என் மலர்
தனுசு
2024 கார்த்திகை மாத ராசிபலன்
எதையும் சமாளிக்கும் வல்லமை பெற்ற தனுசு ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத்தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, வக்ரம் பெற்று 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். எனவே தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் வரலாம். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர்.
சனி வக்ர நிவர்த்தியாகி விட்டதால், கொடுக்கல்- வாங்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சிக்கு இடையூராக இருந்தவர்கள் விலகுவர். தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். தெய்வீக நாட்டம் அதிகரிக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு உண்டு.
குரு வக்ரம்
ரிஷப ராசியில் உள்ள குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியாக விளங்குபவர், குருபகவான். அவர் வக்ரம் பெறும் பொழுது ஆரோக்கிய குறைபாடு அதிகரிக்கலாம். சுகாதிபதியான குரு பகவான் வக்ரம் பெறும் பொழுது, மருத்துவச் செலவு கூடுவதை தவிர்க்க முடியாது. மனக்கவலை தரும் விதத்தில் உறவினர்கள் நடந்துகொள்வர்.
பொருளாதார பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அருளாளர்களின் ஆலோசனையும், அனுபவஸ்தர்களின் அறிவுரையும் வாழ்க்கை பாதையை சீராக்க உதவும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுப்பதன் மூலம் பிரச்சினைகள் அதிகரிக்கும்.
சனி - செவ்வாய் பார்வை
கடகத்தில் உள்ள செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். விரயாதிபதி செவ்வாயின் பார்வை சகாய ஸ்தானத்தில் பதிவதால் விரயங்கள் அதிகரிக்கும். இருப்பினும் வீண் விரயங்களில் இருந்து விடுபட சுப விரயங்கள் மேற்கொள்வது நல்லது.
பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி ஒரு தொகையை செலவிடுவீர்கள். அவர்கள் வெளிநாடு செல்வது, வேலைக்காக முயற்சி செய்வது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினை நல்ல முடிவுக்கு வரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர்.
மகர - சுக்ரன்
கார்த்திகை 18-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு வரும் சுக்ரன், இனிய பலன்களை வழங்கப்போகிறார். 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், தனஸ்தானத்திற்கு வரும் பொழுது பொருளாதார நிலை உயரும்.
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். வாகனம் வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும். புதிய தொழில் தொடங்குவது பற்றியும் சிந்திப்பீர்கள்.
செவ்வாய் வக்ரம்
கடக ராசியில் உள்ள செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் அடைகிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதி செவ்வாய் வக்ரம் பெறுவது யோகம்தான். என்றாலும், புத்திர ஸ்தானாதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால், பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையாது. பண விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களை நம்பி செய்த காரியம் தாமதப்படலாம்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு கணிசமான லாபம் கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலிடத்து நிர்ப்பந்தம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மாணவ - மாணவிகளுக்கு அரசு வழி ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 23, 24, 28, 29, டிசம்பர்: 6, 7, 10, 11.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர் நீலம்.






