என் மலர்
விருச்சகம்
2025 கார்த்திகை மாத ராசிபலன்
விருச்சிக ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியை உச்சம்பெற்ற குரு பார்க்கிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப, தொட்டது துலங்கும். தொழில், முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். வெற்றிக் கனியை எட்டிப் பிடிப்பீர்கள். முக்கியப் புள்ளிகள் வீடு தேடி வந்து வாழ்த்துவர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும், நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலம் கிடைக்க உறுதுணையாக இருக்கும்.
குரு வக்ரம்
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சிக்கிறார். அவரது முழுமையான பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகமாகும். தொட்ட காரியங்கள் வெற்றி பெறவும், தொழில் முன்னேற்றம் ஏற்படவும், வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரவும் குருவின் பார்வை வழிவகுக்கும். அப்படிப்பட்ட குருபகவான் உங்கள் ராசிக்கு தன - பஞ்சமாதிபதி ஆவார். அவர் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். வக்ரம் பெற்றாலும் உச்சம் பெற்ற குரு என்பதால் கவலைப்படத் தேவையில்லை. ஒருசில நல்ல காரியங்கள் தடைப்பட்டாலும், கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.
விருச்சிக - சுக்ரன்
கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரம் 'சுக்ர மங்கள யோகம்' செயல்படும். இதன் விளைவாக ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் வழியே வரும் சுபகாரியங்களை சிறப்பாக முடித்து கொடுப்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். அரசு அனுகூலம் உண்டு.
தனுசு - செவ்வாய்
கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதன் 2-ம் இடம் எனப்படும் தன ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரம் தனவரவு தாராளமாக வந்துசேரும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதுவரை வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்ற எடுத்த முயற்சி கைகூடும். போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
விருச்சிக - புதன்
கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு லாபாதிபதி புதன். அவர் ராசிக்கு வரும் இந்த நேரம் பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்க நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய சந்தர்ப்பங்கள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற சிந்தனை மேலோங்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் தேடிவரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 17, 23, 24, 28, 29, டிசம்பர்: 8, 9, 10, 14, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.






