு ஏற்பட இருக்கிறது. வங்கிக்கடன் ஏற்படும். ஏற்கனவே இருக்கின்ற வாகனத்தையோ, சொத்தையோ விற்றுவிட்டு மேற்கொண்டு கடன் வாங்கி அதை விட நல்ல வாகனமோ, சொத்தோ வாங்குவீர்கள்.
நடுத்தரவயது தாண்டிய விருச்சிக ராசிக்காரர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் தற்போது கண்டுபிடிக்கப் படும் என்பதால் அவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுவது நல்லது. வயதானவர்கள் சிறு உடல் நல பிரச்னைகளையும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுவதன் மூலம் சிறிய வியாதி பெரிதாகாமல் தற்காத்துக் கொள்ளலாம்.
வருடத்தின் பிற்பகுதி மாதங்களில் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற அதிர்ஷ்ட விளைவுகளில் குறிப்பிட்டதக்க அளவிற்கு பணலாபம் கிடைக்கும். அதேநேரத்தில் இந்த பலன் எல்லோருக்கும் பொருந்தாது. ஜனன கால தசாபுக்தி அமைப்புகள் சரியாக இல்லாத விருச்சிக ராசிக்காரர்களுக்கு பங்கு சந்தையில் சரிவுகள் வரலாம் என்பதால் இதில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
வெளிநாட்டுக்கு போக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நன்மைகளை அடைவீர்கள். வயதானவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்கோ, பேரன், பேத்தி பிரசவத்திற்கோ வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
வருடம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.
முக்கியமான கிரகங்கள் அனைத்தும் தற்போது விருச்சிக ராசிக்கு சாதகமான நிலையில் இருப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் தயக்கத்தினை விட்டொழித்து முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.
அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், இயக்கும் வேலையில் உள்ளவர்கள் போன்ற துறையினர் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கோ இது மிகவும் நல்ல நேரம்.
கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.
விவசாயிகளுக்கு இந்த வருடம் நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுபநிகழ்ச்சிகளும் இருக்கும். குறிப்பாக பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.
அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் விலகும். உயர்கல்வி கற்க இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் விலகும். ஒரு சிலர் ஏற்கனவே இருக்கும் படிப்புத்தடை விலகி தொடர்ந்து படிப்பீர்கள். வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது.
குலதெய்வத்தின் அருள் இந்த வருடம் உங்கள் குடும்பத்திற்கு பூரணமாக கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள். நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும்.
2021-ம் வருடத்தில் விருச்சிக ராசிக்கு மிகச்சிறந்த நல்ல பலன்களும் கவுரவம், அந்தஸ்து உயரும் சம்பவங்களும் நடக்கும் என்பதும் இதுவரை பொருளாதார சிக்கலில் இருந்து வந்தவர்கள் அதிலிருந்து மீண்டு நல்ல பணவரவை அடைவீர்கள் என்பதும் உறுதி.
கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பீர்கள். குழந்தைகளால் கவலை இருக்காது. குடும்பத்தில் பொருட் சேர்க்கை இருக்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த பனிப்போர் விலகி இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டு ஒத்துழைக்க ஆரம்பிப்பீர்கள்.
தெய்வத்தின் அருளும், கிரகங்களின் ஆசியும் இந்த வருடம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைப்பதால் இந்த வருடம் நீங்கள் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி பெற்று உங்கள் வாழ்வில் நல்ல ஒரு வருடமாக இது அமையும். மொத்தத்தில் விருச்சிக ராசிக்கு இந்த புத்தாண்டு நன்மைகளை செய்வதோடு எதிர்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்யும்.
“ஜோதிடக்கலை அரசு”
ஆதித்ய குருஜி
சார்வரி வருட பலன்
சார்வரி வருடத் தொடக்கத்தில், உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தன பஞ்சமாதிபதியான குரு இணைந்திருக்கிறார். தன ஸ்தானத்தில் சனி, சந்திரன், கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். தொழில் ஸ்தானாதிபதி சூரியன் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அஷ்டமாதிபதி புதன் மீனத்திலும், 8-ம் இடத்தில் ராகு சஞ்சரிக்க தமிழ் வருடம் தொடங்குகிறது. சாதாகமான நிலையில் கிரகங்கள் உலாவரும் நிலையில், ஆண்டு தொடங்குவதால் சாதனை நிகழ்த்தி சரித்திரம் படைப்பீர்கள்.
ராகு-கேது பெயர்ச்சி
1.9.2020 அன்று உங்கள் ராசிக்கு கேதுவும், சப்தம ஸ்தானத்திற்கு ராகுவும் சஞ் சரிக்கப் போகிறார்கள். ஜென்ம கேதுவால் நன்மைகள் விளையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுக்ரன் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் கல்யாணக் கனவு நனவாகும். வீடு மாற்றம் உள்ளிட்டவை எதிர்பார்த்தபடி நடைபெறும். வாழ்க்கைத் துணையின் வருமானமும் சேரும்.
குருப்பெயர்ச்சி
15.11.2020 அன்று குரு பகவான், மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது குருவுக்கு நீச்ச வீடாகும். குரு நீச்சம் பெற்றாலும் பரிவர்த்தனை யோகத்தோடு சில மாதங்களும், தனுசு ராசியில் தன் சொந்த வீட்டில் வக்ர இயக்கத்தில் சில மாதங்களும் சஞ்சரிக்கப் போவதால் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும். பொருளதார வளர்ச்சி அதிகரிக்கும். புதிய பாதை புலப்படும். இல்லறம் நல்லறமாக அமையும். சுப காரியங்கள் இனிதே நடந்தேறும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் வரலாம். ஆபரண சேர்க்கை உண்டு. நிச்சயிக்கப்பட்ட காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும்.
சனிப்பெயர்ச்சி
26.12.2020 அன்று வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் மகர ராசிக்குச் செல்கிறார். இதனால் உங்களுக்கு ஏழரைச் சனி முழுமையாக விலகுகிறது. இனி தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். துணையாக இருக்கும் நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவார்கள். வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் தொல்லை அகலும். திடீர் திருப்பங்கள் பல வந்து சேரும்.
குரு வக்ரமும், அதிசாரமும்
13.5.2020 முதல் 7.7.2020 வரை குருபகவான் அதிசாரமாகவும், வசீகரமாகவும் சஞ்சரிக்கிறார். 8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசியில் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் சனியும் வக்ர கதியில் அவரோடு இணைந்து சஞ் சரிக்கிறார். மீண்டும் குருபகவான் 6.4.2021-ல் கும்ப ராசிக்கு அதிசாரத்தில் செல் கிறார். இதன் விளைவாக குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வீடு கட்டுவதில் இருந்த தடை அகலும். குடும்ப உறுப்பினர்களின் குணமறிந்து நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
வழிபாடு
செல்வ வளம் பெருக சதுர்த்தி விரதமிருந்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
ஏழரைச்சனி விலகியது, இனிய வாழ்க்கை மலர்கிறது!
விருச்சிக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், 26.12.2020 அன்று முன்னேற்றத்தைக் கொடுக்கும் மூன்றாமிடத்திற்கு செல்கின்றார். இப்பொழுது ஏழரைச்சனி விலகி விட்டது. எனவே இனி, தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். துணையாக இருக்கும் நண்பர்களும், உறவினர்களும் தோள்கொடுத்து உதவுவர். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. வெற்றிகள் ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான், இப்பொழுது வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். உங்களின் நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேறும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குரு உங்கள் ராசிக்கு, தன -பஞ்சமாதிபதியாக விளங்குபவர். அவரோடு இப்பொழுது சனி பகவான் இணைந்து ‘நீச்சபங்க ராஜயோக’த்தை உருவாக்குகின்றார். எனவே மனம்போல மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். செல்வச் செழிப்போடு கூடிய வாழ்க்கை மலரப்போகிறது.
வாய்ப்புகள் வாசல் தேடி வரும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனி, முன்னேற்றத்தின் முதல்படிக்கு செல்ல வைக்கப்போகிறார். இதுவரை ஏற்பட்ட தடைகளும், தாமதங்களும் அகலும். தனவரவு அதிகரிக்கும். வாழ்க்கைத் தேவை ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். எதிரிகள் விலகுவர். சகோதர ஒற்றுமை பலப்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புடன் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பதவி வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைத்து உயர் பதவிகளும், சம்பள உயர்வும் கிடைக்கும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 5, 9, 12 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. சகாய ஸ்தானத்தில் வீற்றிருந்து பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், பயண ஸ்தானம் ஆகியவற்றைச் சனி பார்க்கிறார். பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு என்ன என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ, அவை அனைத்தும் கிடைத்து நிறைவான வாழ்க்கை உருவாகப் போகின்றது. குறிப்பாக திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். துள்ளி விளையாடும் பிள்ளைச் செல்வம் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். புதிய சொத்துக்களின் சேர்க்கையும், வீடுகட்டிக் குடியேறும் அமைப்பும் மனம்போல நடைபெறும்.
சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால், பெற்றோர் வழியில் பிரியம் கூடும்.
சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால், சுப விரயம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, அற்புதமான பலன்கள் வந்து சேரும். உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியாக சூரியன் விளங்குவதால் புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். அடுக்கடுக்காக ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். அதுமட்டுமல்லாமல் புதிதாக வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, செய்யும் தொழில் சீராக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரப் போட்டிகள் அகலும். வீடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் விரும்பிய வண்ணம் வந்து சேரும். நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வுகள் இப்பொழுது கிடைக்கும். குடும்பத்தை விட்டுப்பிரிந்து வேலைபார்த்து வந்தவர்கள், இனி ஒன்றுசேரும் வாய்ப்பு உண்டு. இக்காலத்தில் கும்ப ராசிக்கு சனி செல்கின்றார். அர்த்தாஷ்டமச் சனியாக சனி பகவான் வந்தாலும், கும்ப ராசி அவருக்கு சொந்த வீடு என்பதால் நன்மைகளையே வழங்குவார். சொல்லும் சொற்கள் எல்லாம் வெல்லும் சொற்களாக மாறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி வருகின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வெற்றி நடைபோடும். வருமானம் திருப்தி தரும். மீனத்தில் குரு வரும்பொழுது, உங்கள் ராசியையே பார்க்கப் போகின்றார். எனவே ஆரோக்கியம் சீராகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, கொஞ்சம் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரிப்பு குறையும். கொடுத்த கடன்களால் பிரச்சினைகள் ஏற்படும்.
ராகு-கேது பெயர்ச்சிக்காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் புதியபாதை புலப்படும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வழக்கமான பணிகளில் ஏற்பட்ட சுணக்கம் அகலும். 12-ல் கேது சஞ்சரிப்பதால் ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவினர் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். ஆன்மிகத்திற்கு என்று அதிக தொகையைச் செலவிடு வீர்கள். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
சதுர்த்தி விரதமிருந்து ஆனைமுகப் பெருமானை வழிபடுவதோடு, சஷ்டி அன்று முருகப்பெருமானையும் வழிபட்டு வாருங்கள். இல்லத்து பூஜை அறையில் வராகி படம் வைத்து, வராகி கவசம் பாடி வழிபட்டால் வசதி வாய்ப்புகள் பெருகும். வளர்ச்சியும் அதிகரிக்கும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
15-11-2020 முதல் 13-11-2021 வரை
இரண்டில் வந்தது குரு பகவான், இனிமேல் வெற்றிக்கொடி பறக்கும்!
விருச்சிக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று மூன்றாமிடத்திற்கு வருகின்றார். ‘3-ம் இடத்தில் குரு வரும்பொழுது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்’ என்பார்கள். 3-ம் இடத்தில் குரு நீச்சம் பெற்றாலும், அவர் பார்வை பதியும் இடங்கள் சிறப்பாக அமைவதால் சந்தோஷங்களையே நாளும் சந்திக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. தொழில் வளர்ச்சியும், திருப்திகரமான வருமானமும் ஏற்படும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து நல்ல காரியங்களை முன்னின்று நடத்திக்கொடுப்பர். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். இடையில் குரு பகவான் 4-ம் இடத்திற்கும் செல்கின்றார். சிலநாட்கள் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலம்பெற்றிருப்பவர்களுக்கு தொழில் விருத்தியும், செல்வாக்கும் அதிகரிக் கும். வக்ர காலத்தில் வாழ்க்கைப் பாதை சீராக, குரு கவசம் பாடி, குரு பகவானை வழிபடுவது நல்லது.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களையும் பார்க்கின்றார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் பதிவதால் இல்லறம் நல்லறமாக அமையும். வாழ்க்கையில் வசந்தம் உருவாகும். மனையில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு. தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். ஏழரைச்சனி விலகும் நேரம் என்பதால் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலம் அனுகூலமான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீடு, வாகனங்கள் வாங்க உதவிகேட்டு விண்ணப்பித்திருந்தால், நல்ல பதில் இப்பொழுது கிடைக்கும்.
குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாக்ய ஸ்தானம் பலம் பெறுகின்றது. எனவே, எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமென்று நினைத்தீர்களோ அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தந்தைவழி உறவு வலுப்பெறும். தீர்த்த யாத்திரைகள், தெய்வ வழிபாடுகள் போன்றவற்றில் நம்பிக்கை அதிகரிக்கும். முன்னோர்கள் கட்டிவைத்த ஆலய திருப்பணிகளை முறையாகக் கவனித்து, மக்கள் சேவையின் மூலம் மகத்தான புகழைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றிபெறும். ‘படித்து முடித்த படிப்பிற்கேற்ற வேலை இல்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கும்.
குருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால், லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. தொட்டது துலங்கும், தொழில் வளம் சிறக்கும். பணியாளர்கள் இப்பொழுது உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். சங்கிலித்தொடர் போல வந்த கடன் சுமை குறையும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். பூமி வாங்கும் யோகம் முதல் புதிய தொழில் தொடங்கும் யோகம் வரை எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். மூத்த சகோதரத்தின் அனுகூலம் உண்டு.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு அதிபதியானவர், சூரியன். அதாவது தொழில் ஸ்தானாதிபதியாக விளங்குகிறார். அவரது ஸ்தானத்தில் தன பஞ்சமாதிபதியான குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். பொருளாதார நிலை உச்சம்பெறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை சம்பந்தமாக முயற்சி செய்திருந்தால், அதில் வெற்றி கிடைத்து உதிரி வருமானங்களும் வந்து சேரும். ‘பிள்ளைகளுக்கு அரசு வேலை கிடைக்கவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது அவர்கள் எழுதும் தேர்வில் வெற்றி கிடைத்து அரசாங்க வேலை கிடைக்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விரும்பிய பதவி உயர்வும், கேட்ட சலுகைகளும் கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கு அதிபதியானவர், சந்திரன். எனவே அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை முடிவடையாத காரியங்கள், இப்பொழுது எளிதில் முடிவடைந்துவிடும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவும், அருகில் உள்ள நண்பர்களின் ஆதரவும் கூடுதலாகக் கிடைக்கும் நேரமிது. தொழிலை விரிவு செய்யும் முயற்சி பலன் அளிக்கும். வெளிநாட்டு தொடர்புகளாலும் லாபம் உண்டு. என்றைக்கோ குறைந்த விலையில் வாங்கிப் போட்ட சொத்து, இப்பொழுது நினைக்க இயலாத அளவிற்கு விலை உயர்ந்து அதன் விற்பனை மூலம் ஒரு பெரும் தொகை உங்களுக்கு கிடைக்கலாம். எண்ணங்களுக்கு வலிமை தரக்கூடியவர் சந்திரன் என்பதால் இக்காலத்தில் நேர்மறைச் சிந்தனைகளையே அதிகம் நினைப்பது நல்லது.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆவார். தைரியகாரகன் என்றும், சகோதர பூமிகாரகன் என்றும் செவ்வாயை அழைப்பது வழக்கம். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சகோதரர்களின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். முன்னோர் வழிச் சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆடை, அணிகலன்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வதாகச் சொல்வார்கள். உடன்பிறப்புகளின் திருமணங்களை முன்னின்று நடத்திவைப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊர் மாற்றங்கள், இடமாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்துசேரும். புதிய வாகனங்கள் வாங்கி மகிழும் யோகம் உண்டு.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அவர் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. குரு பார்வைக்கு பலன் அதிகம் என்பதால், அந்த மூன்று இடங்களுக்குரிய ஆதிபத்யங்களும் முன்னேற்றத்தை வரவழைத்துக் கொடுக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிநிரந்தரம் பற்றிய சலுகைகள் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு இடமாறுதல்கள் கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். வெளிநாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். இந்த வக்ர காலத்தில் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது நல்லது. தன பஞ்சமாதிபதியான குரு பகவான் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படலாம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. குடும்பச்சுமை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுடைய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். அப்படி ஒப்படைத்தால் அது மீண்டும் உங்களிடமே வந்து சேரும். விரயங்கள் அதிகரிக்கும் இந்த நேரத்தில், உங்களுக்கு அதிகம் விழிப்புணர்ச்சி தேவை.
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சென்ற முறை அஷ்டம ராகுவாக இருந்து கடுமையான பலன்களைக் கொடுத்து வந்த ராகு அந்த சாதகமற்ற நிலையில் இருந்து விலகி இம்முறை ஏழாமிடத்திற்குச் செல்கிறார். இதுவும் ஒரு சுமாரான நிலைதான் என்றாலும் அஷ்டம ராகு போலத் துன்பங்கள் இருக்காது என்பதால் ஒருவகையில் இது உங்களுக்கு நல்ல அமைப்புத்தான்.
அதேபோல இதுவரை உங்களின் இரண்டாமிடத்தில் இருந்து பொருளாதாரச் சிக்கல்களை கொடுத்து வந்த கேதுவும் இப்போது உங்கள் ராசிக்கே மாறுகிறார். ராசியில் இருக்கும் கேது சுபத்துவமும் சூட்சும வலுவும் பெறுவதால் கேதுவால் உங்களுக்கு கெடுதல்கள் இல்லாமல் நன்மைகள் இருக்கும்.
சென்ற காலங்களில் விருச்சிக ராசிக்கு இருந்து வந்த சரியில்லாத கோட்சார நிலையினால் சிலருக்கு கசப்பான அனுபவங்களும், சிக்கல்களும், கடன் தொல்லைகளும், உடல்நலப் பிரச்னைகளும் இருந்து வந்தன. தற்போதைய ராகுகேது பெயர்ச்சிக்குப் பிறகும் மாறும் கிரக நிலைகளால் உங்களுடைய அந்தஸ்து, கௌரவம், சிந்தனை, செயல்திறன் அனைத்தும் பொலிவடையும். உங்கள் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும்.
விருச்சிகத்திற்கு இனி என்றும் வேதனைகள் இல்லை. நீங்கள் கஷ்டப்பட்ட காலங்கள் போய்விட்டது. அடுத்தடுத்து நடக்க இருக்கும் கோட்சார கிரக மாறுதல்கள் அனைத்தும் இனி உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்யும். இனி விருச்சிக ராசியினர் அனைவரும் நன்றாக இருக்கப் போகிறீர்கள்.
இந்தப் பெயர்ச்சியால் ஏழாமிடத்திற்கு ராகு மாறினாலும் வரும் நவம்பர் மாதம் முதல் மூன்றாமிடத்திற்கு மாறும் குருவின் பார்வையை பெறப்போவதால் உங்களுக்கு கெடுபலன்களை ராகு செய்யமாட்டார். இப்போது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் அனைவரையும் சந்தோஷமாக இருக்க வைப்பதே குரு பார்த்த ராகுவின் பலனாக இருக்கும்.
ஏழில் சுபத்துவமாக அமரும் ராகுவால் ஏற்கனவே மணவாழ்வில் குறைகள் இருந்தவர்கள் வாழ்க்கைத் துணையால் நிம்மதிக் குறைவை சந்தித்தவர்கள் இனிமேல் அது நீங்கப் பெறுவீர்கள். கருத்துவேறுபாடுகளாலோ, வேலை விஷயமாகவோ பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேர்வீர்கள்.
கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழ்நிலை உருவாகி தொழில் மேன்மை பெறும். தவறான மூன்றாம் நபர்களால் பிரிக்கப்பட்ட நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் ஒன்று சேர்வீர்கள். சண்டை போட்டுக் கொண்டிருந்த எதிர்கால தம்பதியினர் தவறுகளை உணர்ந்து ஒருவருக்கொருவர் குணங்களை மாற்றிக் கொள்வீர்கள். இதுவரை தாமதமான இளைய பருவத்தினருக்கு உடனடியாக திருமணம் கூடி வரும்.
இதுவரை உங்களை விட்டு விலகியிருந்த சுறுசுறுப்பு மீண்டும் உங்களிடம் வந்து ஒட்டிக்கொள்ளும்\. தவறான முடிவுகளை எடுத்து வருந்திக் கொண்டிருந்தவர்கள் இப்போது உங்களை சீர்ப்படுத்திக் கொள்வீர்கள். ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தற்போது நிவாரணம் கிடைக்கும்.
உங்கள் சிந்தனை தெளிவாக இருக்கும். பேச்சு சிறக்கும், செயல்திறன் கூடும், உங்களுடைய நல்ல வார்த்தைகளைக் கொண்ட பேச்சுக்களால் அடுத்தவர்களால் விரும்பப்படுவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை இருந்து வந்த தாழ்வு மனப்பான்மை இனிமேல் நீங்கும்.
கேதுவின் முக்கிய பலனாக குறிப்பிட்ட சில விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். சிலருக்கு கோவில் பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். சிலர் சிதிலமடைந்து கவனிப்பாரற்று கிடைக்கும் பழைய கோவில்களை புனருத்தானம் செய்வித்து அதன் மூலம் ஏழு தலைமுறைக்குத் தேவையான புண்ணியத்தை சேர்த்துக் கொள்வீர்கள்.
உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனி உங்களிடம் நெருங்காது.
அடுத்தடுத்து வரும் நல்ல கிரக நிலைகளால் புதிய மனிதரைப் போல உணருவீர்கள். உங்களின் அந்தஸ்து மதிப்பு அனைத்தும் உயரும் நேரம் இது. அடுத்தவர்களால் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். நீங்கள் தொட்டது துலங்கும் நேரம் இது. நீங்கள் நினைத்தது நடக்கும் காலம் இது. பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்வீர்கள்.
பரிகாரங்கள்
ராகு கேதுக்களால் ஏற்படும் நன்மைகளைக் கூட்டிக் கொள்ள ஒரு முறை ஸ்ரீகாளஹஸ்தி திருநாகேஸ்வரம் குன்றத்தூர் நாகநாதசுவாமி திருக்கோவில் காஞ்சிபுரம் சித்திரகுப்தன் ஆலயம் போன்ற திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்.
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
(செல்: 8870 99 8888)