என் மலர்
மீனம்
புத்தாண்டு ராசிபலன்கள்-2024
சாந்த குணம் நிறைந்த மீன ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஆண்டின் துவக்கத்தில் ராசி அதிபதி குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 21, 2024ல் முயற்சி ஸ்தானத்திற் குருபகவான்செல்கிறார். ராசியில் ராகு, ஏழில் கேது.விரய ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சி. மீனம் ராசிக்காரர்களுக்கு ஆங்கிலப்புத்தாண்டு முதல் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழப்போகிறது. ஏழரைச் சனியின் முதல் பாகம் என்பதால் திட்டமிட்டு செயல்பட ஆண்டு முழுவதும் வளமான பலன்களைப் பெற முடியும்.
குருவின் சஞ்சார பலன்கள்
மீன ராசிக்கு ராசி அதிபதி மற்றும் தொழில் ஸ்தான அதிபதியான குரு பகவான் ஏப்ரல் 21 வரை தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப சுமை குறையும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உப ஜெய ஸ்தானமான 3-ம்மிடம் செல்லும் குருபகவான் 5-ம் பார்வையால் 7ம்மிடமான களத்திர ஸ்தானத்தையும் 7-ம் பார்வையால் 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தையும் 9ம் பார்வையால் லாப ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். மிகப்பெரிய ராஜயோகத்தை அடையப் போகிறீர்கள்.
அரசாங்க மற்றும் வெளிநாட்டு வேலை முயற்சியில் வெற்றி உண்டாகும். மனைவி வழி சொத்தில் நிலவிய கருத்து வேறுபாடு, பகைமை மறைந்து முழு பங்கும் கிடைக்கும்.செலவுகளை குறைத்து சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.திருமண முயற்சியில் வெற்றி உண்டு. உறவினர்களின் ஒத்துழைப்போடு சுப காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். பெண்களுக்கு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். முறையான ஆவணங்கள் இல்லாத சொத்திற்கு சட்டரீதியான ஆவணங்கள் தயாரித்து முறைப்படுத்துவீர்கள்.
சொத்து சேர்க்கை, புத்திர பிராப்த்தம் போன்ற சுப பலன்கள் நடக்கும். சனியின் சஞ்சார பலன்கள் லாபாதிபதி மற்றும் விரயாதிபதியான சனிபகவான் விரய ஸ்தானத்தில் நின்று தனது 3ம் பார்வையால் தன ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் ருண ரோக சத்ரு ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த தன வரவுகள் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள், தொழிலில் கூட்டாளிகளிடம் நண்பர்களிடம் வேகமான வார்த்தைகளை தவிர்த்து விவேகமான வார்த்தைகளை பேச வேண்டும்.
உத்தியோகஸ்தர்கள் திறமையை நிரூபிக்க நல்ல சந்தர்ப்பங்கள் தானாக கூடி வரும். விரயச் சனியின் காலம் என்பதால் இருக்கும். வேலையை விட்டு விட்டு மற்றொரு வேலைக்கு ஆசைப்படாதீர்கள் புதிய தொழில் தொடங்காதீர்கள். உங்களை சிக்கலில் விட்டு விடும். தொழில், வேலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்தால் எந்த இடர்பாடுகள் வந்தாலும் சமாளிக்க முடியும். வெளிநபர்களால் அல்லது அந்நிய மொழி பேசுபவரால் குடும்பத்தில் குழப்பம் உருவாகும். மருத்துவச் செலவு கூடும். தீர்த்த யாத்திரை, ஆலய வழிபாடு, மந்திர உபதேசங்கள் கிடைக்கும்.
ராகு-கேதுவின் சஞ்சார பலன்கள்
ஜென்ம ராசியில் ராகு. 7-ல் கேது. சர்ப்ப தோஷம். உங்களின் மனோநிலை வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்படும். பேச்சுத் திறமை அதிகரிக்கும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு குறுக்கு வழியிலாவது பணம் சம்பாதித்து விட வேண்டும் என்ற பேராசை மேலோங்கும். எல்லாம் திட்டமிட்டபடி சரியாக நடந்தால் கூட ஜென்ம ராசியை ராகு கடப்பதால் இனம் புரியாத பய உணர்வும் இருந்து கொண்டே இருக்கும். திருமணமான தம்பதியரிடையே நெருக்கம் குறையும். ஈகோ பார்க்காமல் இருந்தால் தப்பி விடலாம்.
ஜென்ம ராகு வெளிநாட்டு வாய்ப்பு, பணத்தை குவிப்பார். விரயச்சனி ராகுவால் கொடுக்கப்பட்ட அதிர்ஷ்ட பணத்தை விரயமாக்குவார். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் மிகுதியாகும். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போட்டு பணத்தை யாருக்கும் கடனாகத்தர வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள் யாருக்கும் இரவல் கொடுக்கக்கூடாது.உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் தொல்லைகள் இருக்கும்.
பூரட்டாதி 4
திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும் வருடம். ராசி அதிபதி குரு சகாய ஸ்தானத்தில் செல்வதால் வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் வழங்கக் கூடிய உப ஜெய ஸ்தானம் வலுப்பெறுகிறது. நடக்குமா என்ற காரியத்தை தன்னம்பிக்கையோடு நடத்திக்காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டு. தொட்டது துலங்கும்.
சித்தப்பா, மூத்த சகோதர உதவியால் பல நல்ல காரியங்கள் நடக்கும்.மருமகனால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். தொடர்ச்சியான வருமானம் கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.சனியின் பார்வை 6ம்மிடத்திற்கு இருப்பதால் கற்ற கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்கும். பிள்ளைகளின் சுப காரியப் பேச்சுக்கள் முடிவாகும். தடைபட்ட பத்திரப் பதிவுகள் நடக்கும். வாழ்க்கை வளம் பெற சந்தன அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
உத்திரட்டாதி
அனைத்து காரியங்களும் தடையில்லாமல் நடக்கும் வருடம். புதிய வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத இடங்களிலிருந்து பிள்ளைகளின் திருமணத்திற்கு தேவையான பண வரவு கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதமாகும். போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. தள்ளிப் போன திருமணம் காரியங்கள் கூடி வரும்.
ஆரோக்கியம் சீராகும். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.ஜென்ம ராசியில் ராகு இருப்பதால் வெளியே தைரியமாக இருந்தாலும் உள்ளத்தில் பயமே மேலோங்கி நிற்கும். பணம், கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்சிலரின் வாழ்க்கைத் துணை தொழிலுக்காக கடல்கடந்து செல்ல வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக உங்களைப் பாதித்த நோய்த் தொந்தரவில் இருந்து சிறிது சிறிதாக விடுபடுவீர்கள். வெளிவட்டார செல்வாக்கை அதிகரிக்கவும் ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள்.சிவ சக்தியை வழிபடவும்.
ரேவதி
ஆன்மபலம் நிறைந்த ரேவதி நட்சத்திரத்தினருக்கு இந்த ஆங்கிலப் புத்தாண்டு சகல ஐஸ்வர்யங்களும் பெற்றுத் தரும் ஆண்டாக அமையப் போகிறது. புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது. வீடு, வேலை, தொழில் மாற்றம் செய்ய நேரும். நண்பர்களால் சில அசவுகரியங்கள் ஏற்பட்டாலும்ஆதாயமும் உண்டு.
அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்தவர்கள் சொந்த தொழில் செய்து பெரும் வருமானம் ஈட்டும் நேரம். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கை தரம் உயரும் . தன வரவு சிறக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும்.குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தை திட்டமிட்டு பயன்படுத்தினால் நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும் ராகு/கேதுக்களின் சஞ்சாரத்தால் சிறு மன சஞ்சலம் இருக்கும். மகாவிஷ்ணுவை வழிபடவும்.
திருமணம்
ராசியில் ராகு ஏழில் கேது சர்ப்ப தோஷம். திருமணம் நடைபெறும் வாய்ப்பு மிக மிக குறைவு. அப்படி நடந்தாலும் பொருத்த மற்ற கலப்பு திருமணமாகவே இருக்கும். கோச்சார கிரகங்கள் சாதகமாக இல்லாத போது நடைபெறும் எந்த சுப நிகழ்வும் நடக்கும் பொழுது மகிழ்வாகவும் நடந்து முடிந்த பிறகு அனுபவிக்கும் வேதனை காலத்திற்கும் தீராத மன வேதனையையும் தரும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் திருமணத்தை நடத்துங்கள். மிகக் குறிப்பாக காதலர்கள் இந்த 1 1 /2 வருடம் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை நரகமாக்கி கொள்ளாமல் இருப்பது சிறப்பு.
பெண்கள்
கற்பனை சக்தி,சாத்வீக குணம்,எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும்.தாய்வழி ஆதரவும், சீதனமும் கிடைக்கும். போதிய தன வரவால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். கடன் தொல்லை குறையும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி உறவில் அன்பு மிளிரும்உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்க வேண்டும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சகோதர வகையில் நல்லது நடக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். சம்பள பாக்கிகள் வந்து சேரும்.
வியாபாரிகள்
பேராசையையில் மிகக் குறுகிய காலத்தில் பெரிய தொகை சம்பாதிக்க ஆசைப்பட்டு அது விபரீத விளைவை தரும்.அதிக முதலீடு, புதிய தொழில் ஒப்பந்தங்களை தவிர்க்க வேண்டும்.அதிக கடன் வாங்கக்கூடாது.நம்பிக்கை இல்லாத புதிய நபர்களிடம் வியாபாரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
உத்தியோகஸ்தர்கள்
திடீர் புகழ் வரும், புகழுக்கு திடீர் பங்கம் வரும்.உங்களுக்கு கிடைக்க வேண்டிய மாரியாதை பிறருக்கு கிடைப்பது, வதந்திகளால் அவமானம் போன்ற மன சஞ்சலம் இருக்கும். கோட்சார கிரகங்கள் சாதகமாக இல்லாத காலத்தில் மனிதனுக்கு பொறுமையும் தன்னம்பிக்கையும் மிக அவசியம்.இடமாற்றம் இருந்தாலும் பதவி உயர்வும்,ஊதிய உயர்வும் கிடைக்காது.மேலதிகாரியின் தொல்லை அதிகரிக்கும். தனியார் துறையில் இருப்பவர்கள் குடும்ப நலன் கருதி வேலையில் பொறுப்போடு இருப்பது நல்லது.
அரசியல்வாதிகள்
சமயோஜிதமாக செயல்பட வேண்டிய காலம்.ராகு கேது, சனியின் சஞ்சாரம் சாதகமில்லை. குருவின் சஞ்சாரம் சற்று சாதகமாக உள்ளது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் அறிவாற்றலால், செயல்திறனால் தெரிந்து கொண்டு தேவையானதை அடைய வேண்டும்.உங்கள் மனதை தேவையற்ற வழியில் திசை திருப்பாமல் காரியத்தின் மீதும் உயர்வின் மீதும் முழு கவனத்துடன் இருக்க வேண்டும். தடைபட்ட வேலைகள் முடியும். அரசாள்பவர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களை நம்பி கட்சி ரகசியங்களை வெளியில் பேசக்கூடாது.
பரிகாரம்
வெற்றிலை, பாக்குடன் மஞ்சள் நிற மைசூர்பாகு, ஜாங்கிரி வைத்து வியாழக்கிழமை இஷ்ட குலதெய்வம், குரு, தட்சிணாமூர்த்தி, மகான் சித்தர் ரிஷிகள் ஜீவசமாதியை வழிப்பட்டால் கர்மவினை சாபம் நீங்கி நன்மை உண்டாகும்.






