என் மலர்
கன்னி
2025 ஆவணி மாத ராசிபலன்
கன்னி ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே நேரம் அஷ்டமாதிபதியான செவ்வாய் உங்கள் ராசியில் இருக்கிறார். எனவே பணம் ஒருபுறம் வந்தாலும், மறுபுறம் விரயங்களும் வந்தபடியே இருக்கும். இழப்புகளும் எதிர்பாராத குறுக்கீடுகளும் வந்து கொண்டே இருக்கும். யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். திடீர், திடீரென சோதனைகள் வரலாம். சொன்ன சொல்லை காப்பாற்ற இயலாது. துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.
கடக - சுக்ரன்
ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வருவது மிகவும் அற்புதமான நேரமாகும். பொதுவாக தனாதிபதி வலுவாக இருப்பதால் எந்த காரியமும் செய்யலாம். அந்த அடிப்படையில் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். உயர்மட்டத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு வழிபிறக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு.
சிம்ம - புதன்
ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கும், 10-ம் இடத்திற்கும் அதிபதியானவர் புதன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்போது பல வழி களிலும் விரயங்கள் ஏற்படும். பயணங்கள் அதிகரிக்கும். காலையில் ஒரு ஊர், மதியம் ஒரு ஊர், மாலையில் ஒரு ஊர் என்று செல்லும் விதத்தில் அலைச்சல் அதிகரிக்கும். இதனால் ஆரோக்கியச் சீர்கேடுகள் உருவாகும். நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் உங்களைவிட்டு விலகலாம். நாடு மாற்றம் செய்ய நினைத்தவர்களுக்கு அது தாமதப்படும். வெளிநாட்டில் உள்ளவர்களின் வேலையில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் அது விரும்பும் விதத்தில் அமையாது. அரசியல் களத்தில் உள்ளவர்கள் மக்கள் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள இயலாது.
துலாம் - செவ்வாய்
ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தன ஸ்தானத்திற்கு வந்து, தன் வீட்டைத் தானே பார்க்கப்போகிறார். எனவே சொந்தங்களாலும் நன்மை கிடைக்கும். துணிந்து எடுத்த முடிவுகளால் மற்றவர்கள் ஆச்சரியப்படுவர். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். வருமானப் பற்றாக்குறை அகலும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர்.
சிம்ம - சுக்ரன்
ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்போது விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், ஊர் மாற்றம் உறுதியாகலாம். கொடுக்கல்- வாங்கல்களில் ஏற்பட்ட இடையூறு அகலும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படலாம். அதில் இருந்து விடுபட அனுபவஸ்தர்களின் ஆலோசனை கைகொடுக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த நற்பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு, பழைய வியாபாரம் லாபத்தைப் பெற்றுத் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு, உயர் அதிகாரியிடம் நல்ல பெயர் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல திருப்பம் ஏற்படும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பெண்களுக்கு உடல்நிலையில் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். கவனம் தேவை. உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஆகஸ்டு: 17, 18, 21, 22, 28, 29, செப்டம்பர்: 2, 3, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.






