என் மலர்
தனுசு
2025 தை மாத ராசிபலன்
எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காணும் தனுசு ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு 6-ம் இடத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்ல பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி செவ்வாய் நீச்சம்பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். இருப்பினும் குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். ஆனால் மனநிம்மதி குறையும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் தேவை. சொத்துக்களாலும், சொந்தங்களாலும் பிரச்சினைகள் தோன்றி மறையும்.
மிதுன - செவ்வாய்
தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். விரயாதிபதியான அவர் வலிமை இழப்பதால் நன்மை உண்டு. விரயத்திற்கு ஏற்ற தொகை வந்து கொண்டேயிருக்கும். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம், நீண்டதூரப் பயணங்களுக்கான அறிகுறி தென்படும் நேரம் இது. பிள்ளைகளின் வழியில் சுபவிரயங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக மாறும். வழக்கு போட்டவர்கள் வாபஸ் பெறுவர். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நல்ல நிகழ்வுகள் நடைபெறும்.
மகர - புதன்
உங்கள் ராசிக்கு 7, 10ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். தொழில் ஸ்தானாதிபதியான புதன் தன ஸ்தானத்திற்கு வருவதால் தொழில் வெற்றிநடைபோடும். அபரிமிதமான லாபம் வந்து ஆச்சரியப்பட வைக்கும். இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும். இதுபோன்ற நேரங்களில் புதிய முயற்சிகள் செய்தால் அதில் வெற்றி கிடைக்கும்.
கும்ப - புதன்
தை 23-ந் தேதி கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். சகாய ஸ்தானத்திற்கு செல்லும் புதனால் வருமான உயர்விற்கு வழிபிறக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து, அதன் மூலம் வருமானம் வரலாம். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் நட்பால் புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்
குரு வக்ர நிவர்த்தி
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். குருபகவான் உங்கள் ராசிநாதன் என்பதால், இக்காலம் ஏராளமான நன்மைகள் நடைபெறும். குடும்ப வருமானம் உயரும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். நண்பர்கள் மூலம் தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் வந்துசேரும். நீண்ட நாளைய பிரார்த்தனைகள் நிறைவேறும். கல்யாண முயற்சிகள் கைகூடும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைக்கும். இடம், பூமி வாங்கும் யோகமுண்டு. உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடி வரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு, நிதி நிறுவனங்களில் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகள் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுப்பர். கலைஞர்களுக்கு தேக்க நிலைமாறி தெளிவு பிறக்கும். மாணவ - மாணவிகளுக்கு மறதி குறையும். மதிப்பெண் கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 22, 23, 30, 31, பிப்ரவரி: 2, 3, 8, 9.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.






