என் மலர்
சினிமா செய்திகள்

சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காததற்கு Red giant-ஐ குற்றம் சொல்லாதீர்கள்- நடிகர் போஸ் வெங்கட்
- தயாரிப்பாளர்களே தங்கள் படங்களை சொந்தமாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று இரவின் விழிகள் விழாவில் நடிகர் போஸ் வெங்கட் கூறினார்.
- இரவின் விழிகள் படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார்.
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் 'இரவின் விழிகள்'. இந்தப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார்.
தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார்.
கன்னடத்தில் வெளியான 'பங்காரா' என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க, விடுதலை படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் மற்றும் வெங்கடேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர்.
சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும், நடனத்தை எல்கே ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர். பாடல்களை அரவிந்த் அக்ரம் எழுதியுள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், போஸ் வெங்கட், நடிகை நமீதாவின் கணவர் வீரா, நடிகை கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில், நடிகர் போஸ் வெங்கட் பேசியதாவது:-
இரவின் விழிகள் படம் ஊமை விழிகள் படம் போல வெற்றியடைய வேண்டும். இயக்குநர் ஆர். வி உதயகுமார், பட ரிலீஸ் பற்றி பேசினார். ரிலீஸ் என்று சொன்னதுமே எல்லோரும் டக்கென திமுக பக்கம் தான் பார்வையைத் திருப்புவார்கள்.
ஒருவேளை ரெட் ஜெயண்ட் பற்றி அவர்கள் சொன்னார்கள் என்றால் அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் ரெட் ஜெயண்ட் படம் தயாரிக்கவில்லையா என்ன ?
என்னுடைய படம் வெளியான போது முதல் வாரம் 200 தியேட்டர்களுக்கு மேல் இருந்தது.. அடுத்த வாரம் 150 தியேட்டர்.. ஆனால் மூன்றாவது வாரம் பல தியேட்டர்களில் என் படம் இல்லை.. 25 நாள் அல்லது 50 நாள் போஸ்டர் ஒட்டுவதற்காக ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்டேன். அந்த வகையில் இப்போது ஒரு படத்தின் ஆயுள் காலம் 10 லிருந்து 20 நாள் என மாறிவிட்டது. அதன் பிறகு ஓடிடி வந்து விட்டது.
ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கித் தராதது நம் மீது உள்ள தவறுதான்.. அவர்கள் உள்ளே வருவதற்கு முக்கியமான ஒரு பாயிண்ட் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






