என் மலர்tooltip icon

    விருச்சகம்

    2025 தை மாத ராசிபலன்

    எந்நாளும் இனிய நாள் எனக் கருதும் விருச்சிக ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். அவரோடு சந்திரன் சேர்ந்து நீச்சபங்கம் அடைந்து மாதம் தொடங்குகிறது. மேலும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார நிலை உச்சம்பெறும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். தன்னிச்சையாகச் செயல்பட்டு முன்னேற்றம் காணும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

    மிதுன - செவ்வாய்

    தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியானவர் செவ்வாய். எனவே அவர் வக்ரம் பெற்று சஞ்சரிக்கும்போது நல்ல பலன்கள் உங்களுக்கு நடைபெறும். குறுக்கீடு சக்திகள் வந்தாலும் அதைச் சமாளித்துவிடுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை. உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பலமுறை ஏற்பாடு செய்தும் முடிவடையாத சொத்துப் பிரச்சினைகள் இப்பொழுது சுமுகமாக முடியும். அதன் மூலமாகக் கிடைக்கும் தொகையைக் கொண்டு வேறு ஒரு சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். அங்காரக வழிபாடு அவசியம் தேவை.

    மகர - புதன்

    உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியான புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். வெற்றிகள் ஸ்தானத்திற்கு வரும் புதனால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். உடன்பிறப்புகளின் மணவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் வந்துசேரும். சொந்தங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் உங்கள் வளர்ச்சி இருக்கும். விருதுகளும், பாராட்டுகளும் பெறும் யோகம் உண்டு.

    கும்ப - புதன்

    தை 23-ந் தேதி கும்ப ராசிக்கு புதன் செல்கின்றார். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு புகழ் குவிப்பீர்கள். வியாபார நுணுக்கங்களை கற்றுக் கொண்டு செயல்படும் இந்த நேரத்தில், தொழில் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் திறமையைக் கண்டறிந்து பாராட்டுவதோடு புதிய பொறுப்புகளையும் வழங்குவர்.

    குரு வக்ர நிவர்த்தி

    ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். அவர் வக்ர நிவர்த்தியாகி பலம்பெறுவதால் இக்காலத்தில் அவரது பார்வைக்கு பலன் அதிகம் கிடைக்கும். அந்த அடிப்படையில் குரு, உங்கள் ராசியைப் பார்ப்பதால் இக்காலம் ஒரு பொற்காலமாகும். கணிசமான தொகை கைகளில் புரளும், அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவி கிடைக்கும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கடமையை செவ்வனே செய்து பாராட்டுப் பெறுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் உண்டு. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வரும். மாணவ - மாணவிகளுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு வருமானம் உயரும். இடம், பூமி சேர்க்கை ஏற்படும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 15, 16, 19, 20, 27, 29, 31, பிப்ரவரி: 1, 7, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    ×