என் மலர்tooltip icon

    தனுசு

    2025 தமிழ் புத்தாண்டு ராசிபலன்

    நன்மைகள் நடக்கும்

    அன்பும் அமைதியும் நிறைந்த தனுசு ராசியினரே..

    உழைப்பின் அவசியத்தை உணர்ந்த உங்களின் விசுவாசு ஆண்டில் வாழ்வின் நிலை உயர்ந்து கெளரவமும் புகழும் அதிகரிக்க நல் வாழ்த்துக்கள். வருட துவக்கத்தில் சுகஸ் தானத்தில் நிற்கும் சனி பகவான் அர்த்தாஷ்டமச் சனியாக பலன் தருவார். தனது மூன்றாம் பார்வையால் 6ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தையும் 7-ம் பார்வையால் 10-ம் மிடமான தொழில் ஸ்தானத்தையும் 10-ம் பார்வையால் ராசியையும் பார்ப்பார்.

    14.5.2025 முதல் சம சப்தம ஸ்தானத்திற்கு செல்லும் குருபகவான் தனது 5-ம் பார்வையால் 11-ம்மிடமான லாப ஸ்தானத்தையும் 7-ம் பார்வையால் ராசியையும் 9ம் பார்வையால் சகாய ஸ்தானத்தையும் பார்ப்பார்.

    18.5.2025 முதல் ராகு பகவான் முயற்சி ஸ்தானத்திலும் கேது பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்வார்கள்.இதனால் இந்த தமிழ் புத்தாண்டில் நடக்கப் போகும் பலன்களை பார்க்கலாம்.

    விசுவாவசு ஆண்டின் பொது பலன்கள்

    குரு பலம் மிகுந்த வருடம்.குரு மற்றும் ராகு கேது சஞ்சாரம் சாதகமாக உள்ளது. இந்த ஒரு ஆண்டுக்கு ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் மனக் கவலைகள் அகலும். அர்தாஷ்டமச் சனி என்றாலும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும்.

    புதிய தெளிவான சிந்தனைகளின் மூலம் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய மன வலிமை ஆற்றல் மனோதிடம் கூடும்.

    பிறரிடம் பழகுவதில் தனித்துவம் உண்டாகும். மற்றவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்வீர்கள்.இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும். சனி மற்றும் ராகு கேதுக்களால் சொத்துகள் தொடர்பான விசயத்தில் சிறு மன உளைச்சலைத் தரும். சுய ஜாதக தசா புக்திக்கு ஏற்ப வீடு, வாகன முயற்ச்சியில் ஈடுபடுவது நல்லது.

    கண் திருஷ்டி, போட்டி-பொறாமை போன்றவற்றால் வைத்தியச் செலவு உருவாகும்.குழந்தைகளின் நலனுக்காக கடன் வாங்க நேரலாம். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்க நேரும். முறையான அரசு அங்கீகாரம் பெற்ற வங்கிகளில் கடன் வாங்குவது சிறப்பு . உடனடியாக பணம் கிடைக்கிறது என்பதற்காக நீட்டிய இடங்களில் கையெழுத்து இட்டு முறையற்ற நிதி நிறுவன வங்களிடம் கடன் வாங்குவது வீண் அவமானத்தை தேடித் தரும்.

    "பதறாத காரியம் சிதறாது " முறையான திட்டமிடல் சங்கடங்களை தீர்க்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். ஆவணங்களை படித்து பார்த்து கையெழுத்துப் வேண்டும்.

    வெற்றுப் பத்திரம், வெற்று காசோலைகளில் கையெழுத்து இடுவதை தவிர்த்தல் நலம்.ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். சுப செலவுகளுக்கு சகோதர சகோதரியிடம் இருந்து கணிசமான தொகை கிடைக்கும்.

    குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். தம்பதிகள் தங்கள் பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் கொண்டு செல்லாமல் தாங்களே தீர்த்துக் கொள்வதால் ஊடல் கூடலாகும்.

    பொருளாதாரம்

    11ம்மிடமான லாப ஸ்தானத்திற்கு குருப் பார்வை. தன வரவு தங்கு தடையின்றி இருக்கும்.வருமானம் பல வழிகளில் வந்து கொண்டே இருக்கும். குடும்ப தேவைகள் நிறைவடையும். செல்வமும் செல்வாக்கும் தேடி வரும் நேரம்.

    உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு. அதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்திலிருந்த பல விதமான குறைபாடுகள் சீரடையும். பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்த முடியும்.

    மூலம்

    லட்சுமி கடாட்சம் தைரியம் உண்டாகும். குருபகவான் திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்கள ஏற்படுத்துவார். வெற்றி மேல் வெற்றி வந்து உங்களைச் சேரும். எதிரிகள் பலம் இல்லாமல் ஒதுங்குவார்கள். விண்ணப்பித்த கடன் கிடைக்கும்.

    எதிர்பார்த்த தன வரவுகள் இருக்கும். சொத்து வாங்கும் முயற்சி ஈடேறும். சொத்துகள் விருத்தியாகும். ஆரோக்கியம் சீராகும்.வாழ்க்கை துணையின் வைத்தியச் செலவு குறையும். விரயத்தை கட்டுப்படுத்த வேண்டும்.தம்பதிகள் ஒருவர் விஷயங்களில் பிறர் தலையிடாமல் இருப்பது நல்லது.

    கடின உழைப்பு தேவை. புதிய முடிவுகளை எடுக்கும் முன்பு குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். ஜாமீன் கடன் தொல்லைகள் முடிவிற்கு வரும். ஆரோக்கிய தொல்லைகள் அகலும்.

    பூராடம்

    வேதனைகளை விரட்டி சாதனையாக மாற்றுவீர்கள்.இழந்த இன்பங்கள், பொருட்களை மீட்கக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் தேடி வரும்.குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். பாகப்பிரிவினை சம்பந்தமான விஷயங்கள் சுமூகமாகும். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலம்.

    இலாகா மாற்றம் மற்றும் இடமாற்றம் மகிழ்ச்சியைத் தரும். சிலர் பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். வெளிநாட்டு வேலை, பயணம் திட்டமிட்டபடி நடக்கும். சிலருக்கு செயற்கை முறை கருத்தரிப்பு முறையில் குழந்தை பிறக்கும்.கண்களில் சிறு உபாதைகள் இருக்கும்.

    ஆரோக்கியத்தை காக்க உரிய சிகிச்சையை முறையை கடைபிடிக்க வேண்டும்.திருமண முயற்சி வெற்றியாகும்.வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பிறரின் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும்.கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவினைகள் சுமூகமாகும்.

    உத்திராடம் 1

    புத்துணர்ச்சியோடு செயல்படும் வருடம்.மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சுப விரயங்கள், மிகுதியாகும். தேடிச் செல்லும் அன்பு நிலையற்றது, தேடி வரும் அன்பே நிலையானது என்பதை உணர்வீர்கள். உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும்.

    நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் நலனில் அதிக கவனம் தேவை. வழக்கு விவகாரங்களில் வெற்றிகள் உண்டாகும். ஆரோக்கிய குறைபாட்டை முறையான வைத்தியத்தில் சரி செய்ய முடியும்.

    உங்களை வாட்டிய கடன் பிரச்சனை மற்றும் வாழ்க்கைத் துணையின் பிரச்சனை தீரும். சத்ருக்கள் தொல்லை அகலும். வீடு,வாகன வசதிகள் மேம்படும். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் விருப்பங்கள் அனைத்தும் ஈடேறும்.

    திருமணம்

    அடுத்த ஒரு வருடத்திற்கு ராசிக்கு குரு மற்றும் சனியின் பார்வை உள்ளது என்பதால் திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். அதே நேரத்தில் மார்ச் 29, அர்த்தாஷ்டமச் சனி ஆரம்பமாகிறது என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். சுய ஜாதக தசா புத்திக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும் போது நிச்சயம் சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.

    பெண்கள்

    பெண்களின் நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகள், ஆசைகள் நிறைவேறும். குடும்ப உறவுகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். உடல் நிலை சீராக இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். தாய்வழிச் சொத்துப் பிரச்சனையில் எதிர்பாராத திருப்புமுனை உண்டாகும்.

    தம்பதிகள் ஒருவர் மேல் மற்றவர் அன்பை பொழிவார்கள். எதிர்பாராத சில செலவுகளை சந்திக்க நேர்ந்தாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள்.

    மாணவர்கள்

    மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும்.ராசிக்கு குரு பார்வை இருப்பதால் இயல்பிலேயே கல்வியில் ஆர்வம் மிக்க நீங்கள் ஒரு முறை படித்தாலே நன்கு புரியும். நினைவாற்றலும், புத்திக் கூர்மையும் அதிகரிக்கும். பாட புத்தகத்தை வாசித்தாலே அதிக மதிப்பெண் எடுக்கும் நீங்கள் முயற்சி செய்தால் இமாலய வெற்றி நிச்சயம்.

    உங்களின் ராசி அதிபதியும் 4ம் அதிபதி குரு என்பதால் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் படிக்கும் தனுசு ராசியினர் அதிக மதிப்பெண் பெற்று, பள்ளி, மாவட்ட, மாநில அளவில் வெற்றி வாகை சூடுவார்கள்.

    முதலீட்டாளர்கள், வியாபாரிகள்

    10ம்மிடமான தொழில் ஸ்தானத்திற்கு சனி பார்வை. லாப ஸ்தானத்திற்கு குருப் பார்வை. தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் முத்தாய்ப்பான பலன் தரும். குலத்தொழில் செய்பவர்களின் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும்.

    அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.அர்த்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் புதிய தொழில் முயற்சிகள் ஒப்பந்தங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். லட்சியத்தை அடைய அதிகம் உழைக்க நேரும்.

    உத்தியோகஸ்தர்கள்

    உத்தியோக ஸ்தானமான 6ம்மிடத்திற்கு குருப் பார்வை. திறமைகளை நிரூபிக்க நல்ல சந்தர்ப்பங்கள் தானாக கூடி வரும். அரசாங்க மற்றும் வெளிநாட்டு வேலை முயற்சியில் வெற்றி உண்டாகும்.வேலை மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

    எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் கவனச் சிதறலை தவிர்த்து பக்குவமாக நடந்து கொள்ளவும்.

    அரசியல்வாதிகள்

    அரசியலில் ஈடுபட்டோருக்கு விபரீத ராஜ யோகம் தரும் காலமாகும். லட்சியங்கள், கனவுகள் நிறைவேறும் வாரம். 9ல் நிற்கும் கேது அரசியல் ஞானத்தை போதிப்பார்.அரசியல் நிபுணத்துவம் நிறைந்தவராக மாறுவீர்கள்.கடின உழைப்பால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். முடியாத காரியம் முடியும் அதிர்ஷ்டம் அரவணைக்கும்.

    புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, சுய தொழில் விருத்தி உண்டு. பிறரின் புகழுக்கு மயங்க கூடாது.கூட்டணி கட்சி மற்றும் நண்பர்களிடம் வேகமான வார்த்தைகளை தவிர்த்து விவேகமான வார்த்தைகளை பேச வேண்டும்.அரசியல் பிரமுகர்களுக்கு பயணங்கள் அதிகரிக்கும்.

    பரிகாரம்

    எந்த செயலிலும் வெற்றி பெற தினமும் திருவாசகம் படிக்கவும். தொட்டது துலங்க விரயத்தை சுபமாக்க மஞ்சள் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

    ×