என் மலர்
மீனம்
2024 கார்த்திகை மாத ராசிபலன்
எதிலும் முக்கியத்துவம் பெற்று விளங்கும் மீன ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சனி வக்ர நிவர்த்தியாகி பலம் பெற்று விரயச் சனியாக சஞ்சரிக்கிறார். எனவே இம்மாதம் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.
திடீர் விரயங்கள் அதிகரிக்கும். உற்றார் - உறவினர்களின் பகை உருவாகும். ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை கிடைப்பதுபோல் வந்து, கை நழுவிச் செல்லலாம். அதிக நிதானத்தோடு செயல்பட வேண்டிய மாதம் இது. பல காரியங்கள் அரைகுறையாக நிற்கலாம். வழிபாட்டின் மூலமே வளர்ச்சி ஏற்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
குரு வக்ரம்
ரிஷப ராசியில் உள்ள குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான குரு பகவான் வக்ரம் பெறுவதால், முதலில் ஆரோக்கிய தொல்லை அதிகரிக்கும். பண நெருக்கடி ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும்.
'யாரை நம்பியும் செயல்பட முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உதவுவதாக சொல்லி கடைசி நேரத்தில் கையை விரிப்பார்கள். 'கடன் சுமை கூடிக்கொண்டே செல்கிறதே' என்று கவலைப்படுவீர்கள்.
சனி - செவ்வாய் பார்வை
கடகத்தில் உள்ள செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். இந்த முரண் பாடான கிரகங்களின் பார்வை அவ்வளவு நல்லதல்ல. எதிர்ப்பார்ப்புகள் எதுவும் நடைபெறாமல் போகலாம். இல்லத்தில் வீண் விரயங்கள் அதிகரிக்கும்.
பிள்ளைகளாலும் தொல்லை, பிறராலும் தொல்லை என்ற நிலை உருவாகும். உள்ளத்தில் மகிழ்ச்சி குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விலகும் நிலை உருவாகலாம். உறவினர்களின் பகை அதிகரிக்கும். இக்காலத்தில் தன்னம்பிக்கையும், தெய்வ வழிபாடும் கைகொடுக்கும்.
மகர - சுக்ரன்
கார்த்திகை 18-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வரும் சுக்ரனால் நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. இருப்பினும் உங்கள் ராசிநாதன் குருவுக்கு, சுக்ரன் பகை கிரகம் என்பதால், சில காரியங்களில் தடைகளையும், தாமதத்தையும் சந்திக்க நேரிடும். வாங்கிய இடத்தை விற்க முன் வருவீர்கள். வாகனத்தால் தொல்லை உண்டு. கடன் சுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் அக்கறை தேவை.
செவ்வாய் வக்ரம்
கடக ராசியில் உள்ள செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் அடைகிறார். கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலம் இது. பண நெருக்கடி அதிகரிக்கும். ஓய்வின்றி உழைத்தாலும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காது. 'பெற்றோரின் ஆதரவு மற்ற சகோதரர் களுக்கு கிடைக்கும் அளவு நமக்கு கிடைக்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் நினைக்க இயலாத விதத்தில் மாற்றங்கள் ஏற்படும். மனக்குழப்பமும், தன்னம்பிக்கை குறைவும் உண்டாகும் நேரம் இது. எனவே நிதானமாக செயல்படுங்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதையும் துணிந்து செய்ய இயலாது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு உழைப்புகேற்ற பலன் கிடைக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். கலைஞர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. பெண்கள் அனைவரும், அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய மாதமிது. ஆதாயத்தை காட்டிலும் விரயங்கள் கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 19, 20, 30, டிசம்பர்: 1, 2, 6, 7, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.






