என் மலர்tooltip icon

    மீனம்

    2025 தமிழ் புத்தாண்டு ராசிபலன்

    விருப்பங்கள் நிறைவேறும்

    குரு கடாட்சம் நிறைந்த மீன ராசியினரே,

    பிறக்கப் போகும் விசுவாசு தமிழ் புத்தாண்டில் மனச்சங்கடம் நீங்கி முயற்சிகள், எண்ணங்கள் பலிதமாகும் ஆண்டாக அமைய நல்வாழ்த்துக்கள். உங்கள் ராசிக்கு லாபாதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் ராசிக்குள் நுழைந்து ஜென்மச் சனியாக பலன் தரப் போகிறார். ஏழரைச் சனியின் 2ம் பாகம். ராசியில் நிற்கும் சனியின் 3ம் பார்வை சகாய ஸ்தானத்திலும் ஏழாம் பார்வை களத்திர ஸ்தானத்திலும் பத்தாம் பார்வை தொழில் ஸ்தானத்திலும் பதிகிறது.

    14.5.2025 முதல் சுகஸ்தானத்திற்கு செல்லும் குரு பகவான் தனது 5ம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தையும் ஒன்பதாம் பார்வையால் 12ம்மிடமான விரய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

    18.5.2025 முதல் ராகு பகவான் விரய ஸ்தானத்திலும், கேது பகவான் 6ம்மிடமான ருண, ரோக . ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். வருட கிரகங்களின் பெயர்ச்சியால் தமிழ் புத்தாண்டில் நடக்கப் போகும் பலன்களைப் பார்க்கலாம்.

    விசுவாசு ஆண்டின் பொதுவான பலன்கள்

    சுக ஸ்தான குரு பகவான் விரும்பிய சுகங்களை வாரி வழங்குவார். கெட்டவன், கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற பழமொழிக்கு ஏற்ப கெட்டவர்களான ராகு,கேதுவும் 6,12 ல் மறைவது மிகச் சாதகமாக அமைப்பு தான். ஆனால் இது ஜென்மச் சனியின் காலம் என்பதை மறந்து விடக் கூடாது.

    மீனம் உபய ராசி என்பதால் நிலையற்ற தன்மை இருக்கும். ஜனன கால ஜாதகத்தில் உபய ராசிகளில் அதிக கிரகம் இருந்தால் ஏற்ற இறக்கம் மிகுதியாக இருக்கும். ஜனன கால ஜாதகத்தில் 8ம் பாவக இயக்கம் சுபத் தன்மையுடன் இருந்தால் வெளியூர், வெளி மாநிலம், வெளி நாட்டிற்கு இடம் பெயர நேரும்.

    உங்களுக்கு ஆப்பு வைக்க எதிரி வெளியில் இருந்து வரத் தேவை இல்லை. உங்களின் சிந்தனை குறைவான செயல்பாடே உங்களுக்கு எதிரியாகும். எந்த ஒரு பிரச்சனையும் தானாக வருவதில்லை அவரவே ஏற்படுத்திக் கொண்டு விதி மேல் பழி போடுவார்கள்.

    எந்த பிரச்சினையும் சமாளிக்கும் பக்குவத்தை இறைவன் வழங்கியுள்ளான் என்பதை மறந்து விடுகிறார்கள். விடாமுயற்சியுடன் துணிந்து இறங்கினால் வெற்றி நிச்சயம்.

    தினசரி வெற்றிக்கு உங்கள் மனநிலையை மாற்றம் செய்ய வேண்டும். சிந்தனைகளை மாற்றினால், உங்கள் செயல்களும் மாறும். தோல்வியை ஒரு பாடமாக எடுத்து செயல்பட்டால் வெற்றி விகிதம் அதிகமாகும்.தோல்வி என்பது முடிவு அல்ல வெற்றிக்கான படிக்கட்டாகும்.வெற்றியாளர்கள் அனைவரின் தோல்வியிலும் ஒரு பெரிய பிளாஸ் பேக் இருக்கும்.

    ஒவ்வொரு தோல்வியும் எந்த வழியில் செல்லக்கூடாது என்ற அனுபவ பாடத்தை கற்றுக் கொடுக்கும்.பல தடைகளை சந்தித்தவர்கள் மீண்டும் எழுந்துவந்திருக்கிறார்கள். தோல்வியை நேர்மறையாக மாற்றுங்கள். ஒவ்வொரு நாள் அனுபவத்திலும் எதைக் கற்றுக்கொள்ள முடியும் என்று சிந்தியுங்கள். மீண்டும் மீண்டும். முயற்சித்தால் நீங்கள் நினைப்பது போலவே உங்கள் வாழ்க்கை அமையும்.

    பொருளாதாரம்

    பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மாற்றங்களும் ஏற்றங்களும் வீடு தேடி வரும்.சமுதாய அங்கீகாரம் கூடும். பொருளாதார நிலையில் இதுவரை கண்டிராத அளவிற்கு மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். உங்களின் தொழில், குடும்ப சொத்து, வராகடன் வசூல் என பல்வேறு வழிகளில் பணம் வந்து குவியும்.பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த கருத்து வேறுபாடு மறையும்.

    உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு. அதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்த முடியும். குடும்பத்திலிருந்த பல விதமான குறைபாடுகள் சீரடையும்.

    பூரட்டாதி 4

    புகழ், அந்தஸ்தை நிலை நிறுத்தவும் முயற்சியில் வெற்றியடையவும்கடின உழைப்பு அவசியம். விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகமாகும்.தடை பட்ட செயல்கள் வெகு விரைவில் செயலாக்கம் பெறும். உங்களின் செயல்பாடுகள் வியக்க தக்க வகையில் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பல்வேறு அனுகூலமான பலன்கள் நடைபெறும். உங்களுடைய தகுதி, திறமை உயரும்.

    குல தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும். பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் முடியும் ஆனால் முடியாது. முடிந்த விட்டது என்று நினைத்த பிரச்சனை மீண்டும் தலை தூக்கும். உங்களின் சகோதர , சகோதரி வழியில் சொத்து தொடர்பான வில்லங்கம் ஏற்பட்டு மன உளைச்சல் அதிகமாகும்.

    உங்களின் 6ம் அதிபதி சூரியன் என்பதால் உங்களின் பிடிவாதமே பிரச்சனையை வளர்க்கும்.உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு அடிக்கடி மருத்துவச் செலவு உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி அனுசரித்து சென்றால் நிம்மதி கூடும்.

    உத்திரட்டாதி

    விரயத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய வருடம். வெளிநாட்டுப் பயணத்தில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். தேவைக்கேற்ற வருமானம் இருந்தாலும் வரவிற்கு மீறிய செலவும் இருக்கும். சுப விரயங்கள் அதிகரிக்கும்.சொத்து வாங்கும் முயற்சி சித்திக்கும். சிலருக்கு வீடு, வாகனத்தை பராமரிக்கும் செலவு அதிகரிக்கும்.

    எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த பெற்றோர்கள் மீண்டும் சேருவார்கள்.தேவை இல்லாத சுயகடனில் சிக்க வைக்கும் என்பதால் தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்க கூடாது. யாருக்கும் எந்த ஜாமீனும் போடக் கூடாது. அக்கவுன்டில் பணம் இல்லாமல் செக் கொடுக்க கூடாது.

    பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு மீண்டும் சொந்த ஊர் செல்லும் எண்ணம் உதயமாகும். ஆரோக்கியக் குறைபாடு அகலும். அறுவை சிகச்சை செய்ய வேண்டிய நிலை மாறி சாதாரண வைத்தியத்தில் குணமாகும்.

    ரேவதி

    உங்களுக்கு என்று தனி கொள்கை வைத்து அதன் அடிப்படையில் செயல் படுவீர்கள். சட்ட திட்டத்திற்கு இணங்கி நடப்பீர்கள். உங்களின் தோற்றம், செயல்பாடு ஆகிய வற்றில் மாற்றம் ஏற்படும். நடை, உடை, பாவனைகளில் கம்பீரம் ஏற்படும். மிடுக்கான தோற்றம் ஏற்படும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

    சுப காரியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிலர் பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். வெளிநாட்டு வேலை மற்றும் பயணம் திட்டமிட்டபடி நடக்கும். சிலருக்கு செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும்.முன்னோர்கள் சொத்து விற்பனை பணம், வர வேண்டிய பணம், பாலிசி முதிர்வு என்று அவரவர் வயதிற்கும் தகுதிக்கும் திசா புத்திக்கும் ஏற்ப நல்ல கணிசமான தொகை கிடைக்கும்.

    கவுரவப் பதவிகள் தேடி வரும். எல்லோருக்கும் எல்லா நேரமும் எப்பொழுதும் சாதகமாக அமையாது. ஏற்றமும் இறக்கமும் நிறைந்தது தான் வாழ்க்கை. எதையும் தைரியமாக எதிர் கொள்ளுங்கள். இந்த தமிழ் புத்தாண்டு நிச்சயம் உங்களுக்கு சாதகமாகும்.

    திருமணம்

    18.5.2025 வரை ராசியில் ராகுவும் 7ல் கேதுவும் நிற்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் தாக்கம் இருக்கும்.மேலும் இது ஜென்மச் சனியின் காலம். 7ம் மிடமான களத்திர ஸ்தானத்தை சனிபகவான் பார்க்கிறார். சனி தான் பார்த்த வீட்டின் வேலையை தாமதப்படுத்தி வழங்குவார்.என்பதால் திருமண வாய்ப்புகள் இழுபறியாகும்.

    ஜாதகம் சரியாக இருந்தால் வரன் பிடிக்காது. வரன் ஒத்து வந்தால் ஜாதகம் பொருந்தவில்லை போன்ற சங்கடங்கள் நிகழும். சிலருக்கு காதல் கலப்பு திருமணம் நடக்கலாம். மறுமணத்திற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

    பெண்கள்

    வாழ்க்கைத் தரம் உயரும். எதையும் சமாளித்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அதிகமாகும்.தாய்வழிச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.சிலருக்கு சொத்துக்கள் அடமானம், விற்றல் மூலமும் பணம் கிடைக்கும்.

    சகோதர சச்சரவுகள் விலகும்.குடும்ப உறுப்பினர்கள் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.தெய்வ அருளும், அனுகூலமும் உண்டாகும்.

    மாணவர்கள்

    4ல் குரு பகவான் உள்ளதால் அரசு பொது தேர்வு எழுதும் மீன ராசி மாணவ, மாணவிகள் நல்ல மதிப்பெண் பெற கடுமையாக உழைப்பீர்கள். கடந்த ஒரு வருடமாக இரவும் பகலும் படித்த படிப்பு உங்களுக்கு கை கொடுக்கும். உங்கள் ராசி அதிபதி குரு என்பதால் உங்களின் முயற்சிக்கு ஏற்ற பலன் நிச்சயம் உண்டு.

    மாணவர்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லாரை கீரை தினமும் சாப்பிட வேண்டும். சில பிள்ளைகள் பள்ளி மாறலாம். சில மாணவர்கள் கல்விக்காக வெளியூருக்கு செல்லும் வாய்ப்பு அதிகம்.

    முதலீட்டாளர்கள், வியாபாரிகள்

    10ம் மிடமான தொழில் ஸ்தானத்தை சனி, குரு பார்ப்பது ஏற்ற இறக்கமான பலனைத் தரும். சில நேரங்களில் மிக மந்தமாகவே இருக்கும். அரசு சம்பந்த பட்ட விசயங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. புதிய தொழில் முயற்றிக்கு ஏற்ற காலம் அல்ல. மூத்த சகோதர வழியில் சில பொருள் இழப்புகள் ஏற்படும். 6ல் கேது இருப்பதால் சட்டம் பேசியே வரும் வாய்ப்பை இழப்பீர்கள்.

    நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளுடன் பண விஷயத்தில் கவனம் தேவை. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் வியாபாரிகள் உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்.

    உத்தியோகஸ்தர்கள்

    அக்கறையுடன் பய உணர்வுடன் நாட்களை நகர்த்தினால் 4ல் உள்ள குரு உங்களை கைவிட மாட்டார். கவலை பட வேண்டாம். சொந்த தொழில் இருப்பவர்களுக்கு உத்தியோகத்திற்கு போக என்ற எண்ணமும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேறு வேலை மாற்றம் செய்ய வேண்டாம்.

    புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலை மாற்றம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். நிர்பந்தத்திற்காக ஊர் மாற்றம், இடமாற்றம் செய்ய நேரும். கணவன், மனைவி தொழில் உத்தியோக நிமித்தமாக ஆளுக்கொரு ஊரில் பணிபுரிய நேரும்.

    அரசியல்வாதிகள்

    10ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 10ம் வீட்டை, குரு, சனி பார்ப்பதால் பதவி ஞானம் கூடும். ஒரு பதவி கிடைத்தால் அதை எப்படி தக்க வைத்து கொள்ள வேண்டும். கிடை பதவி யை எப்படி பொக்கி ஷம் போல் காக்க வேண்டும் என்பது அனுபவ ரீதியாக புரியும்.

    இது ஜென் மச் சனியின் காலம் எந்தச் செயலையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட வேண்டும்.

    பரிகாரம்

    சனிக்கிழமை அசைவ உணவை தவிர்த்து திரு வண்ணாமலைக்கு கிரிவலம் சென்று வர வேண்டும். சனிக்கிழமை பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு, கண் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு தேவையான மருத்துவ உணவு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

    ×