என் மலர்
விருச்சகம்
2025 புத்தாண்டு ராசிபலன்
தொட்ட காரியங்கள் வெற்றியாகும் விருச்சிக ராசி நேயர்களே!
புத்தாண்டு பிறந்துவிட்டது. உங்கள் ராசிநாதன் செவ்வாய்க்குரிய '9' எண் ஆதிக்கத்தில் உள்ள ஆண்டாக இந்த ஆண்டு அமைவதால், பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சென்ற ஆண்டில் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் இந்த ஆண்டு நடைபெறும். கடக குருவின் சஞ்சார காலத்தில் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.
புத்தாண்டின் கிரக நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியைக் குரு பார்ப்பதால் சுபகாரியங்கள் இல்லத்தில் நடை பெறும். குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப நீங்கள் தேர்ந் தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் ஸ்தானாதிபதி சூரியன், வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும், அவர் சகாய ஸ்தானத்திற்கும் அதிபதி என்பதால் இனிய பலன்கள் நடைபெறும்.
அதேநேரம் உங்களைச் சார்ந்தவர்களுக்கு ஆரோக்கியத் தொல்லை ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்கள் வந்து மகிழ்விக்கும். பூர்வீக சொத்து சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொழில் பங்குதாரர்கள் உங்கள் எண்ணத்தைப் புரிந்துகொண்டு செயல்படுவர். பஞ்சம ஸ்தானத்தில் ராகுவும், லாப ஸ்தானத்தில் கேதுவும் இருப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகிறது. எனவே புனிதப் பயணங்கள் அதிகரிக்கும்.
கும்ப - ராகு, சிம்ம - கேது
26.4.2025 அன்று ராகு-கேதுக்களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் ராகுவும், 10-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ராகுவோடு சனியும் சேர்ந்து சஞ்சரிப்பதால் இது ஒரு பொற்காலமாகும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
அடுத்தடுத்து நல்ல காரியங்கள் இல்லத்தில் நடந்துகொண்டே இருக்கும். பொருளாதாரம் உயரும். இக்காலத்தில் யோக பலம்பெற்ற நாளில் ராகு தலங்களைத் தேர்ந்தெடுத்து பரிகாரம் செய்தால் பலன் கிடைக்கும்.
10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் முத்தான தொழில் வாய்க்கும். எதை எந்த நேரம் செய்ய நினைத்தாலும், அதைச்செய்ய இயலும். படித்து முடித்து வேலை இல்லாத பிள்ளை களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
மிதுன - குரு சஞ்சாரம்
11.5.2025 அன்று குரு பகவான், மிருகசீர்ஷம் 3-ம் பாதத்தில் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. இதன் விளைவாக குடும்ப முன்னேற்றம் கூடும். கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். உறவினர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் உங்கள் முன்னேற்றம் உயரும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளை தீர்ப்பீர்கள். திடீர் முன்னேற்றமும், திரவிய லாபமும் உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்.
குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் சுக ஸ்தானம் புனிதமடைகிறது. எனவே சந்தோஷ வாய்ப்புகளை நாளும் சந்திப்பீர்கள். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். வீடு, இடம், நிலம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் மட்டுமல்ல, விவசாயத்திலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் கோரிக்கைக்கு, உயர் அதிகாரிகள் செவிசாய்ப்பர். வேறு வேறு இடங்களில் பணியாற்றிய கணவன் - மனைவி ஒரே இடத்தில் பணிபுரிய வாய்ப்பு உருவாகும்.
குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் பயணங்கள் அதிகரிக்கும். பாசம் மிக்கவர்கள் நேசக்கரம் நீட்டுவர். இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வதோடு, பொன், பொருள் சேர்க்கை உண்டு. புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். உடன் பிறப்புகளின் திருமணத்தை முன்னின்று நடத்திவைப்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்படும் மாற்றம் மனதிற்கு இனிமை தரும்.
கும்ப - சனியின் சஞ்சாரம்
வருடத் தொடக்கம் முதல் கும்ப ராசியிலேயே சனி சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவதோடு 6, 10 ஆகிய இடங்களிலும் பதிகிறது. எனவே பொருளாதார நிலை உயரும். அருளாளர்களாக மாறி அனைவரும் போற்றும் வண்ணம் வாழ்க்கை அமையும்.
புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறை வேறும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.
கடக - குரு சஞ்சாரம்
வருடத் தொடக்கத்தில் மிதுன ராசிக்குச் செல்லும் குரு பகவான், 8.10.2025 அன்று கடக ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். அங்கு 19.12.2025 வரை இருக்கும் அவர், உச்சம் பெற்று பலம் பெறுகிறார். அவரது பார்வை 1, 3, 5 ஆகிய இடங்களில் பதிகிறது. உங்கள் ராசியைக் குரு பார்ப்பதால், யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். உற்சாகத்துடன் செயல்பட்டு நீண்ட நாளைய திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நல்ல காரியங்கள் ஒவ்வொன்றாக இல்லத்தில் நடைபெறும்.
குருவின் பார்வை 3-ம் இடத்திலும், 5-ம் இடத்திலும் பதிவதால் முன்னேற்றப் பாதையில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். உங்கள் திறமை பளிச்சிடும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். உடன்பிறப்பு களின் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சினை மறையும். பூர்வீக சொத்துகளில் இருந்த இடையூறுகள் அகன்று நல்ல முடிவிற்கு வரும். பிள்ளை களின் எதிர்கால நலன் கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும்.
குருவின் வக்ர காலம்
18.11.2025 முதல் 19.12.2025 வரை கடகத்திலும், 20.12.2025 முதல் 31.12.2025 வரை மிதுனத்திலும் குரு வக்ரம் பெறுகிறார். அவரது வக்ர காலத்தில் கொடுக்கல் - வாங்கலில் கவனம் தேவை. துணிவும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் பங்குதாரர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்ள மாட்டார்கள். பிள்ளைகளாலும் பிரச்சினைகள் ஏற்படும். இக் காலத்தில் குருவிற்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சனியின் வக்ர காலம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி 2.7.2025 முதல் 17.11.2025 வரை வக்ரம் பெறுகிறார். இக்காலத்தில் அர்த்தாஷ்டமச் சனி வக்ரம் பெறுவது நன்மைதான். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. இடம், பூமி வாங்கும் பொழுது கவனம் தேவை. கல்வி, வேலைவாய்ப்புகளில் அதிக முயற்சி செய்ய வேண்டியதிருக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.
குடும்பச்சுமை கூடும். புதியவர்களை நம்பி எதுவும் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடும். சகோதர வழியிலும் விரயங்கள் உண்டு. சனி-செவ்வாய் பார்வை காலத்தில் மிகுந்த கவனத்தோடு செயல்படுங்கள்.






