என் மலர்tooltip icon

    துலாம்

    2025 தமிழ் புத்தாண்டு ராசிபலன்

    அனுகூலமான வருடம்

    சுக்ர கடாட்சம் மிகுந்த துலாம் ராசியினரே!

    நியாயம், தர்மம் மீது அதீத நம்பிக்கை கொண்ட உங்களுக்கு பிறக்கப் போகும் விசுவாவசு ஆண்டு ஆரவாரமான ஆண்டாக அமைய நல்வாழ்த்துகள். இந்த தமிழ் புத்தாண்டு துவங்கும் போது துலாம் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான சனி பகவான் 6ம் மிடமான உபஜெய ஸ்தானத்திற்கு செல்கிறார்.

    தனது மூன்றாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 12ம் மிடமான விரைய ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால் 3ம் மிடமான சகாய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

    14 5.2025 முதல் பாக்கிய ஸ்தானத்திற்கு செல்லும் குரு பகவான் தனது 5ம் பார்வையால் ராசியையும் 7ம் பார்வையால் 3ம் மிடமான சகாய ஸ்தானத்தையும் 9ம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்க்கப் போகிறார்.

    கேது பகவான் 11ஆம்மிடமான லாப ஸ்தானத்திற்கும் ராகுபகவான் 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் செல்கிறார்கள். இதனால் உண்டாகப் போகும் பலன்களை பார்க்கலாம்.

    விசுவாவசு ஆண்டின் பொதுவான பலன்கள்

    அனைத்து கோட்சார கிர கங்களின் சஞ்சாரம் துலாம் ராசிக்கு மிகச் சாதகமாக உள்ளது. தெளிவான சிந்தனை உண்டாகும். முக்கிய பணிகளை இந்த ஓராண்டுக்குள் விரைந்து முடிப்பது நல்லது. பண பிரச்சனை நீங்கும். வியாபாரத்தில் தோன்றிய எதிர்ப்புகளை வேரோடு பிடுங்கி எறிவீர்கள். புதிய வீடு, நில புலன்கள், வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.

    சந்திரனைப் போல் வளர்வதும் தேய்வதுமாக இருந்த வாழ்க்கை முறை மாறி நிலையானதாகும். நான்காம் அதிபதி சனி 6ம்மிடம் செல்வதால் நிலம் வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடக்கும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும்.

    உங்கள் பாக்கிய ஸ்தானமான 9ம் இடத்தில் நிற்கும் குருவால் தந்தையின் ஆரோக்கியம் சீராகும். தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடு குறையும். பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டில் காரிய சித்தி கிடைக்கும்.

    பல தலைமுறையாக பித்ரு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னோர் வழிபாடு, ஹோமம் செய்ய ஏற்ற காலம். குல, இஷ்ட, உபாசனை தெய்வ வழிபாடு பலிதமாகும் காலம். பூர்வீகச் சொத்துக்களை பிரிப்பதில் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் இப்பொழுது சரியாகிவிடும். பணம் கொடுக்கல் வாங்கலில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்.

    வாங்கிய நபர் வார்த்தை மாறிப் பேசலாம். உங்கள் உதவியைப் பெற்றவர்கள் உங்களுக்கு எதிராக மாறலாம். எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகமாகும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். நம்பிக்கை இல்லாத புதிய நபர்களிடம் புதிய தொழில் ஒப்பந்தம், பணப்பரிவர்த்தனை செய்வதை தவிர்க்கவும். பிள்ளைகளை நேரடி கண்காணிப்பில் வைத்துக் கொள்ளவும்.

    உங்களைப் கெடுக்க நினைத்த எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். பிரிந்து போன உறவுகளை இணைக்க பெரும் முயற்சி எடுப்பீர்கள்.வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தி அவமானத்தை துடைப்பீர்கள். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.

    சில தம்பதிகள் வெளியூர், வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லலாம்.பொருளாதார நிலை நன்றாக இருக்கும். எதிரிகள் தொந்தரவு நீங்கும். செய்யாத குற்றத்திற்காக அனுபவித்த தண்டனையிலிருந்து விடுபடுவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவார்கள். காணாமல் போனவர்கள் வீடு திரும்புவார்கள்.

    பொருளாதாரம்

    பண பர ஸ்தானங்களான 5,11ம்மிடத்திற்கு வரும் ராகு, கேதுக்கள் அதிர்ஷ்டம், தொழில் மூலம் பணவரவு, லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வராக்கடன்கள் வசூலாகும்.கடன் சுமை குறையும். துலாம் ராசியினர் வாழ்க்கையில் செட்டிலாகும் காலம். உங்கள் முன்னேற்றம் கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

    சித்திரை 3, 4

    சத்ரு ஜெயம் உண்டாகும். எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வரவேண்டும் என பெரியவர்கள் கூறுவார்கள் அந்த நேரம் இப்பொழுது சித்திரை நட்சத்திரத்திற்கு வந்து விட்டது.எத்தனை இடையூறுகள் வந்தாலும் சமாளிக்கும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு.

    நினைவாற்றல் மேம்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.பிள்ளைகளின் திருமணம், எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். குறுக்கு வழியில் சம்பாதிக்கும் ஆசை உண்டாகும். சிலருக்கு புதியதாக காதல் அரும்பும். வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவார்கள்.

    சுவாதி

    ஆன்ம பலம் பெருகும்.ஆன்மா ஆன்மீகத்துடன் லயிப்பதால் உடல் தேஜஸ் பெரும் . சொல்லாலும் செயலாலும் ஒன்றாக இருக்க முடியும். பல ஆண்டு கனவு நனவாகும். காசோலை, பண மோசடி வழக்கு, விவாகரத்து வழக்கு தள்ளுபடியாகும். சட்டம் தொடர்பான பிரச்சனைக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் அல்லது வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும். காசோலை தொடர்பான வழக்குகள் ஒத்திப்போகும்.

    கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு குறையும். பணவரவு திருப்தி தரும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வாங்கி மகிழ்வீர்கள் வாடகை வீட்டு தொல்லை அகலும். கடன் பெற்றாவது சொந்த வீடு, வாகன யோகத்தை அடைவீர்கள். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகழ்வீர்கள்.

    விசாகம் 1, 2, 3

    சுப விரயம் ஏற்படும்.எந்தப் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரிந்து அதன்படி செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு சிறு நோய் தாக்கம் உண்டாகலாம்.

    பூர்வீகச் சொத்து தொடர்பாக பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் மூலம் சிறு மன உளைச்சல் உண்டாகும். அடமானத்திலிருக்கும் நகைகள், சொத்துக்கள் மீண்டு வரும். பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து வர வேண்டிய சீதனங்கள் கிடைக்கும்.சிலரின் தந்தை தொழிலுக்காக தூர தேசம் செல்லலாம்.

    திருமணம்

    துலாம் ராசிக்கு திருமணத்திற்கு குருபலம் மிகச் சாதகமாக உள்ளது. ராகு/கேது பெயர்ச்சிக்குப் பிறகு 5ம்மிடத்திற்கு ராகு வருவதால் காதல் திருமணத்திற்கு அதிக .வாய்ப்பு உள்ளது. சனியின் 3ம் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால் சில பெண்களுக்கு கோட்சார ரீதியான மாங்கல்ய தோஷத்தால் திருமண முயற்சியில் மனச் சோர்வு ஏற்படும். 11ல் கேது வருவதால் மறுதிருமணம் நடக்கும்.

    பெண்கள்

    அதிர்ஷ்டம் பங்குச் சந்தை லாபம், உயில் சொத்து வந்து சேரும். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். எல்லாரையும் மகிழ்விக்கக் கூடிய செயல்கள் செய்து குடும்பத்தில் நிம்மதியை அதிகரிப்பீர்கள். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். பெண்கள் யாருக்கும் நகைகளை இரவல் கொடுக்க கூடாது.

    உடலில் ஒருவிதமான சோர்வு மூலம் சுறுசுறுப்பின்மை உண்டாகும். முறையான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகா வுடன் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனையும் உங்களை நோயிலிருந்து பாதுகாக்கும். பெண்களுக்கு ஆடம்பரச் செலவால் பணவிரயம் ஏற்படும்.

    மாணவர்கள்

    ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் சுமாராக படித்தவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள்.மாணவர்கள் காலத்தின் அருமை உணர்ந்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று படிப்பில் கவனம் செலுத்த வெற்றி கரம் கொடுக்கும்.

    நீங்கள் விரும்பிய கல்லூரியில் மேல் படிப்பு படிக்க அட்மிஷன் கிடைக்கும் 5ம் மிடத்திற்கு ராகு வருவதால் மனக் கட்டுப்பாடு மிக அவசியம். மாண வர்கள் பல அறிய புதிய விசயங்களை கண்டுபிடிப்பார்கள். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.

    முதலீட்டாளர்கள், வியாபாரிகள்

    எதையும் வரும் முன் அறிந்து செயல்படுவீர்கள். தொழில் தொடர்பான ஆலோசனை வழங்குவதில் மதி மந்திரியாக திகழ்வீர்கள். ராகு,கேதுக்களால் வியாபாரங்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். எதிர்பாராத தன லாபம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.புதிய தொழில் துவங்க ஏற்ற காலம்.

    புதிய தொழில் முனைவோர்கள் கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வார்கள். வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். தொழிலுக்குத் தேவையான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய தொழிலுக்குத் தேவையான உதவிகளை வங்கியில் இருந்து பெறுவீர்கள்.சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள்.

    உத்தியோகஸ்தர்கள்

    பகல் இரவு பாராமல் உழைத்து அனைத்து வசதி களையும் தேடிக் கொள்வீர்கள். திறமைக்கேற்ற புகழும், கவுரவமும் கட்டாயம் கிடைக்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். சிலருக்கு அரசு பணியில் அமர்கின்ற வாய்ப்பு உண்டாகும். சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும்.

    வேலையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணி யில் சேரும் வாய்ப்பு உள்ளது. மேல திகாரிகள், சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் நிர்வாகத்திற்கு முறையாகத் தெரியப்படுத்துங்கள். அலட்சியமாக இருந்து வேலையை இழந்து விடாதீர்கள்.

    அரசியல்வாதிகள்

    ஒருவரின் வெற்றியை நிர்ணயிக்க கூடிய உப ஜெய ஸ்தானமான 6ம் மிடத்திற்கு சனி பகவான் வருவது வெற்றியை உறுதி செய்யும் அமைப்பாகும். ஆனால் 5ம்மிடமான பதவி ஸ்தானத்திற்குள் வரும் ராகுவின் பலன்கள் மதில் மேல் பூனை. எதிர்பார்த்த நேரத்தில் ஏமாற்றத்தையும், எதிர்பாராத நேரத்தில் வெற்றியையும் தருவார் என்பதால் நிதானம் முக்கியம்.

    கட்சி மேலிடத்தில் மற்றும் பொது மக்களிடம் சகிப்புத் தன்மையுடன் பழக வேண்டும். எதிர்க் கட்சியினருக்கு சாதகமான காலம். பதவியை தக்க வைக்க ஊர் ஊராக அலைந்து விரயம் அதிகமாகும். சிலர் விரயம் என்றால் பொருள் விரயம் என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். கவுரவம் குறைந்தாலும் விரையம் தான்.

    பரிகாரம்

    அன்னதானத்திற்கு உதவி செய்யலாம். சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.

    ×