என் மலர்tooltip icon

    தனுசு

    2025 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

    மூன்றாமிடத்தில் வரும் ராகு முன்னேற்றம் தான் இனி பாரு!

    தனுசு ராசி நேயர்களே!

    இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டம ராகுவாக சஞ்சரித்து வந்த ராகு பகவான், வெற்றிகள் ஸ்தானம் எனப்படும் 3-ம் இடத்திற்கு வரப்போகிறார். அதே சமயம் கேது பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பிதுராஜ்ஜித ஸ்தானத்திற்கு வருகிறார். சுமார் 1 ½ ஆண்டு காலம் அதே இடத்தில் ராகுவும், கேதுவும் சஞ்சரித்து உங்களுக்குரிய பலன்களை வழங்குவர்.

    இந்த ராகு- கேது பெயர்ச்சியின் பொழுதே அர்த்தாஷ்டம ராகு விலகுவதால் நன்மை ஏற்படும் என்றாலும், ஆயுள்காரகன் சனியோடு இணைந்து கேதுவின் பார்வை பெறுவதால் ஆரோக்கிய தொல்லை அதிகரிக்கும். அலைச்சலை குறைத்துக் கொள்வதோடு, ஆகாரத்திலும் கட்டுப்பாடு செலுத்த வேண்டும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இது சோதனை காலம். கவனமாக செயல்படுங்கள்.

    9-ல் சஞ்சரிக்கும் கேதுவால் ஒளிமயமான எதிர்காலம் அமையும். என்றாலும் சொத்து பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். மறைமுக எதிர்ப்பு, உறவினர் பகை அதிகரிக்கும். யாரையும் நம்பி எதையும் செய்ய முடியாது. மன வருத்தமும், வீண் விரயமும் உண்டாகும். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும்.

    குரு சாரத்தில் ராகு சஞ்சாரம் (26.4.2025 முதல் 31.10.2025 வரை)

    பூரட்டாதி நட்சத்திரக் காலில் குரு சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கான அறிகுறி தென்படும். தம்பதியர் ஒற்றுமை பலப்படும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு கவுரவப் பதவி கிடைக்கும். வியாபாரம் லாபத்தை கொடுக்கும்.

    சூரிய சாரத்தில் கேது சஞ்சாரம் (26.4.2025 முதல் 27.6.2025 வரை)

    உத்ரம் நட்சத்திரக் காலில் சூரிய சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, நல்ல பலன்கள் இல்லம் தேடி வரும். நினைத்து பார்க்காத இன்ப நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும். பொறுப்புகள் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை கைக்கு வந்து சேரும். பூமி வாங்கும் முயற்சியில் இருந்த சிக்கல்கள் அகலும். அலுவலகத்தில் வீடு, வாகனம் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால் அது கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் இருந்து வேலைக்கான அழைப்புகள் வரும்.

    சுக்ர சாரத்தில் கேது சஞ்சாரம் (28.6.2025 முதல் 5.3.2026 வரை)

    பூரம் நட்சத்திரக் காலில் சுக்ர சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, பல நல்ல வாய்ப்புகள் கை நழுவிச் செல்லும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிக்க இயலாது. பண நெருக்கடி ஏற்படும். புது முயற்சிகளில் தடை, தாமதம் வந்து அலைமோதும். எதிர்மறை சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள், மீண்டும் உங்களிடமே திரும்பி வரும். கூட்டாளிகள் உங்களை விட்டு விலக நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள்.

    குடும்பத்தில் மூன்றாம் நபரின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. பொது வாழ்வில் இருப்பவர்கள் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். எதையும் யோசித்து செய்ய வேண்டிய நேரம் இது.

    சனிப்பெயர்ச்சி காலம்

    6.3.2026 அன்று சனி பகவான், மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி தொடங்குகிறது. எனவே மனக்கவலை அதிகரிக்கும். பொருளாதார தட்டுப்பாடு, இனத்தார் பகை உருவாகும். எதையும் மனம் ஒன்றி செய்ய முடியாது. உடல்நலக் குறைபாடு ஏற்படும். பிள்ளைகளால் பிரச்சினை வரலாம். பெரிய மனிதர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

    நடக்கும் காரியங்கள் ஸ்தம்பித்து நிற்கலாம். இது ஒரு சோதனை காலமாகும். ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து சனி கவசம்பாடி சனி பகவானை வழிபடுவது நல்லது.

    குருப்பெயர்ச்சி காலம்

    ராகு - கேது பெயர்ச்சி காலத்தில் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. 11.5.2025 அன்று குரு பகவான், மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனை நிறைவேறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தனித்து தொழில் செய்ய முன்வருவீர்கள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.

    கல்யாண கனவு நனவாகும். அக்டோபர் 8-ந் தேதி குரு பகவான், அதிசாரமாக கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதன் விளைவாக புதிய சொத்து வாங்குவீர்கள். புகழ்மிக்க ஆலயங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

    ×