என் மலர்
மீனம்
2025 மார்கழி மாத ராசிபலன்
மீன ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, பஞ்சம ஸ்தானத்தில் உச்சம்பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். ஆனால் மாதத் தொடக்கத்திலேயே 6-ம் நாள் வக்ரமாகி 4-ம் இடத்திற்கு செல்கிறார். இதன் மூலம் அவர், அர்த்தாஷ்டம குருவாக மாறுகிறார். எனவே விழிப்புணர்ச்சியோடு இருந்தாலும் விரயங்கள் கூடும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளால் மனக்கலக்கம் ஏற்படும். ஏழரைச் சனியில், விரயச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் எதையும் ஒருமுறைக்குப் பல முறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை பலனால் மாற்றங்கள் ஏற்படும் என்றாலும் கூட, 4-ம் இடத்தில் குரு இருப்பது அவ்வளவு நல்லதல்ல. பணநெருக்கடி ஏற்படலாம். ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. ஆரோக்கியத் தொல்லையால் கவலைப்பட நேரிடலாம். பணிபுரியும் இடத்தில் பதற்றமும், மனக்குழப்பமும் உருவாகும்.
'தொழில் மாற்றம் செய்யலாமா? அல்லது நடக்கும் தொழிலையே தொடரலாமா?' என்ற சிந்தனை அதிகரிக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண்பழிக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் பழைய பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வாகனத்தால் தொல்லைகளும், வளர்ச்சியில் குறுக்கீடுகளும் வந்து கொண்டேயிருக்கும். எனவே இதுபோன்ற நேரங்களில் சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை தேர்ந்தெடுத்து வழிபடுவது நல்லது.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். பணியாளர் தொல்லைகளும், திடீர், திடீரென விரயங்களும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவர். வேலைப்பளு கூடும். சகப் பணியாளர்களால் பிரச்சினைகள் உருவாகும். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் இக்காலத்தில் அவசியம் தேவை.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வலிமையடையும் இந்த நேரம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினை நீங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் தடை அகலும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள், முன்பின் தெரியாதவர்களை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் உறுதியாகலாம். கலைஞர்களுக்கு புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் மிகுந்த கவனம் தேவை. பெண்களுக்கு விரயங்கள் கூடும். வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 16, 19, 23, 24, 29, 30, ஜனவரி: 3, 4, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.






