
இன்றைய ராசி பலன்கள்
வார பலன்கள்
15.1.21 முதல் 21.1.21 வரை
சந்திரன், சூரியன், புதனால் நன்மை ஏற்படும். சாஸ்தா வழிபாடு துன்பம் போக்கும்.
அசுவினி: உங்கள் பக்க நியாயத்தை மேலதிகாரி புரிந்து கொள்வார். எதிலும் பயமின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகள் உங்களிடம் வாக்குவாதம் செய்வார்கள். புதிய வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்லுங்கள்.
பரணி: முன்பு இருந்த தடைகள் அகலும். உங்களின் இலக்கை நோக்கி செல்வீர்கள். எதிர்காலத்தில் நன்மை தரும் செயல்களில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு தந்தையின் அன்பும், ஆதரவும் உண்டு.
கார்த்திகை 1: பிள்ளைகளின் திருமணம் பற்றிய கவலை தீரும். நீங்கள் நம்பிக்கை வைத்திருந்த நபர் உங்களை பற்றி புறம் கூறுவார். அதனால் வருத்தம் ஏற்படக்கூடும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதி தரும்.
தமிழ் மாத ஜோதிடம்
ஆண்டு பலன் - 2021
மேஷ ராசிக்காரர்களுக்கு 2021 ம் வருடம் மிகவும் நல்ல பலன்களை செய்யும். கெடுபலன்கள் எதுவும் இந்த வருடம் நடக்க வாய்ப்பில்லை. வருடத்தின் ஆரம்ப நாளிலும், வருடம் முழுமையும் கிரக நிலைமைகள் நன்றாக இருப்பதால் 2021 ஆம் வருடத்தை நீங்கள் வரவேற்கவே செய்வீர்கள்.
வருடம் முழுவதும் இரண்டில் உள்ள சுப ராகுவின் தயவால் சிலருக்கு தொழில் விஷயமாக இஸ்லாமிய நாடுகளுக்குச் செல்வதும், கிறிஸ்துவ, இஸ்லாமிய நண்பர்கள் பங்குதாரர்கள் மூலமாக நன்மைகள் நடப்பதும் உண்டு. இதுவே ஜாதகர் இஸ்லாமியர் அல்லது கிறித்துவராக இருந்தால் அவருக்கு இந்து மத நண்பர்கள் மூலம் மேன்மைகளும் உதவிகளும் இருக்கும்.
அடுத்து தற்போது சாதகமற்ற பலனைத் தரக்கூடிய இடமான பத்தில் இருக்கும் குருபகவான் ஏப்ரல் மாதம் அதிசாரம் எனும் அமைப்பில் சில மாதங்களுக்கு, யோகம் தரும் பதினொன்றாமிடத்திற்கு மாறி பின் மீண்டும் தனது நிலைக்கே திரும்பப் போகிறார்.
அதிசார நிலையில் இருக்கும் ஒரு கிரகம் தனது நல்ல, கெட்ட பலனை முழுமையாகத் தராது என்பது ஒரு விதி. அதன்படி ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மேஷத்திற்கு குருவின் சாதகமற்ற பலன்கள் இருக்காது. எனவே எப்படிப் பார்த்தாலும் இந்த வருடம் நல்ல பலன்களை மட்டுமே உங்களுக்கு தருகின்ற வருடமாக இருக்கும்.
உங்கள் உடலும், மனமும் இந்த வருடம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். முகத்தில் சந்தோஷம் தெரியும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். உங்களில் சிலருக்கு சென்ற காலங்களில் இருந்து வந்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இந்த வருடம் மாறும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி நல்லவைகள் இந்த வருடம் நடக்கும். பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் இன்னும் மேன்மையான நல்ல பலன்கள் உண்டு.
ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் விஷயங்களாக மாறும். பணிபுரியும் இடங்களில் நிம்மதியான சூழல் இருக்கும்.
அனைத்து மேஷ ராசியினருக்கும் பொருளாதார மேன்மைகளும், பணத் தட்டுப்பாடு இல்லாத நிலைமையும் இருக்கும். வருடம் முழுவதும் ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவங்கள் சுபத்துவ நிலைகளில் இருப்பதால் உங்களுடைய வாக்குறுதிகளை காப்பாற்ற இயலும். குறிப்பாக கடனைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை செலுத்த முடியும். ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் நிறைவேற்றுவீர்கள்.
நீண்ட நாட்களாக திருமணமாகாமலோ அல்லது திருமணத்தை எடுத்துச் செய்ய குடும்பத்தில் சரியான நபர்கள் இல்லாமலோ இருப்பவர்களுக்கும், குடும்பத்தில் மூத்தவர்களாக பிறந்தவர்களுக்கும் அக்டோபர் மாதத்திற்குள் நல்ல செய்திகள் இருக்கும். குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.
அரசு ஊழியர்களுக்கு நன்மைகள் உண்டு. அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் நல்லபலன்கள் நடக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் தேடி வரும்.
பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணவரவு தடைபடாது.
வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு.
தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக் கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த வருடம் நல்ல பலன்களைத் தரும்.
இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.
எல்லாவகையிலும் வருமானம் நன்றாக இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல்நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவார்கள்.
புனித யாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு காசி கயா ரிஷிகேஷ் போன்ற வடமாநில தீர்த்த யாத்திரைகளும் ஆன்மிக சுற்றுலாக்களும் உண்டாகும். தெய்வ தரிசனங்களும் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகமாகும்.
நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் உடனடியாக அந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம் குலதெய்வத்தை தரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை என்பது சித்தர்களின் வாக்கு.
மகன் மகள்களால் இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும். அவர்களுக்குத் தேவையான விஷயங்களை தாமதம் இன்றி இனிமேல் செய்து கொடுக்க முடியும். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆனாலும் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதி நிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது.
பெண்களுக்கு தங்கம் மற்றும் வைரத்திலான கழுத்துநகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. இளம் பெண்களுக்கு தாலிபாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள்.
பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்து வந்த தடைகள் மாறி சொத்து விஷயங்களில் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போங்கள். ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. உங்களில் சிலருக்கு கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம்.
இதுவரை மனதில் இருந்துவந்த எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. இனம்புரியாத கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் இனிமேல் புது உற்சாகம் அடைவீர்கள். இதுவரை இருந்து வந்த கெட்ட விளைவுகள் இனி இருக்காது. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு சண்டை, சச்சரவுகள் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள், கூட்டுக் குடும்பத்தில் தொடர்ந்த முரண்பாடுகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்டிருந்த பிணக்குகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதுகலமும் இருக்கும்.
இதுவரை உங்களைப் பிடிக்காமல் எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள். வெளியிடங்களில் உங்களின் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும்.
வருடத்தின் பிற்பகுதி மாதங்களில் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற அதிர்ஷ்ட விளைவுகளில் குறிப்பிட்டதக்க அளவிற்கு பணலாபம் கிடைக்கும். அதேநேரத்தில் இந்த பலன் எல்லோருக்கும் பொருந்தாது. ஜனன கால தசாபுக்தி அமைப்புகள் சரியாக இல்லாத மேஷ ராசிக்காரர்களுக்கு பங்குச்சந்தையில் சரிவுகள் வரலாம் என்பதால் இதில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மொத்தத்தில் சில தடைகளுடன் உங்கள் காரியங்கள் நிறைவேறினாலும், மேஷ ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நல்லபடியாக நடக்கப் போகும் வருடமாக இது இருக்கும்.
“ஜோதிடக்கலை அரசு”
ஆதித்ய குருஜி
சார்வரி வருட பலன்
சார்வரி வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10-ம் இடத்தில் குருவோடு இணைந்து குரு-மங்கள யோகத்தை உருவாக்குகிறார். உங்கள் ராசியில் பஞ்சம ஸ்தானாதிபதி சூரியன், உச்சம் பெற்றிருக்கிறார். தன ஸ்தானத்தில் சுக்ரன் சொந்த வீட்டில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். பிதுர்ரார்ஜித ஸ்தானமான 9-ம் இடத்தில் சனி, சந்திரன், கேது ஆகிய மூன்று கிரகங்களும் இணைந்திருக்கின்றன. இதனால் கூட்டுக் கிரக யோகமும், சனி - சந்திர யோகமும் உருவாகிறது. சகாய ஸ்தானத்தில் ராகுவும், விரய ஸ்தானத்தில் புதனும் வீற்றிருக்க, புத்தாண்டு தொடங்குகிறது. நான்கு கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக் கின்றன. 6-க்கு அதிபதி புதனும், 12-க்கு அதிபதியான குருவும் நீச்சம் பெற்றிருப்பது யோகம்தான். வருடத் தொடக்கமே வசந்தமாக அமையும்.
ராகு -கேது பெயர்ச்சி
1.9.2020 அன்று உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு ராகுவும், 8-ம் இடத்திற்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள்.எனவே சேமிப்பு உயரும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். மனக்குழப்பம் அகலும்.கேதுவால் விரயங்கள் அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும். சுபவிரயங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆரோக்கியத்தில் மட்டும் அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்படும். மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.
குருப்பெயர்ச்சி
15.11.2020 அன்று மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். 12-ம் இடத்திற்கு அதிபதியான குரு, அங்கு நீச்சம் பெறுவதால் யோகம் சேரும். விரயாதிபதி நீச்சம் பெறுவதால், சில நன்மைகளை செய்வார். குரு 9-ம் இடத்திற்கும் அதிபதி என்பதால், தந்தை வழியில் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்காது. அதேநேரம் குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சுப காரியங்கள் பல, இல்லத்தில் நடைபெறும். தாயின் உடல்நலம் சீராகும். பகையை வெல்வீர்கள். தொழில் புரிபவர்களுக்கு, பணியாளர் தொல்லை அகலும்.
சனிப்பெயர்ச்சி
26.12.2020 அன்று சனிப்பெயர்ச்சி நிகழ இருக்கிறது. அன்றைய தினம் உத்ராடம் 2-ம் பாதத்தில், உங்கள் ராசிக்குப் பத்தாம் இடமான மகர ராசிக்கு வாக்கிய கணித பஞ்சாங்கம் ரீதியாக சனிபகவான் பெயர்ச்சியாகிறார். தொழிலில் தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். அளவோடு நடந்த தொழில் இனி ஆதாயம் தரும் விதத்தில் நடக்கலாம். அரசு வேலை கிடைப்பதற்கான சூழ்நிலை தென்படும். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை.
குரு வக்ரமும், அதிசாரமும்
13.5.2020 முதல் 7.7.2020 வரை குரு பகவான் அதிசாரமாகி வக்ரம் பெற்று சஞ் சரிக்கிறார். 8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசியில் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் சனியும் வக்ர கதியிலேயே அவரோடு இணைந்து சஞ்சாரம் செய்கிறார். மீண்டும் குருபகவான் 6.4.2021-ல் கும்ப ராசிக்கு அதிசாரத்தில் செல்கிறார். இவற்றின் விளைவாக வரும் மாற்றங்கள், நன்மை வழங்கும். சிலநேரம் மனதை குழப்பமடையவும் செய்யும். வழிபாடுகள்அவசியமான தருணம் இது.
வழிபாடு
சதுர்த்தி திதி அன்று விநாயகரை வழிபட்டு வருவதோடு, யோகபலம் பெற்ற நாளில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று தரிசனம் செய்து வாருங்கள்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்
மேஷ ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், தொழில் ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கப்போவது யோகம்தான். இதனால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கின்றார். அவரோடு இப்பொழுது சனியும் சேருவதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ ஏற்படுகின்றது. எனவே சனியால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்க, குருவின் அனுகூலமும் கைகொடுக்கும்.
தொழிலில் பணவரவு கூடும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு வரும் சனி பகவானால் தொழில் வளர்ச்சி சிறப்பாக அமையும். கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுக்கும் ஆற்றல் சனி பகவானுக்கு உண்டு. எனவே தொழிலில் லாபத்தை அள்ளிக்கொடுப்பர். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 4, 7, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. அதன்படி பூமி, சுகம், தாய், கல்வி, வியாபாரம், களத்திரம், பயணம், விரயம் ஆகியவற்றைக் குறிக்கும் 4-ம் இடத்தில், சனியின் பார்வை பதிவதால் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படலாம். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. சனியின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடிவரும். ஏற்கனவே பேசி கைவிடப்பட்ட வரன்கள், மீண்டும் தேடிவரலாம். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். உறவினர்களோடு மனம் விட்டுப் பேசி சில பிரச்சினைகளுக்கு நல்ல முடிவெடுப்பீர்கள். சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயணங் கள் அதிகரிக்கும். இடமாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும்பொழுது, பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் வந்துசேரும். சூரியன் 5-ம் இடத்திற்கு அதிபதியானவர். அவரது சாரத்தில் சனி சஞ்சரிக்கும்பொழுது, பொதுவாழ்வில் புகழ்கூடும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சந்திரன். எனவே இக்காலத்தில் இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் போது, ராசிநாதன் காலில் சனி உலா வருவதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. இடையில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கின்றார். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். லாபமும் கிடைக்கும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும்பொழுது, விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். உறவினர்கள் பகை உருவாகலாம். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ஜென்ம குருவாக வருவதால் இடமாற்றங்களும், ஊர்மாற்றங்களும் ஏற்படலாம்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சியாகும்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அதன்படி உங்கள் ராசிக்கு, ஜென்மத்தில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் வருவதால் குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை. வாழ்க்கைத் துணை வழியே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. 8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அந்த நேரத்தில் நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். சிக்கல்களில் இருந்தும், சிரமங்களில் இருந்தும் விடுபடுவீர்கள்.
வெற்றிக்குரிய வழிபாடு
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானுக்குரிய ‘கருநிறக் காகம் ஏறி..’ என்ற சனி கவசப் பாடலைப் பாடி வழிபடுங்கள். அதோடு ஆதியந்தப் பிரபு படத்தை இல்லத்து பூஜை அறையில் வைத்து அருகம்புல் மாலையும், வெற்றிலை மாலையும் அணிவித்து வழிபட்டால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
15-11-2020 முதல் 13-11-2021 வரை
பத்தில் வந்தது குரு பகவான், பதவியில் மாற்றம் உருவாகும்!
மேஷ ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அங்கு சுமார் ஓராண்டு காலம் வீற்றிருந்து, அதன் பார்வை பலனால் உங்களுக்கு நன்மைகளை வழங்குவார். இடையில் சில மாதங்கள் 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கும் செல்கின்றார். குரு வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். பொதுவாக ‘10-ல் குரு வந்தால் பதவியில் மாற்றம் வரும்’ என்பார்கள். நீங்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களாக இருந்தாலும், தொழில் செய்பவராக இருந்தாலும் மாற்றங்கள் வரத்தான் செய்யும். சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலம் பெற்றிருப்பவர்களுக்கு, நல்ல மாற்றங்கள் வரலாம். விரும்பத்தகாத மாற்றங்கள் வருமேயானால், வியாழக்கிழமைதோறும் விரதமிருந்து குருவை வழிபடுவதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக் கொள்ளலாம்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகின்றார். குருவின் பார்வை 2-ம் இடத்தில் பதிவதால் குடும்ப ஸ்தானம் பலப்படுகின்றது. குடும்பத்தில் கொடிகட்டிப் பறந்த பிரச்சினைகள் படிப்படியாக மாறும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால், பகையை வெல்லக்கூடிய ஆற்றல் உங்களுக்கு வந்து சேரும். எதிரிகள் உதிரிகளாவர்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம்(15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானாதிபதியானவர், சூரியன். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, பூர்வ புண்ணியத்தின் பயனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் வந்துசேரும். பாகப்பிரிவினைகள் அனைத்தும் சுமுகமாக முடியும்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
சந்திரன், உங்கள் ராசிக்கு சுக ஸ்தானாதிபதியாவார். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, மிகுந்த நன்மைகளைச் செய்வார். குறிப்பாக தாய்வழி ஆதரவு கிடைக்கும். பெற்றோர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
இக்காலத்தில் குரு பகவான், உங்கள் ராசிநாதன் செவ்வாய் சாரத்திலேயே சஞ்சரிப்பது யோகம்தான். ‘குரு மங்கள யோகம்’ அடிப்படையில் இல்லத்தில் மங்கல காரியங்கள் நிறைய நடைபெறும். பெற்றோர்களின் மணிவிழா, முத்துவிழா, பவளவிழா, பெண் குழந்தைகளின் பூப்புனித நீராட்டுவிழா, திருமண வைபவங்கள் அடுக்கடுக்காக நடைபெறும் வாய்ப்புண்டு. சுபவிரயங்கள் அதிகரிக்கும் இந்த நேரத்தில், அதற்கேற்ப வருமானமும் வந்து கொண்டேயிருக்கும். செவ்வாய் உங்கள் ராசிநாதனாக மட்டுமல்லாமல் அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர். எனவே இக்காலத்தில் இடமாற்றங்கள், வீடுமாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் கூட ஏற்படலாம்.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அவர் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே சகோதர ஒற்றுமை பலப்படும். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். வழக்குகள் சாதகமாக அமையும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். அதுமட்டுமின்றி லாப குருவின் ஆதிக்கத்தால் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். ‘படித்தும் வேலை இல்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கும் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கலாம். அல்லது சுயதொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டலாம். எப்படி இருந்தாலும் இக்காலம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நீங்கள் எதிர்பார்த்த நல்ல தகவலும் வரும் நேரமிது.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. எனவே இக்காலத்தில் நிதானமும், பொறுமையும் அவசியம். எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. நேர்மறை சொற்களையே அதிகம் உபயோகப்படுத்துங்கள். அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்ள வேண்டாம். பிடிவாத குணத்தை தளர்த்திக்கொள்ளுங்கள். கோபத் தைக் குறைத்துக்கொள்வதன் மூலம் முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். வருமானப் பற்றாக்குறை அதிகரிக்கும். சேமிப்புகள் கரையலாம். தொழிலில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணி மாற்றங்கள் திடீரென வரலாம். வழிபாட்டின் மூலம் நன்மைகள் ஓரளவு கிடைக்கும்.
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
மேஷ ராசிக்காரர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 23ம் தேதி நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சி மூலம் சாயாகிரகங்களான ராகு-கேதுக்கள் 2, 8-ம் இடங்களுக்கு மாற இருக்கின்றன.
ஏற்கனவே ராகு-கேதுக்கள் இருந்து வந்த 3, 9-ம் இடங்கள் அதிர்ஷ்டத்தைச் செய்கின்ற நல்ல இடங்கள் என்ற நிலையில் தற்போது மாற இருக்கும் 2, 8-ம் இடங்கள் சாதகமற்ற பலனை தரும் இடங்களாக ஜோதிட மூலநூல்களில் குறிப்பிடப் பட்டிருக்கின்றன.
அதே நேரத்தில் தற்போது ராகு மாற இருக்கும் ரிஷப வீடு அவருக்கு மிகவும் பிடித்த ஒரு சுபரின் வீடு என்பதால் ரிஷபத்தில் அமரும் ராகு நன்மைகளை மட்டுமே செய்வார் எனும் விதிப்படி உங்களுக்கு அந்த பாவகத்தின் தன்மைகளான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் நல்லவைகளை செய்வார்.
இன்னொரு கிரகமான கேது 8-மிடத்திற்கு மாறினாலும் அது உங்கள் ராசிநாதனின் இன்னொரு வீடு என்பதால், இருக்கும் வீட்டின் அதிபதியின் பலன்களை சர்ப்பக் கிரகங்கள் செய்யும் என்ற விதிப்படி உங்கள் ராசிநாதனான செவ்வாயின் பலன்களை மட்டுமே கேது எடுத்து செய்வார்.
எனவே 8-ம் இடத்தில் அமரும் கேதுவால் கெடுதல்கள் எதுவும் நடக்குமோ என்றும் பயப்படத் தேவையில்லை. அதிலும் எட்டாமிடம் தூர இடங்களைக் குறிக்கும் என்பதால் இந்தப் பெயர்ச்சியினால் மேஷ ராசிக்காரர்களுக்கு வெளிநாடுகள், தூர இடங்கள் மூலமான வரவுகள் இருக்கும்.
அதே நேரத்தில் 3, 6, 10, 11 ஆகிய உபசய ஸ்தானங்களை தவிர்த்து வேறு இடங்களில் அமரும் ராகு-கேதுக்கள் அந்த பாவகத்தை கெடுத்துத்தான் நன்மைகளை செய்வார்கள் என்ற விதிப்படி 2-ம் வீட்டில் அமரும் ராகுவால் இந்தப் பெயர்ச்சியின் முதல் ஆறு மாதங்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் இருக்கும்.
எனவே எந்த ஒரு விஷயத்திலும் குறிப்பாக பண முதலீடு விஷயங்களில் அவசரப்பட்டு எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். இது போன்ற காலகட்டங்களில் முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறோம் என்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பியோ, அறிமுகம் இல்லாத நபர்களிடமோ, அனுபவம் இல்லாத கம்பெனிகளிடமோ பணத்தை போட வேண்டாம்.
அதிக வட்டி தருவதாக சொல்லும் கம்பெனிகளில் பணம் போடுவது, அதிக வட்டி தருவதாக சொல்லும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறுவது போன்ற செயல்களை செய்ய சொல்லி ராகு தூண்டுவார் என்பதால் பேராசை பெரும் நஷ்டம் என்பதை புரிந்து கொண்டு பண விஷயத்தில் மன அடக்கத்துடன் இருந்து கொண்டால் இந்தப் பெயர்ச்சி எந்தவித பாதிப்புகளையும் உங்களுக்கு தராது.
அதேநேரத்தில் 8-ம் இடத்தில் அமரப் போகும் விருச்சிக கேது எதிர்பாராத அதிர்ஷ்டம், தனலாபம், பெரியதொகை ஒன்று கிடைப்பது போன்ற விஷயங்களை செய்வார் என்பதால் இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஏதேனும் ஒரு விஷயம் மூலமாக உங்களுக்கு நல்ல தனலாபம் கிடைக்கும்.
ரியல் எஸ்டேட் போன்றவைகளில் வாங்குபவருக்கும், விற்பவருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் மீடியேட்டர் போன்றவர்களுக்கும் கமிஷன், காண்ட்ராக்ட் போன்ற தொழில் அமைப்புகளில் இருப்பவர்களுக்கும் இந்த ராகு-கேது பெயர்ச்சி மிகுந்த நன்மைகளை தரும்.
எட்டாமிடம் விருச்சிகமாகி அங்கே கேது அமர்வதால் எதிர்பாராத அதிர்ஷ்டம், ஒரு பெரிய தொகை திடீரென கிடைத்தல், உறவினர் சொத்து கிடைத்தல், வெளிநாட்டு நன்மை போன்ற பலன்கள் நடந்து ராகுவினால் ஏற்படும் சாதகமற்ற பலன்கள் சரிக்கட்டப்படும் என்பது உறுதி.
இந்தப் பெயர்ச்சியினால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புக்கள் மூலம் உங்களுக்கு வேலைப்பளு அதிகம் வரும். வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். உங்கள் உழைப்பும், லாபமும் திருடு போவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே அதிகமான வட்டிக்கு கடன் வாங்காதீர்கள்.
அஷ்டம கேதுவால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே அதுபோன்ற வேலை அமையவும் வாய்ப்பு உள்ளது. வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். இதுவரை வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வெளிநாடு செல்வீர்கள்.
பரிகாரங்கள்
ஒரு கருப்புநிற விதவைப் பெண்மணி அல்லது ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கு கருப்புநிற ஆடை, நான்கு கிலோ கருப்பு உளுந்து, ஒரு தோல் பை அல்லது முற்றிலும் தோலினால் ஆன செருப்பு ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் தானம் கொடுங்கள்.
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
(செல்: 8870 99 8888)