search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ராணுவ கவசம் போன்ற வாகனம்.. யாத்திரைக்கு தயாராகும் நடிகர் பவன் கல்யாண்
    X

    ராணுவ கவசம் போன்ற வாகனம்.. யாத்திரைக்கு தயாராகும் நடிகர் பவன் கல்யாண்

    • தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ஆந்திர மாநில ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண்.
    • யாத்திரைக்காக தயார் செய்யப்பட்ட வாகன புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரல்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ஆந்திர மாநில ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் வருகிற ஜனவரி மாதம் மாநிலம் தழுவிய யாத்திரை செல்கிறார். நடிகர் பவன் கல்யாண் யாத்திரைக்காக ராணுவ கவச வாகனம் போல பிரத்யேக வாகனம் ஒன்று தயார் செய்யப்படுகிறது. இதற்கு வாராஹி என பெயரிட்டுள்ளனர். சப்த கன்னிகளில் வாராஹி அனைத்து திசைகளையும் காக்கும் தெய்வம். இதனால் அந்த வாகனத்திற்கு வாராஹி என பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த வாகனம் குறித்த படங்களை பவன் கல்யாண் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஐதராபாத்தில் தயாராகி வரும் வாராஹி வாகனத்தை நடிகர் பவன் கல்யாண் நேற்று ஆய்வு செய்து, அதை வடிவமைக்கும் தொழில்நுட்ப நிபுணர்களிடம் சில ஆலோசனைகளையும் வழங்கினார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உயர் பாதுகாப்பு நடவடிக்கையுடன் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பவன் கல்யாணின் சுற்றுப்பயணத்தின் போது ஆளுங்கட்சி மின்விளக்குகளை அணைக்க வாய்ப்பு உள்ளது. எனவே வாகனத்தில் அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வாகனத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    இந்த வாகனத்தில் பவன் கல்யாண் மற்றும் 2 பேர் அமர்ந்து செல்வதற்கு இடம் உள்ளது. ஆந்திர மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் வாராஹி வாகனத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்படும் அதன் பிறகு பவன் கல்யாண் சுற்றுப்பயணத்திற்கு வாராஹி வாகனம் பயன்படுத்தப்படும். பவன் கல்யாண் யாத்திரையின் போது ஆளும் கட்சியான ஜெகன் ரெட்டி கட்சியின் பல்வேறு முறைகேடுகள் அரசாங்கத்தின் தோல்விகளை அம்பலப்படுத்த உள்ளதாக அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர். பவான் கல்யாணின் வாராஹி வாகன படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

    Next Story
    ×